Saturday, September 28, 2013

கூக்கூ கீக்கீ

ஆஹா! உலகம் வளருதே!
ஆசை ஆசை மலருதே!
ஏஹேய்! எங்கும் புதுமையே!
எல்லாம் எல்லாம் இனிமையே!

கூக்கூ கீக்கீ பாடுவோம்
குட்டிக் கரணம் போடுவோம்
பூக்கும் பூவை நோக்குவோம்
புத்தம் புதுசாய் ஆக்குவோம்!

விஞ்ஞா னத்தின் விந்தைகள்
விண்ணைத் தாண்டும் சிந்தைகள்
பிஞ்சுக் குள்ளே மேதைகள்
பேட்டை தோறும் வேட்டைகள்!

எக்கச் சக்கம் வாய்ப்புகள்
எட்டுத் திக்கும் வெற்றிகள்!
துக்கம் தோல்வி அச்சமா?
தூக்கிப் போடு மொத்தமா!

கிழக்கும் மேற்கும் ஒன்றுதான்
கருப்பும் வெளுப்பும் ஒன்றுதான்
சுழலும் ஆண்பெண் ஒன்றுதான்
சமச்சீர் ஆனது இன்றுதான்.

மேலை கீழை நாடுகள்
விரலின் நுனியில் நாடுங்கள்!
காலை மாலை ஓட்டமே!
கைகூட்டுமே! கொண்டாட்டமே!

(நன்றி: கல்கி தீபாவளி மலர் 2011)

http://www.vallamai.com/?p=72

இந்தியத் தாய் திருப்பள்ளியெழுச்சி

இரவி எழுந்தது! இரவு கிழிந்தது!
இருவிழித் திரைகள் இணைந்து திறந்தன!
அரக்கம் அரண்டது! பொய்ம்மை மிரண்டது!
அத்தனை தீமையும் அலறி விழுந்தது!
மரணம் மருண்டது! வல்லவர் நெஞ்சின்
மகிமை புரிந்தது! மகிழ்வு கிளர்ந்தது!
உரங்கொள்ளும் வேளையில் உறங்கிடும் தாயே
உணர்வுகொண்டே பள்ளி எழுந்தருள் வாயே!
வறுமை தொலைந்தது! வளமை திகழ்ந்தது!
வார்த்தையில் இனிமை வழிந்து கிடந்தது!
வெறுமை மறைந்தது வயிற்றிலும் நெஞ்சிலும்!
வெற்றியும் முயற்சியும் இயைந்து தொடர்ந்தன!
நறுமண நேயம் நாளும் கமழ்ந்தது!
நல்லன வாய்த்தன! விழியொளி வளர்கையில்
பொறுமையில் துயில்கொள்ளும் செயலிது தாயே
பொருந்திடுமா பள்ளி எழுந்தருள் வாயே!
துயரம் ஒழிந்தது! இதயம் விரிந்தது!
தோள்கள் இணைந்தன! துணிவு பிறந்தது!
பயமும் அழிந்தது! கவலை கழிந்தது!
பகைபாதகத்தின் சடலம் எரிந்தது!
வயது நிலைத்தது! மனது திளைத்தது!
வானமும் தோற்றது! வல்லஇத் தருணம்
சயனத்தில் இருக்கும் உனக்கிது தாயே
தகுதியில்லை பள்ளி எழுந்தருள் வாயே!
பூக்கள் மலர்ந்தன! காதல் வளர்ந்தது!
புன்னகை எங்கிலும் ஆட்சி புரிந்தது!
தாக்கிய உயிர்கள் தாவி அணைத்தன!
சமத்துவச் செங்கோல் தனித்து நிமிர்ந்தது!
ஊக்கம் மிகுந்தது! நோக்கம் உயர்ந்தது!
உலரா வியர்வை உலகினை ஆண்டது!
ஆக்கங்கொள் பொழுதில் தூக்கங்கொள் தாயே
அகவிழியால் பள்ளி எழுந்தருள் வாயே!
களிப்பினில் மட்டும் கண்ணீர் வந்தது!
கவிதையும் இசையும் கலவிப் புணர்ந்தன!
தெளிவுநல் அகமும் முகமும் அழைத்தன!
திரை விலகியது! சினம் அடங்கியது!
வளிதனை அடக்கும் யோகமும் ஞானமும்
வளர்வுறு தியானமும் வாழ்த்தும் தழைத்தன!
தளிர்வளர் நிலையில் நித்திரை, தாயே
தவறல்லவோ பள்ளி எழுந்தருள் வாயே!
கனவுதோன்றுமுன் நனவில் நடந்தது!
காட்சி தமிழ்த்தது! அமுதம் மழைத்தது!
அனிச்சைச் செயலில் முத்தமும் சேர்ந்தது!
அவனியோர்க்கெலாம் நரகம் மறந்தது!
தினவு மிளிர்ந்திடும் தீந்தமிழ்ச் சொற்களின்
திக்கினை நோக்கித் திளைப்புறல் இன்றி
இனிபள்ளிகொள்வது இந்தியத் தாயே
இழிவல்லவோ பள்ளி எழுந்தருள் வாயே!
(‘பூபாளம்‘ என்ற தலைப்பில் 1996இல் வெளியான எனது முதல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை, இது)

காந்தி ஜெயந்தி சிறப்புக் கவிதை

காந்தியை விரும்புகிறார்கள் மாணவர்கள்
அவர் பிறந்த நாளில்
விடுமுறை கிடைப்பதால்.

காந்தியை விரும்புகிறார்கள் மக்கள்
அவர் 
ரூபாய் நோட்டில் சிரிப்பதால்.

காந்தியை விரும்புகின்றன கட்சிகள்
அவர் படத்தைக் காட்டி
அரசியம் ஆதாயம் பெற முடிவதால்.

————

பள்ளியில் மாறுவேடப் போட்டி.
காந்தி வேடம் அணிந்த மாணவனுக்கு
முதல் பரிசு.
காந்தி வேடம் அணிபவர்களுக்குத்தான் 
பரிசுகள் கிடைக்கின்றன.

பாடத் திட்டங்களில் காந்தியின் வாழ்க்கை தவறாமல் இடம்பெறுகிறது.
அதை மனப்பாடம் செய்து, மதிப்பெண்கள் வாங்குகிறோம்.
ஆனால்,
நாம் பாடம் பெறுவது தான் இல்லை.

நன்னடத்தைக்காகச்
சத்திய சோதனையைப் படிக்க வேண்டும் என
நீதிபதி தீர்ப்பளித்தார்.
சத்திய சோதனையைப் படிக்கிறார்கள்
நன்னடத்தை தான் வருவதில்லை.

————

கோட்சே காந்தியை நோக்கி மூன்று முறைகள் சுட்டான்
அத்துடன் அது முடியவில்லை
அந்தத் துப்பாக்கிச் சத்தம் இன்னும் ஓயவில்லை.
உலகில் எண்ணற்றோர் அவரைச் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அரசே மதுக் கடைகளைத் திறந்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

போடாத சாலையைப் போட்டதாய்
அந்தச் சாலையைப் பழுது பார்த்ததாய்
விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

நேரில் வாங்கினால்
லஞ்ச ஒழிப்புத் துறை பொறிவைத்துப் பிடிக்கிறது என்று
தெரிந்தவர் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தச் சொல்லும்
புதிய லஞ்சம் புறப்பட்டபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

பிரி கே.ஜி. தொடங்கி ஐ.ஐ.எம். வரை
லட்சங்களில் நன்கொடையும் கல்விக் கட்டணங்களும்
வசூலித்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

விளைநிலங்களை விற்றுவிட்டு,
வெளிநாட்டில் தட்டுக் கழுவும்போது,
விவசாயி தற்கொலை செய்துகொள்ளும்போது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

என் ஆசிரமத்தில் 
உழைக்காமல் யாருக்கும் உணவு கிடையாது
என உரைத்தீர்கள். 
இலவசங்களுக்காக எங்கள் மக்கள் விழுந்தடித்து ஓடிவந்து
நெரிசலில் சிக்கி மாண்டபோது,
பிதாவே, உமது மார்பில் குண்டு பாய்ந்தது.

ஒவ்வோர் ஊழலிலும் கையாடலிலும் கையூட்டிலும்
காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர், நேரத்துக்கு நேரம் 
சட்டம் வளைகிறது.
செங்கோல் வளைகிறது
நீதி வளைகிறது.
காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

ஜாலியன் வாலாபாக்கில் பாய்ந்த குண்டுகளை விட அதிகமான குண்டுகள்
காந்தியின் ஒற்றை மார்பைத் துளைக்கின்றன.

இரண்டாம் உலகப் போரில் வீசிய குண்டுகளை விட அதிகமான குண்டுகள்
காந்தியின் பொன்னுடலை மீண்டும் மீண்டும் சிதைக்கின்றன.

————

ஆனால்,
காந்தியின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
அவரின் தத்துவம் இன்னும் தோற்றுவிடவில்லை.
என் வாழ்வே நான் விடுக்கும் செய்தி
என்ற அவரின் வாழ்விலிருந்து
நாம் பெறும் செய்திகள்
இன்னும் தொடர்கின்றன.

உண்மையும் அன்பும்
எளிமையும் 
எங்கெல்லாம் ஒளி வீசுகின்றனவோ
அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்.
அவர்களுக்குள் இருந்து சிரிக்கிறார்.

————

ஒரு நாய்க்குட்டி என் காலை நக்கி விளையாடுகிறது
ஒரு மீன்குஞ்சு என்னை மெல்ல கடிக்கிறது
ஓர் இளங்குருவி என் தோளில் அமர்கிறது
ஒரு மொட்டு மெல்ல மலர்கிறது.
பேரமைதியிலிருந்து ஒரு மெல்லிசை பிறக்கிறது.
ஒரு கனவு மெல்ல விழித்தெழுகிறது.

‘எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

என்றானே பாரதி.

அந்த நன்முறைகளில் ஒன்று, காந்தியம்.
நம்மை நடத்தும் தலைவர் காந்தி.
அண்ணல் வழிநடப்போம்
அன்பின் மொழிபடிப்போம்
அகத்தின் விழிதிறப்போம்.

(சென்னை, மயிலாப்பூர், ஏவி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அக்.2, 2012 அன்று இராமலிங்கர் பணிமன்றம் நடத்திய காந்தியக் கவியரங்கில் வாசிக்கப்பெற்றது. தலைமை: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன்)

நன்றி: வல்லமை மின்னிதழ்

படத்துக்கு நன்றி: http://timelifeblog.files.wordpress.com/2012/01/50876734.jpg

மலை பெய்கிறது!

மலை பெய்கிறது என்றாய்.
வெளியே எட்டிப் பார்த்தேன்.
மேலே கருமலையென நின்றிருந்தது மேகம்.
சிறு சிறு கற்களென
மலை பெய்துகொண்டிருந்தது.
அந்த அடியிலிருந்து தப்பிக்க,
ஓடி ஒளிகிறார்கள் மக்கள்.

====================
நன்றி: வல்லமை மின்னிதழ்

ஒருமுழுக்குப் போடுவாய்!

உடற்களைப்பு நீங்கவே
உளக்களிப்பு ஓங்கவே
சுடர்முகத்தில் பற்றவே
சுறுசுறுப்பு தொற்றவே
அடர்நலன்கள் சூழவே
அழகொளிர்ந்து வாழவே
உடன்அழுக்கு போகவே
ஒருமுழுக்குப் போடுவாய்!
 

உயிர்த்துடிப்பு கூடவே
உயர்சிறப்பு தேடவே
துயில்களைந்து துள்ளவே
துயர்தொலைந்து வெல்லவே
வயித்தியங்கள் தள்ளவே
வலிகழன்று செல்லவே
ஒயில்முழுக்கக் கொள்ளவே
ஒருமுழுக்குப் போடுவாய்!
 

கயல்இனம் கடிக்கவே
காற்றெழுந்து அடிக்கவே
நயந்திசை படிக்கவே
நரம்புகள் முடுக்கவே
செயலுரம் செழிக்கவே
சிந்தைவேர் விழிக்கவே
உயரவே உயிர்க்கவே
ஒருமுழுக்குப் போடுவாய்!
 

கலக்கமா? சுணக்கமா?
கவலையா? வருத்தமா?
இலக்கிலே விலக்கமா?
இறுக்கமா? இறக்கமா?
இலையெனும் நடுக்கமா?
இவையனைத்தின்உச்சியை
உலுக்கியே உலுக்கியே
ஒருமுழுக்குப் போடுவாய்!
=====================

Thursday, September 26, 2013

புரட்சித் துறவி

ஞானகுரு யோகவுரு ஞாலவொளி யானதிரு
வானமதி பூணுறுதி வையநிதி - தேனமுது!
புத்தெழுச்சி யூட்டு புரட்சித் துறவிநரேன்
சித்தெழுச்சி யூட்டு சிவம்!

(சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டினை முன்னிட்டு எழுதியது)