Saturday, July 24, 2004

குழந்தையிடம் சிற்றாடு

பூகம்பத்துக்குப் பிந்தைய
ஆற்றைப்போல
உன்னைப் பார்த்த பிறகு
நான் திசைமாறிவிட்டேன்.

நீ சிரிக்கும்போது
மாலைநேர நிழல்போல
நீள்கிறது என் மகிழ்ச்சி.

நீ சினக்கையில்
உச்சிநேர நிழலாய்
பாதத்தின் கீழே
பதுங்குகிறது என் இன்பம்.

எந்தப் பக்கம் திரும்பினாலும்
மறிக்கிறது உன் நினைவு.

திராட்சைச் சாற்றின் போதையை
உன் விழித்திராட்சைகள் தருகின்றன.

சிறு குழந்தையிடம்
சிக்கிய ஆட்டுக் குட்டிக்குக்
கவலையில்லை.
எனக்கினி ஏது கவலை?

Friday, July 23, 2004

தலைகீழ் மாற்றம்

அவளை
ஒரு விளையாட்டுப் பெண்ணாகப்
பார்த்தேன்.
கடைசியில்
நானே அவளது
விளையாட்டுப் பொருளானேன்.

அவள் பேச்சை
மழலை எனச் சிரித்தேன்.
பிறகு
அவள் பாடுவதற்காக
நானே ஒரு பாடலாகி நின்றேன்

அவளுக்குச் சொல்ல
நிறைய அறிவுரைகள்
என்னிடம் இருந்தன.
இப்போது
என் விரல்பிடித்து
அவள் அழைத்துச் செல்வதையே
விரும்பி நிற்கிறேன்.

Thursday, July 22, 2004

ஒன்றுக்குள் ஒன்று

அவிழ்ந்து சுருள்விரிந்து
உன் இடைதழுவும் கூந்தல்
என் விரல்களின் நீட்சியென்று அறிவாயா?

உன் இமைகளுக்கிடையே
என் லப்டப் ஒசை
கேட்பது தெரிகிறதா?

நிறமிழந்த என் குருதியே
உன் திருவாய்க்குள்
ஊற்றெடுக்கிறது

செல்லச் சிணுங்கலுடன் சிரிக்கும்
உன் வளையல்களுக்கிடையே
என் நாக்கு
நர்த்தனமிடுகிறது.

செழித்திருக்கும் உன் இளமையை
என் கனவுகள்
காத்து நிற்கின்றன.

இறுக்கி அணைத்து
முனை படபடக்கும்
அந்தச் சேலை
என் தேகமேயன்றி வேறில்லை.

உன் உயிரின்
அத்தனை வாசலிலும்
யாழ்மீட்டி நிற்கிறது
என் ஆன்மா.

Wednesday, July 21, 2004

உன் இன்னிசை

காலம் விரைந்தோடுகிறது.
அந்த முத்தத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை.
அந்த மௌனத்தின் ஓசை
இன்னும் ஓயவில்லை.

நகரெங்கும் எதிரொலிக்கும்
தேவாலய - திருக்கோயில் மணியோசைபோல்
என் மனமெங்கும்
உன் பெயர் எதிரொலிக்கிறது.

மசூதியின் பாங்கோசை போல்
என் உள்ளத்தில் உன் பெயரால்
ஒரு நீண்ட ஆலாபனை
நிகழ்கிறது.

இடைவிடாது கதறும்
ஆலைச் சங்கொலிபோல்
உனக்காக என் உயிர்
கூக்குரல் இடுகிறது.

என் இதயத்திற்கு
இணையாக
விரைந்தோடுகிறது ரெயில்.

சிணுங்கும் இந்தத் தொலைபேசி
நான் மிக விரும்பும் பொருள்களில்
ஒன்றாகி விட்டது.

எல்லா ஓசைகளிலும்
உன் இன்னிசை
நிரம்பி வழிகிறது.

கண்ணே,
என் சுவாசம்
உன் வாசத்துக்காகக்
காத்திருக்கிறது.

Tuesday, July 20, 2004

சுடர்

வயிற்றிலொரு கடிகாரம் மணியடிக்க
வாய்க்குளத்தில் நீரற்று நாமீன் துள்ள
துயிலுடுக்க விழியிரண்டும் துடிக்க, காரத்
துயருடுத்தி இமையிரண்டும் தடிக்க, கொண்ட
இயல்பனைத்தும் தலைகீழாய் எகிற, மொத்த
இயக்கமொரு சுழலுக்குள் அமிழ, ஆஹா
உயிர்வெளிச்சம் மின்மினிபோல் மின்ன என்முன்
உருப்பெருக்கும் பசிச்சுடர்மம் விண்ணிடிக்கும்.

Monday, July 19, 2004

சாலையைக் கடக்கிறார்கள்

என் அம்மா ரொம்ப அழகு
ஒளிபடைத்த கண் அவளுக்கு.
யோகாசனம் செய்வதுபோல
சோம்பல் முறிக்கிறபோது
சடசடவென நெட்டி முறியும்.

நாடோடியாக இருந்தாலும்
நாகரிகம் தெரிந்தவள்.
அமைதியானவள் தான்.
ஆனால், வீரத்திலும் தன்மானத்திலும்
நிகரற்றவள்.
வீண்வம்பு செய்வோரிடம்
பெரிய போராளியாகவே மாறிவிடுவாள்.

நாங்கள் ஆறு குழந்தைகளும்
ஒரே நேரத்தில்
அவள் முலைகளைக் கவ்விக் கடித்தாலும்
பொறுமையோடு பாலூட்டுவாள்.


அவளைக் காணவில்லை.
எங்கெங்கோ தேடினேன்.
கடைசியாக... அப்பாடா.
அதோ அவள்.
அகலமான சாலையின்
அந்தப் பக்கம் நிற்கிறாள்.
அவளும் என்னைப் பார்த்துவிட்டாள்.
கண்களில் என்ன ஒரு மலர்ச்சி.
வேகமாய் அசைகிறாள்.
நானும் அசைகிறேன்.

நகரம், அநியாயத்துக்கு
வளர்ந்துவிட்டது.
சீறிப்பாயும் வாகனங்களால்
சாலை நிரம்பியே கிடக்கிறது.

இதோ கொஞ்சம் இடைவெளி.
அவள் வருகிறாள்.
நானும் போகிறேன்.
பூதம்போல் திடீரென ஒரு வாகனம்.

இந்த வாகன ஓட்டி
வேகம் கூட்டியபடி சொன்னான்
''இதுங்களோட பெரிய ரோதணையாப் போச்சு''
அடுத்தடுத்த பூதங்களுக்கும்
கால்கள் இருந்தன.
கண்கள் இல்லை.
எண்ணற்ற சக்கரங்களில்
எமது உடல்கள் அடக்கமாயின.

சாலையைக் கடப்பதற்காக
எமது உடன்பிறப்புகள்
இன்னமும் அங்கே
நிற்கிறார்கள்,
அழகாக வாலாட்டியபடி.

Sunday, July 18, 2004

மரண ஊர்வலத்தின்முன்

மரண ஊர்வலத்தின் முன்
நான் நடனம் ஆடுகிறேன்.
சீழ்க்கை ஒலிக்கும்
வெடிச் சத்தத்திற்கும் நடுவில்
நான் அபிநயிக்கிறேன்.

அழுகையும் மௌனமும்
அடர்ந்த கூட்டத்தின் முனை நான்.
மயானத்தை நோக்கிய பாதையில்
வாழ்வின் தத்துவங்களை விளக்கியபடி
சுழன்றுச் சுழன்று
துள்ளித் துள்ளி
நகர்ந்தபடியே போகிறது என்
நாட்டியம்.

என் ஆடைக்கு வரையறை இல்லை.
என் அசைவுக்கு இலக்கணம் இல்லை
என் மேடைக்கு எல்லைகள் இல்லை
நவரசங்களின் கலவையாக
அறுசுவைகளின் சேர்க்கையாக
நிற்காத காற்றாக
நான் ஆடுகிறேன்.

உயிரற்றவற்றை ஏந்தும் மனிதரைப்
பரிகசித்தபடி
லட்சியங்களின் வீழ்ச்சிக்கு வருந்தியபடி
கொடுமையின் தோல்விக்கு மகிழ்ந்தபடி
எண்ணற்ற உணர்வுகளோடு
நான் ஆடுகிறேன்.

வேகமாக வெகு வேகமாக
நகர்கிறது என் உடல்.
அகராதியில் இல்லாத சொற்களோடு
என் மொழி.
சமுதாயத்தைப் பிரதிபலிக்கிற
ஒரு கண்ணாடியாக என் முகம்.
கனவுகளோடு உரையாடும்
எனது மனம்.
எந்த நேரத்திலும்
எந்த நிலத்திலும் பதியலாம்
எனது கால்.

Saturday, July 17, 2004

கர்மயோகம்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்
க்ராôôôôர்
ருர்ர்ர்ர்ர்ர்
க்ளிங் க்ளிங் க்ளிங்
கீய்ங் கீய்ங் கீய்ங்
க்ஈஈஈஈஈஈங்
பட் பட் பட் பட்
க்ர்ர் க்ர்ர் க்ர்ர்
டமடம டமடம
ப்பாம் ப்பாம் ப்பாம்

இத்தனைக்கும் அசையாமல்
அந்த நாற்சந்தித் திட்டின்மேல்
அமர்ந்து
ஓர் எலியைக்
கிழித்துக் கொண்டிருக்கிறது
காகம்.

Friday, July 16, 2004

மீன் பேசினால்...

மீன்கள் பேசிக்கொண்டுதான்
இருக்கின்றன.
மீன் தொட்டியிலிருந்து
மூச்சு விடும் மீன்கள்
உண்டாக்கிய நீர்க்குமிழிகளில்
அவற்றின் பேச்சினை நான் கேட்டேன்.
கரையோரம் ஒதுங்கிய

பிரம்மாண்டமான திமிங்கலங்களின்
மௌனத்தில்
நான் பல சொற்களைக் கண்டெடுத்தேன்.
தூண்டில் புழுக்களுக்கு மயங்கி

இப்போது குழம்பில்
கொதித்துக்கொண்டிருக்கும்
மீன்களின் வாக்குமூலங்களை
நான் பதிவுசெய்திருக்கிறேன்.
 
மீன் சந்தைகளில்
கூடை கூடையாக நிரம்பியிருக்கும்
மீன்களின் வாசத்தில்
நான் ஓர் ஆழ்ந்த ஆலாபனையை
உணர்ந்தேன்.

கடற்கரைகளில்
காயவைக்கப் பட்டிருக்கும்
கருவாடுகளின்
மேனிகளில் அவற்றின்
வாழ்க்கைச் சரிதத்தை வாசித்தேன்.

வண்ணக் கனவுகளோடு
கருப்பு வெள்ளை டால்பின்கள்
வானத்துக்குத் தாவி
அந்தரத்தில் நடனமாடி
நீருக்குள் பாயும் கடைவெளியில்
என்னுடன் சில வார்த்தைகள் பேசின
 
அவை பேசியவற்றை
நான் கொஞ்சம்போலச் சொல்கிறேன்.
"வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.

மகாவிஷ்ணுவுக்கு நாங்கள்
மச்சாவதாரமாய் இருந்தோம்.
பாண்டிய மன்னர்களுக்குச்
சின்னமாக இருந்தோம்.

இன்றும் பெண்களுக்குக்
கண்களாய் இருக்கிறோம்.
ஆனால்,
வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.
கடற்பேரரசின்
காவல் தெய்வங்களாக
நாங்கள் இருந்தோம்.
இன்றோ,
மனிதனின் விருப்பத்திற்கேற்ப
கொல்லப்படும்
எளிய ஜீவன்களாய் இருக்கிறோம்.

உயிருக்குரிய மரியாதை
எமக்கு இல்லை.
கண்ணாடித் தொட்டியில்
சிறைவைக்கப்பட்டிருக்கிறோம்.
காகிதப் பூவைப்போல
வரவேற்பறையில் எம் அழகைக்
காட்டுகிறார்கள்
அழகிப்போட்டிகளில்
பெண்கள் உலாப்போவதுபோல்
நாங்கள் இடமும் வலமும்
நடக்கிறோம்.

மனிதனுக்கு முன்னால்
தோன்றியபோதும்
இந்தப் பூமியை நாங்கள்
மனிதனிடம் இழந்துவிட்டோம்
எங்கள் சுதந்திரம் அனைத்தும்
இன்று
நைலான் வலைகளுக்குள்
நைந்துவிட்டது.

அற்பப் புழுவைக் காட்டி
எம்மை ஏமாற்றும்
இந்த மனிதனின்
தந்திரங்கள் எல்லையற்றவை.

மனிதனின் இரக்கத்தால்
நாங்கள் வாழவேண்டி இருக்கிறதே!
எங்கள் தாயகத்தை நாங்கள்
மனிதனிடம் இழந்துவிட்டோம்.
இன்று அகதிகளாகத்
தண்ணீர்த் தொட்டியிலும்
காட்சிக் கூடங்களிலும்
ஏரி - குளங்களிலும்
திரிகிறோம்.

பாசியைத் தின்று
இப்போதும் மனிதனுக்கு
உதவியைத்தான் செய்கிறோம்.
ஆனால்,
எமது நாட்கள்
எண்ணப்படுகின்றன.

உலக இலக்கியங்களில் எல்லாம்
நாங்கள் இடம்பெற்றுவிட்டோம்.
ஆனால்,
வெறும் உவமையாக
பெண்களின் கண்களுக்கு மட்டுமே
உதாரணமாய்
சிறுமைப்படுத்தப்படுகிறோம்.

நாங்கள் நீந்திய நதியலைகள்
இன்று வறண்டு கிடக்கின்றன.
நதியில் குளிக்கிற இளம்பெண்களின்
மெல்லிய மேனியைக் கடித்து
குறுகுறுக்க  வைத்ததெல்லாம்
பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போய்விட்டன.
எங்கள் காவிரி எங்கே?
எங்கள் பாலாறு எங்கே?
எங்கள் பஃறுளி ஆறு எங்கே?
இன்று மிஞ்சியிருப்பதெல்லாம்
ஒவ்வொரு வீட்டுக் குப்பைத் தொட்டியிலும்
எங்களின் எலும்புக்கூடுகள் மட்டுமே.

வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.
ஏசுநாதர்
அப்பத்தோடு எங்களையும்
பெருகவைத்து விருந்திட்டார்.

குகன், ராமனுக்கு
எங்களைத்தான் படையலிட்டான்,
கண்ணப்ப நாயனார்
சிவனுக்கு எங்களை
சமர்ப்பித்தார்.

இன்று மனிதருக்கு
நாவூற வைக்கவே
நாங்கள் பயன்படுகிறோம்.

வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.

எங்களை விதவிதமாகச்
சமைப்பது எப்படி என்று
பெண்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

எங்களை எப்படியெல்லாம்
பிடிப்பது என்று
மீனவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
புறாக்களையாவது
அடிக்கடி பறக்கவிடுகிறார்கள்
சமாதானத்துக்காக.
எங்களுக்காகக் காத்திருக்கின்றன
மசாலாக்கள்,
சூடான எண்ணெய்கள்
மிளகாய்ப் பொடிகள்.
வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.
இன்று
ஆலைக்கழிவு முதல்
அணுக்கழிவு வரை
எமது தலையிலே கொட்டுகிறான் மனிதன்.
கடல், அவனுக்கு ஒரு
குப்பைத் தொட்டி ஆகிவிட்டது.
எங்கள் சடலங்கள் அடிக்கடி
நீர்ப்பாடையில் நீந்துகின்றன.

எண்ணெய்க் கப்பல்களின்
மாலுமிகளே! - உங்கள்
கப்பலின் ஒட்டைகளை அடையுங்கள்.
எங்கள் மூச்சுக் குழலை அடைக்காதீர்கள்.
பல கடல் மைல்களுக்கு
நாங்கள்
கூட்டாகக் கொல்லப்படுகிறோம்.

மனிதனின் சாதாரணக் கண்களில் பட்டாலே
நாங்கள் வாழ்வை இழக்கிறோம்.
இப்போது
ரேடார் கண்களும்
எங்களைக் காட்டிக் கொடுக்கின்றன
நவீன எட்டப்பனைப் போல.

குளக்கரைகளில் அமர்ந்தபடி
எமக்கு பொரிகளை வீசும்
இனியவர்களே!

எம் அக உலகத்தைப்
புற உலகிற்குக் காட்டும்
உயிரியல் - விலங்கியல்
தொலைக்காட்சி அன்பர்களே!

இன்றும்
எம்மை வரையச்சொல்லிப்
போட்டிகள் வைக்கும்
பள்ளிக்கூடங்களே!

எமக்கும் உயிர் உண்டு என்பதை
உணர்ந்திருக்கும்
உன்னத மனிதர்களே! உமக்கு நன்றி!

இதோ என் வால் அசைகிறது.
என் செதிள்கள் அபிநயிக்கின்றன.
நீருக்குள்ளே உன் உடல்
நர்த்தனமிடுகிறது.
இந்த வழவழப்பான உடலுக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறு உயிர்
துடித்துக்கொண்டிருக்கிறது.

ஞாபகம் வைத்திருங்கள்
எங்களுக்கும்
உயிர் இருக்கிறது.

 (வின் தொலைக்காட்சி - கவிராத்திரி - ஒளிபரப்பு : 27.03.2004, இரவு 9.30 மணி - ஒளிப்பதிவு : 29.02.2004) 

Thursday, July 15, 2004

ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

பெரிய கருப்பையில் இருந்து
சிறிய உலகிற்கு வந்திருக்கும்
இந்தக் குழந்தையின் புன்னகைக்கு
எந்தச் சேதமும் நேராதிருக்க
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

பள்ளி செல்லும் சிறுவனுக்கும்
அவனுக்கு டாட்டா காட்டியபடி
பொட்டலம் மடிக்கும் பொடியனுக்கும்
இடையிலுள்ள தூரம் இற்றுவிழ
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

வேலையோடு கண்ணா மூச்சி
ஆடுவோருக்கு
வேலை கிடைக்கவும்
வேலையில் இருப்போர்
உழைக்கவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

சீர் கேட்டுச் சீறாத
புகுந்தவீடு வாய்க்கவும்
நரகத்தைக் காட்டாத
நல்மனைவி தகையவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

தீய பழக்கத்தின்
திரியினைப் பற்றவைத்து
வெடித்து நாம் சிதறுகிற
விபரீத அபராதம் விலக
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

ஈடில்லா நாகரிகம்
கோடில்லா மனிதநேயம் அமைந்து
காடு வளரவும்
காற்று தவழவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!

மனக்குளத்தில் தூரெடுக்கவும்
மண்ணிலிருந்து போரெடுக்கவும்
உடம்புள் மட்டும் ரத்தம் ஓடவும்
கன்னம் யாவிலும் முத்தம் ஓடவும்
ஒரு தீபம் ஏற்றுகிறேன்!


அமுதசுரபி, தீபாவளி மலர் 2003