Friday, August 05, 2005

அம்பலம் கவிதைகள் 12-9-1999

இதயத்தில் வெடித்த வெடி.

காற்றைப் பார்க்கும் யுக்தியாய் அதற்குக்
கறுப்பு வர்ணம் அடித்தார் மனிதர்.

தேநீர்க்கடைக்காரர் கருணை உள்ளவர்
இல்லையென்றால் தண்ணீர்த் தொட்டியில்
புழுக்களுக்கும் இடம்தரு வாரா?

அறுந்த வாலைத் தனியே விட்டு
அகன்று விடுகிற பல்லியைப் போலே
அமைதியின் சிதிலம் துடிக்கத் துடிக்க
அருமை மக்கள் ஓடிப் போகிறார்.

சூரியக் கரண்டி வறுத்து வறுத்துத்
தீய்ந்து போன கத்திரிக் காய்போல்
ஏழைச் சிறுவன் எதிரே வருகிறான்.

வயிற்றிலே பசி! விழியிலோ நிசி!
மெல்ல நடந்தான். மெதுவாய் விழித்தான்.
கண்களுக் கெதிரே உணவு தெரிந்தது.
அதனை நோக்கி அவன் நகர்கையிலே......

சே! டிபன் பாக்சிலா குண்டு வைப்பது?

--------------------------------------------------------------------------------

சிறகுகள் நமக்குச் சுமையல்ல

கல்மீதில் இடித்தவரைக் கேட்டோம் என்றால்
கல்இடித்து விட்டதாகக் குற்றம் சொல்வார்!
சொல்லின்றித் தனக்குத்தான் சரியில்லாதார்
சூழ்நிலைமேல் குற்றத்தைச் சுமத்துவார்கள்!

அயர்ச்சியுளார், முயற்சியிலார், முதிர்ச்சி இல்லார்
அறிவதனைப் பயன்படுத்தும் பயிற்சி இல்லார்
தயக்கமுளார் மயக்கமுளார் எதிர்த்து நிற்கும்
சக்தியிலார் எந்நாளும் வீழ்ச்சி கொள்வார்!

திரட்சியுற வறட்சியற புரட்சி செய்வோம்!
திசையெங்கும் தீவளர்க்கப் புயல்வளர்ப்போம்!
மரணபுரம் தனைவென்று வரலா றாவோம்!
வளர்சிறகால் விரிவானை வளைத்துக் கொள்வோம்!

துயர்உடைய உயர்வடைய நாளும் இங்கே
தொகைதொகையாய் நம்பிக்கைப் பயிர் வளர்ப்போம்!
ஜெயமென்று ஜெயமென்று உளம் களிப்போம்!
சிறகிங்கு சுமையல்ல வரம் நமக்கு!

--------------------------------------------------------------------------------

திருமகள் நீ!

விழிச்சிறகுகள் அடித்திடுகையில் மனம் பறக்குதடி-உன்றன்
மொழி மரகதம் ஒளிவிடுகையில் மழை விறைக்குதடி.

மருத்துவமனை எனக்கெதற்கடி அருகினிலேநீ - உன்றன்
கருத்துருவினை வளர்க்கிறவனை வளர்த்திடவாநீ.

இசைத்தறிகளில் தினம்புடைவைகள் உனக்கென நெய்வேன் - அதிலே
விசைக்கவிகளை விதிவிதநிற அடுக்கினில் பெய்வேன்.

நினைவெனும் குளம் நிதம் கலங்குது எறிகிறவள்நீ-என்றன்
புனைவினில்உன் பொறிபறக்குது எரிகிறவன்நான்.

பரவெளிகளில் பறக்கிறஎனை இழுக்கிறமகளே-வண்ணச்
சமவெளிகளைப் பெருங்கடல்எனப் புதுக்கிடும் முகிலே.

தனிமைகளை எழுப்புகிற தனிப்பெருந் தலைவி-எங்கும்
இனிமைகளை நிரப்புகிற இமைக்கிற தமிழி.

வரம்தருபவள் மறம்தருபவள் ஒருதிருமகள்நீ - வெல்லும்
உரம்தருபவள் திறம்தருபவள் பெருங்கலைமகள்நீ.

உனக்கெதிரினில் அனைத்துவமையும் அடையுது தோல்வி-என்றன்
கணப்பொழுதுகள் அனைத்திலும்புதுக் கவிதையின் வேள்வி.

அலையடிக்குது அலையடிக்குது மனம்கரையலையா?
அனலடிக்குது அனலடிக்குது உளம் உருகலையா?

கனம்மிகுந்தஎன் கனவெனும் முகில் தரை இறங்கிடுமா?
கடல்நடுவுள மனப்படகது கரையினைத் தொடுமா?

--------------------------------------------------------------------------------

ஊரை ஊராக்குங்கள்

எல்லைகளின் பிள்ளைகளே! எழுங்கால வெள்ளிகளே!
ஏகாந்தக் கிள்ளைகளின் பாட்டு - செவி
ஏறுவதை நூறுவிதம் கேட்டு-மனம்
சொல்லுவதற் கில்லாத சொப்பனத்தில் மூழ்கிமிகச்
சொக்குவதை எப்படிநான் சொல்ல-இந்தச்
சூழலினை மீட்டுவிட்டீர் மெல்ல.

அந்திபகல்! மூடுபனி! குண்டுமழை! கண்ணிவெடி!
அத்தனையும் அத்தனையும் கடந்து-ஒவ்வோர்
அடியாக எடுத்துவைத்து நடந்து-இதோ
இந்தநிலம் சொந்தநிலம் இந்தியாவின் நந்தநிலம்
என்றுரைத்தீர் பீரங்கி வாயால் - அதை
எழுதி வைத்தீர் துப்பாக்கித் தீயால்.

வரிப்புலியே நன்கிதுபார்! வந்ததுபோல் போனதுபோர்!
வழியெங்கும் இடிந்தபடி வீடு - முதுலில்
மனைதிருத்தலே நமது பாடு - ஊரைச்
சரிசெய்வாய் இனிமேலும் சமரற்ற படிசெய்வாய்.
காஷ்மீரம் ஆனந்தக் கிண்ணம் - இணைந்த
கைகளில்தான் அமைதி மின்னும்.

மலர்களினால் கவசங்கள்! மனிதர்களால் பாலங்கள்!
கவிதைகளால் வாழ்த்துகள் சொல்லி-இன்பக்
கானங்களால் அவரை அள்ளி - எனப்
புலர்கிறது விழிக்குள்ளே! புலம்பிடுது விழிவெளியே!
பூபாளம் முப்போதும் சமைப்போம் - நகும்
புல்லாங் குழல்களாய் இமைப்போம்.

--------------------------------------------------------------------------------

கனவெட்டும் தூரம் வேண்டும்

உறக்கத்தை மீட்டு கின்ற
உலராத கனவே! நானும்
பறக்கின்றேன்! உலகம் என்னும்
பரப்பினை வளைத்து வானைத்
திறக்கின்றேன்! ஏகாந் தத்தில்
திளைக்கின்றேன்! என்னை மண்ணில்
இறங்கென்று சொல்கிறாயா?
இன்னும்போ என்கிறாயா?

பொழுதுகள்! நடனம்! பாட்டு!
புன்னகை! பூக்கள்! காதல்
மெழுகுகள்! அலைகள்! சேய்கள்!
மின்னிடும் விழிகள்! வேர்வை!
விழுந்தாலும் எழுதல்! காற்றின்
விளையாடல்! வெளியே ஊஞ்சல்!
எழுதாத கவிதை போலே
இவையெல்லாம் ஈர்க்குதேடா!

விண்ணெட்டும் மனிதக் கைகள்
விரியட்டும்! இன்னும் என்ன
பண்ணட்டும் என்று கேட்கும்
பரதெய்வம் வரட்டும்! எங்கும்
மின்னட்டும் மனித நேயம்!
மிளிரட்டும் ஞான பீடம்!
கண்ணெட்டும் தூரம் வேண்டாம்!
கனவெட்டும் தூரம் வேண்டும்!

நன்றி : அம்பலம் இணைய இதழ்

No comments: