Friday, August 19, 2005

தென்றல் வானொலியில் வாசித்த கவிதை

(சென்னையில் நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவாகி, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் இணைய வானொலியில் 1-1-2005 அன்று நான் சில கவிதைகளை வாசித்தேன். அவற்றில் ஒன்று, இது. சுனாமியின் தாக்கம் மிகுதியாக இருந்த நாள்கள் அவை என்பதை மனத்தில் இறுத்தி வாசிக்க வேண்டுகிறேன்.)

கடலைப் பார்க்கிறேன்.
அச்சத்தோடும் அவநம்பிக்கையோடும்.

ஓம் என்ற பிரணவம் - இன்று
ஓ என்ற ஓலம்.

கடற்கரையிலிருந்து திரும்பும்போதெல்லாம்
எவ்வளவு உதறினாலும் ஒட்டியபடியே இருக்கும்
மணல் துகள்கள்.

அலையோரம் நிற்கும்போதெல்லாம்
பாதத்தின் கீழே குழி பறிக்கும் அலைகள்.

ஓய்வெடுக்கும் கட்டுமரங்கள்
காதலைக் கட்டும் மரங்களாகப் பாதுகாக்கும்.

மணலை மேடிட்டு
அதற்குள் ஒரு குச்சியை மறைத்துக்
கண்டுபிடித்து விளையாடியுள்ளோம்.

இன்று உடல்களைத் தனித்தனியாகப் புதைக்க நிலமில்லை.
மொத்தமாகப் புதைக்கப் பழகிவிட்டோம்.
எங்கள் ஆசைகள், கனவுகள், நினைவுகள்
அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம்.

கரையோரக் காலடிச் சுவடுகள் மொத்தமாக அழிந்துவிட்டன.
சுவடுகளைப் பதித்தவர்களும் சுவடு தெரியாமல் போயினர்.
கடல் தன் பங்குக்குச் சில சுவடுகளைப் பதித்துள்ளது.

குழந்தைகள், மணல் கோபுரங்களைக் கட்டி விளையாடிய வெளி அது.
விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாத குழந்தைகள்,
கட்டியவற்றை இடித்துவிட்டு ஓடுவர்.
என் கரையில் அமர்ந்து
என்னையே சேர்த்துக்கொள்ளவில்லையா?
சினமுற்ற கடல், கடலோர வீடுகளை எல்லாம் அழித்துவிட்டது.

கடல் போல் பொறுமை வேண்டும் என்றனர்.
சுனாமியே அவர்களை நோக்கிப் போ.

அநீதி நிகழ்கையில் கடல் பொங்கும்.
அது கடலுக்கே பொறுக்காது என்பர்.
எந்த அநீதிக்காக இப்படிப் பொங்கினாய் கடலே.
பூம்புகாரில் பிறந்த கண்ணகியிடமிருந்து கற்றுக்கொள்.
அப்பாவிகள், ஊனமுற்றோர், குழந்தைகள், பெண்கள்...முதலியவர்களை
விட்டுவிட்டு தீயவர்களை மட்டும்தானே அவள் தீயிட்டாள்!

கள்ளக் கடலே கட்டுக்குள் இரு.
உள்ளக் கடலில் சுனாமி.
அழித்துப் போட்டதாய் ஆட்டமிடாதே.
உழைத்துக் கட்ட உயரும் எம் கைகள்.

பித்துப் பிடித்த பேய் அலைகள்
கற்றுக் கொடுத்த பாடம் இதுதான்.
உதவி என்ற ஒற்றைச் சொல்லே
விதவை நிலத்தை விளங்க வைக்கும்.

சடலம் மீண்டும் உடலம் ஆக
மயானம் மீண்டும் வளநகர் ஆக
ஆழிப் பேரலை அமைதி கொள்ளுக
தோழர் நம்மவர் தூக்கி விடுக.

முத்துக் கடலே மெளனம் கொள்ளுக
உத்தமர்களே உதவிக்கு வருக.

Saturday, August 13, 2005

இனி என்ன செய்ய?

அரிது அரிது பலகணி உள்ள அறை!
என் அறையில் உள்ளதுபோல்
பெரிய பலகணி அரிதினும் அரிது.

நுழைந்தவர்கள்
உடனே எழுந்து செல்ல விரும்பியதில்லை.
எழுந்தாலும் 'போய் வருகிறேன்' என
மனமுவந்தே சொல்கிறார்கள்.

தென்றல் சிறுநடை பயிலும்
ஒளி வெள்ளமெனப் பாயும்
கிளைகள் விதவிதமாய் அபிநயிக்கும்
புறாக்கள் வந்தமர்ந்து எட்டிப் பார்க்கும்.

நான் பார்ப்பது குறைவாயினும்
வானம் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும்
இந்த அறை அரிதுதான்.

இங்கு அமர வந்த
உங்களை வரவேற்கிறேன்.

உட்காரும்முன் இருக்கையை
ஆராய்கிறீர்கள்.
உங்கள் கைக்குட்டையால்
விசிறித் துடைக்கிறீர்கள்.

உங்கள் தூய்மைப் பணி பாராட்டுக்கு உரியதே.
ஆயினும் பயனில்லை.
அடுத்த ஐந்து நிமிடத்தில்
எப்படியும் வந்துவிடும் தூசி,
விலக்கிய பாசி மீண்டும் வருவதுபோல்.

மேசை மேல் உங்கள் கையை வைக்கலாம்
தாராளமாக.
வெள்ளை முழுக்கைச் சட்டை அணிந்திருந்தால்
கொஞ்சம் மடக்கிவிட்டுக் கொள்ளுங்களேன்.

தொலைபேசிக் கருவியில்
புத்தக அடுக்கில்
கணினித் திரை மீது
மேசை மேல்.... என
எப்பொருள் மீதும்
பாய்விரித்ததுபோல்
தூசிப் போர்வை.

நாம் அதனிடமிருந்து
தப்பித்துவிட முடியாது.
எவ்வளவு துடைத்தாலும் போதாது.
போகாது.

இங்கிருந்து நீங்கள்
வெளியே அனுப்பும் தூசி
பக்கத்து அறைக்குச் செல்லும்.

பக்கத்து அறையிலிருந்து
வெளியே அனுப்பும் தூசி
எங்கே செல்லும்?

காற்று மண்டலமே
தூசி மண்டலமான பிறகு
ஓடிப் பிடித்து விளையாடும்
அந்தத் துகள்களை
ஒன்றும் செய்ய இயலாது.

சுவாசத்தைக் கைப்பற்றி விட்டது, தூசி.
இனி என்ன செய்ய?
நன்றாக இழுத்து மூச்சுவிடுங்கள்.

தூசிப் படலத்தின் மேல்
விரலால் கோலம் போட முடிகிறது.
கொஞ்சம் முயன்றால்
புதுமையான ஓவியங்கள் கிடைக்கலாம்.

தூசிகளைத் தடுக்க
இந்தப் பலகணிகளை மூடிவிடலாம்
என்கிறீர்கள்.

தூசிகளைக்
குறைத்து மதிப்பிடவேண்டாம்.
பல மாதங்களாக
மூடியிருக்கும் அறைக்குள்
அவ்வளவு தூசி எப்படி வந்திருக்கும்...
சிந்தித்ததுண்டா?

மாற்ற முடியாததை ஏற்கும் விதிப்படி
தூசியை ஏற்கவேண்டியதுதான்.
வெளியே உலகம் வளர்ந்துகொண்டிருக்கிறது நண்பரே.

(கானல் காட்டில் நடைபெற்ற திசைகள் இலக்கிய முகாமில் வாசிக்கப்பெற்றது)

[ திசைகள் / ஜுலை 2005 ]

Thursday, August 11, 2005

மற்றுமொரு விடுமுறை நாள்

முன்னொரு காலத்தில் நாங்கள்
விவசாயிகளாக இருந்தோம்.
சேற்றில் இருந்த எம் கால்கள்
வரப்புகளுக்கு ஏறின.

வரப்பிலிருந்து மண்சாலைக்கும்
மண்ணிலிருந்து தார்ச்சாலைக்கும்
தாரிலிருந்து சிமெண்டுச் சாலைக்கும்
மொசைக் தளங்களுக்கும்
ஏறிவிட்டன எம் கால்கள்.

காலில் மண்படுவது
அழுக்குப் படுவதாய்
அர்த்தமாகிவிட்டது.
செருப்பும் ஷூவும் அணிந்தே
நடக்க வேண்டும் என்று
எம் குழந்தைகளை வளர்க்கிறோம்.

மண்வாசனை
துர்நாற்றமாகிவிட்டது எமக்கு.

மீசை, தாடிகள் கூட
இறக்குமதியாகின்றன.

எமது உடைகள்
எமது உணவுகள்
எமது பண்பாடு
யாவும் புதைந்துபோயின.

எமது மண்ணிலிருந்து
எம்மை அந்நியமாக்கிவிட்டது
நாகரிகம்.

பொங்கல் எமக்கு
மற்றுமொரு விடுமுறை நாள்.

( தினமலர் பொங்கல் மலர் / 14-1-2001)

கிழக்குச் சூரியன்

Image hosted by Photobucket.com

கோடானு கோடிஅணு குண்டுகளைச் சத்தமின்றிச்
சூடாகத் தூரத்தில் தூக்கிஒரே - போடாகப்
போட்டாற்போல் மீமீமீ போர்க்களமாய் வானம்!ஒளி
தோட்டாவாய்ப் பாய்கின்ற தோ!

யாரந்த வண்ணான்?ஏய்! யெளவனத்தில் முக்கிமுக்கி
தூரக் கிழக்கைத் துவைக்கின்றான்! - பாரடாடோய்!
தண்கதிர்நீர் தான்தெளிக்க தக்க வெளுப்போடு
விண்கொடியில் காயும் விதம்.

ஆடுகளம் ஆடுபவர் ஆரோ? சுழற்பந்தைப்
போடுகையில் பாய்ந்தடிக்க பூமிமேல் - ஓடி
விரிகடலில் சிக்சரென வீழ்கிறது! ஆகா
பரிதி கிரிக்கெட்டு பந்து!

ஊற்றாகி ஓடையாய் ஊர்ந்த ஒளித்தண்ணீர்
ஆற்றுள்ளும் காட்டாறாய் ஆர்ப்பரித்து - காற்றோடு
காற்றாய் விரிந்து கடலாகி விண்மீனாம்
நாற்றுகளை மூழ்கடிக்கும் நன்று!

வானவில்லைத் தன்வீட்டு வாளியிலே கரைத்து
கானக் கிழக்காம் கருந்தரையில் - மோனமகள்
அள்ளித் தெளித்துப்பின் ஆதவனாம் கோலமதால்
அள்ளுகிறாள்! கிள்ளுகிறாள்! ஆ!

விண்கோழி இட்ட வெகுவெப்ப முட்டையிலே
கண்விழித்த குஞ்சே கதிரவனா? - கோயிலிலே
நேற்று சுடச்சுட நின்றுபெற்ற வெண்பொங்கல்
சோற்றுருண்டை தானோ சுடர்!

( தினமணி கதிர்; 3-11-1996 )

விழிப்பாவை

கொய்யாப் பழத்தில் குடியிருக்கும் சில்வண்டே!
கொட்டம் அடிக்கின்ற கும்மிருட்டு வெளவாலே!
செய்யாப் பிறப்பே! சிறகடிக்கும் கொக்கே!
சிலிர்க்கின்ற காற்றில் வெடுக்கென்று பாய்ந்திடும்
ஒய்யாரச் சிட்டே! ஒளிப்பூக்கும் மின்மினியே!
ஓங்காரக் கோட்டானே! ஒத்தூதும் ஊர்க்கொசுவே!
மெய்யாகக் காற்றில் மிதக்கும் கச்சேரி!
பறக்கின்ற தோழரைப் பாராய் விழிப்பாவாய்!

மாய மழைவான்; மழிக்காத மண்கன்னம்;
மாறிலியாய்க் கோப்பை. விதவிதமாய் வண்ணங்'கள்'!
மையக் குழியம்; மகரந்தத் தூவியம்;
வண்டுவாய்ச் சீழ்க்கை; வயதுவரும் வைகறை;
தூய கிழக்கு; சுவரில்லாச் சித்திரங்கள்;
துய்த்துத் துணித்துத் துளையம் அடித்தாடி
ஏய நெகிழாமல் இன்னுமா தூக்கம்?
இமைஎறிந்து விட்டே எழாயோ விழிப்பாவாய்!

முட்டியிட்டுத் தாய்மடியை முட்டும் கருப்பாடு;
முத்தமிடும் தத்தை. முகையவிழும் மந்தாரை;
சொட்டுவிடும் கீற்று; சுழற்றிவிடும் பேரிளமை;
தொட்டுவிடும் பாட்டு; துவைத்துவிடும் நாதலயம்;
தட்டிலைகள் ஏந்தும் தடாகம்; மழலையுடன்
தத்திவரும் சிட்டுகள்; தாவிவரும் ஆழியலை
எட்டும் அசைவெல்லாம் காற்றின் வரிவடிவம்.
ஈதைப் பயின்று விரிவாய் விழிப்பாவாய்!

பேழை திறப்பதுபோல் பேசுகிற பைம்பெண்ணே!
பெய்யும் மழைக்கட்டி கையேந்தி, உள்ளங்கை
ஆழ உறைந்தே எறிந்து விளை யாடாயோ!
ஆர்க்கும் அருவிக்குள் காதடைய நில்லாயோ!
நாழிகள் சேமித்து நாத இயற்கைக்குள்
நட்டு வளர்த்து நிழல்காய வாராயோ!
தாழை இறுக்கித் திரைக்குள் புதையாது
தாகங்கள் தீர்த்துமீண்டும் தாராய் விழிப்பாவாய்!

மேகத்தின் மெந்நீழல் மெல்ல நகர்கிறது.
மேற்கின் அலகிற்குள் செம்பூச்சி வீழ்கிறது.
ஆக அகஅகழ்வில் அத்வைதம் பூக்கிறது.
ஐந்து புலத்தும் அமரம் வழிகிறது.
ஊகத்தின் பேரில் உடலை வருடுகிறோம்.
ஊறும் உயிரில் உருஅருவம் ஆகின்றோம்.
ஏகத் திரைவிழுங்கும் ஏக்கத்தில் ஆழாமல்
எங்கே தொலைந்தாய்? எழுவாய் விழிப்பாவாய்!

சாயும் காலங்கள் சயனத்தில் ஆழ்கையிலே
சாயல் தெரிகிறது சாரங்கீ! உன்இதழில்
தோயும் தொழிலைத் தொழப்புகுமென் சிந்தையிலே
தூறல் விழுகிறது தூவம்மே! நானுனக்கு
வேயும் விதானம் வெறிப்பரிவால் என்கையிலே
வெள்ளம் புரள்கிறது மாதங்கீ! என்னிடத்தில்
நேயம் இருக்கிறது. நீயும் இருக்கின்றாய்.
நித்தம் கனவிருக்கும். நீசொல் விழிப்பாவாய்!

வார்த்தையற்ற மெட்டுகளை வாயில் குதப்பி
வடித்த இசைச் சிற்ப வடிவமென வந்துநிற்கும்
நேர்த்தியான தேவியின் நித்திரையை ஆராய,
நீள்வெட்டுத் தோற்றத்தில் நானும் குறுக்குவெட்டுத்
தோற்றத்தில் அந்தத் துணைமயிலும் பூத்திருக்க,
தூவிகளில் என்கை துழாவித் துழாவியொரு
தேர்ந்த மயக்கத்தைத் தீட்ட, செருகும்உன்
தேவ சுயசரிதம் தேவை விழிப்பாவாய்!

நாடிய மேனகை சேலைத் தலைப்பின்
நயமிகு பாவனை நோக்காயோ! நீள்குழல்
சூடிய பூச்சரம் மெல்லிடை மேலிடும்
சுந்தர நாட்டியம் காணாயோ! அன்னவர்
தோடு ஜிமிக்கி துணைநடம் ஆடும்
சுறுசுறுப் பிற்குள் சுருளாயோ! எங்கெங்கும்
ஊடும் ஒளிக்கூழை ஒட்ட வழிக்காது
உறக்கம் தகுமோ உனக்கே விழிப்பாவாய்!

முத்தக் கறைபடிந்த கன்னங்கள்; செங்குருதி
முட்டிச் சிவந்துவிட்ட பாகங்கள்; பேராவல்
பித்துப் பிடித்தலையும் சித்தங்கள்; இல்லையிதில்
பின்னென்றும் முன்னென்றும் பேதங்கள்; அந்தரங்கம்
அத்துப் படியாகி ஆட்டங்கள்; தீபூத்த
ஆவி நிறையமிகு ஊட்டங்கள்; மூழ்கியெழில்
முத்தை எடுத்துவரும் நேரங்கள்; வாழ்வின்
வெளிச்சங்கள் என்றே விரிப்பாய் விழிப்பாவாய்!

'கிட்டுங்கால் கிட்டும்; கிடக்கட்டும்' என்றின்றிக்
'கிட்டாமல் விட்டோமோ' என்றே முழக்கமிடும்
கட்டிளங் காளையரும் கன்னியரும் சேர்ந்திருக்க,
கைக்குள் வலுவிருக்க, கண்ணில் ஒளியிருக்க,
நெஞ்சில் உரமிருக்க, நீதியெனும் வாளிருக்க,
நீசரின் சூழ்ச்சியின்முன் நீர்வடிய நிற்பதினும்
வெட்கப் படுமோர் விடயம்வே றில்லை
விசைமுடுக்கி என்தோழா இன்றே விழிப்பாவாய்!

நாலெழுத்துக் கற்றறிந்து நால்வர் உடன்பழகி
நாலுபேர் கையால் நறுக்கெனக் குட்டுவாங்கி
நாலுகால் பாய்ச்சலில் நாலுதிசை சுற்றிவந்து
நாலுகாசு பார்த்து, ஒரு நாற்காலி வாய்ப்பதற்குள்
நாலு கழுதை வயதேறி, பாரம்
நசுக்கிவிட, நாலுகால் இல்லாத கட்டிலை
நாலுபேர் தூக்கும் நலிவுற்ற வாழ்வினை
நாலிமையும் கொட்டி நகைப்பாய் விழிப்பாவாய்!

கேணி மிகப்பெரிது; கெட்டிச் சுவருண்டு;
கீர்த்தனம் பாடும் சகடை; கயிறுகொஞ்சம்
நாணிச் சிறிதுகோணும்; எத்தனையோ பேரழகு
நங்கையர்கை பட்ட நினைப்புத்தான்; உள்ளிறங்க
ஏணி வளைவாய்ப் படியுண்டு; கொஞ்சமே
எட்டிநாம் பார்த்தால் திகிலுண்டு; பாதாள
வாணிபம் போல வளர்ந்திருக்கும் தண்ணீரைப்
பார்க்க முடிந்தால் பார்த்துக்கொள் விழிப்பாவாய்!

சுற்றும் விசிறியே! சும்மா புலம்பாதே!
நேர்கீழே நின்றும்உன் மூச்சென்னை எட்டவில்லை.
வெற்றுச் சுழற்சி; வெறும்பயிற்சி! மின்சாரம்
வேறு குடிக்கிறாய்; வண்ணம் தொலைத்தாய்; உன்
அற்றைநாள் வீரம் நினைக்கிறேன். தென்றலை
அள்ளிக் கொடுத்தாய் அலையெகிற! இன்றுன்னைச்
சுற்றிவிட ஒற்றைக் கழிதேவை. காலச்
சுவடுகளின் மாறாட்டம் பாராய் விழிப்பாவாய்!

நிலத்தினை நீர்விழுங்கி நின்றதோர் காலமுண்டு
நீரை நிலம்விழுங்கக் காணுகின்றோம் இன்று.
நலந்தரு நீர்நிலைக்கு நல்ல சமாதியேபோல்
நஞ்சேறும் வேகத்தில் நீள்நெடு மாடங்கள்
உலக்கை மனிதர் ஒருநீள் வரிசையில்
ஓர்கைக்குப் பத்தாய்க் குடங்களுடன். யாகம்
வளர்த்தால் மழையென்பார் வண்ணம்பார். புத்தி
வளர்க்கும் வழிசொல்ல வாராய் விழிப்பாவாய்!

தோலில் சுருக்கம்; செவிகொஞ்சம் மந்தம்;
தொடுந்தொலைவோ தோன்றும் நெடுந்தொலைவாய்; ஊன்று
கோலில் நடக்கும்; குழறும் மொழியெழும்;
கோலயிளங் காலத்தில் மூழ்கும்; கரத்தினில்
காலில் நடுக்கம்; கடிகாரம் தாழும்;
கடல்சூழ் உலகம் அறையாய்க் குறுகும்; மென்
மேலும் தனிமை விரியும் முதுமையின்
மேன்மையை மென்மையாய் மீட்டு விழிப்பாவாய்!

உத்தமா எங்கே? உறங்கும்இவ் வூரில்
ஒளிந்துகொண்டா? யாரோ எறிந்த குப்பையில்
பத்தோடு மற்றொன்றாய்? வெங்காற்றில் சுற்றுகிற
பாலிதீன் பையினுள்? கத்தலிடை கூவலாய்?
புத்தம் புதிய படச்சுவ ரொட்டியைத்
தின்னும் பசுவைத் தடவிக் கொடுத்தபடி?
பொத்தாம் பொதுவில் கரித்துண்டு வாக்கியங்கள்
தீட்டும் அவனெங்கே? தேடேன் விழிப்பாவாய்!

கையில் கழியும் கழியில் இசையுமாய்க்
காற்றைத் தடவும் கருமை உலகம். இம்
மையில் உறையும் வடிவ கணங்கள்
மயங்குழல் வாழ்வின் பெருஞ்சல னங்கள்.இவ்
வையவான் திக்கெலாம் மையம் இழுக்க
விழியும்அதில் பார்வையும் வேண்டும். இறந்தபின்
தாயேன் உனையிங்கு தானமாய். ஊழிதாண்டும்
தக்கவாய்ப்பைத் தக்கவைத்துத் தங்கு விழிப்பாவாய்!

வெய்யில் மழைக்குள் வெளிச்சஇருள் நின்றமர,
வித்துமரம் ஆழ்ந்தோங்க, மொட்டுமலர் ஆடிஅற,
மெய்ப்பொய்யாய்க் காட்சி விழுந்துஎழ, காற்று
மிதவேக மாய்க்கதவை மூடித் திறக்கவொரு
தெய்வ மிருகம் சிரித்துஅழ, எங்கெங்கும்
சேய்க்கிழமாய்க் கேட்கும் ஒலியமைதி, உள்வெளியில்
ஒய்யார கோரம் உயிர்ச்சவமாய்த் தீக்குளிரில்
ஓய்வாய் உழைக்கப் பயில்வாய் விழிப்பாவாய்!


அமுதசுரபி தீபாவளி மலர் 2004

3 கவிதைகள்

எதிரெதிர் துருவங்கள்

தீப்பெட்டிக்குள்
ஒரு பிஞ்சு விரல் இருக்கிறது.

பீடிக் கட்டுக்குள்
பால்மணம் வீசுகிறது.

வெடிகளைக் காய வைக்கையில்
கண்ணீர்த் துளிகள் ஆவியாகின்றன.

வாகனங்களைக் குளிப்பாட்ட
கிரீஸில் குளித்தபடி
தண்ணீர் பாய்ச்சுகின்றன
தளிர்கள்.

இவர்களுக்கு மட்டும்
எங்கிருந்து கிடைக்கின்றன
முட்டியை மறைக்கும் சட்டைகள்?

ஆடை எந்த நிறத்தில் இருந்தாலும்
அழுக்குச் சாயம் போட்டு,
கடைசியில் இவர்களிடம்
கறுப்பாகத்தான் வருகிறது.

படிக்கும் பிள்ளைகளுக்கு
வேலை ஒரு கனவு.
வேலை செய்யும் பிள்ளைகளுக்கோ
படிப்பு ஒரு கனவு.

கல்வியும் தொழிற்பயிற்சியும்
கலந்த அடிப்படைக் கல்விமுறை
எப்போது வரும்?

ஊர்போய்ச் சேர்க்காது
ஒற்றைத் தண்டவாளம்.

(இலக்கிய நந்தவனம் / நவம்பர் 2000)

நாங்களும் அரசர்களே

கொடி படை முடி
கொண்டவர்கள்
அரசர்கள் என்றால்
நாங்களும் அரசர்களே!

எங்களிடம்
துணி காயவைக்கக்
கொடி உள்ளது!
தண்ணீர் இன்றிக் குளிக்காததால்
அழுக்குப் படை உள்ளது!
தலையில் முடி உள்ளது!

(முல்லைச்சரம் / பிப்ரவரி 1997)

யாரும் இல்லாத் தீவில் நான்

எந்திரங்களின் கைகளில்
நம்மை ஒப்புக்கொடுத்த பிறகு
வாழ்வே ஒரு பொம்மலாட்ட மேடைதான்.

மனிதரை உடற்கூறிலும்
தீவை வரைபடத்திலும் தேடாதீர்.
அவை
மனத்தின் இடுக்கில்
மறைந்திருக்கின்றன.

பூமியை வீடாக்கியவர் நாம்.
வீட்டைத் தீவாக்க வேண்டாம்.

உலகம் என்ற இருபாலார் பள்ளியில்
உடல் என்பது பள்ளிச் சீருடை.
நான்
கனவு வீட்டிற்குத் திரும்பியதும்
உடலை ஹேங்கரில் மாட்டுவேன்.

எல்லையுள்ள எல்லாமே தீவுதான்.
தீவு என்று வந்துவிட்டால் நோவுதான்.

தண்ணீரை வற்றவைப்போம்.
இல்லையேல் தீவுகளை மூழ்கடிப்போம்.

(கதைச்சோலை / செப்டம்பர் 1998)

Wednesday, August 10, 2005

நடை

(வெண்பாவில் கதை சொல்லும் முயற்சி, இது. எதுகை, மோனையை மட்டும் விலக்கிவிட்டு, அடிப்படை இலக்கணமான வெண்டளை பிறழாமல் இதை ஆக்கியுள்ளேன். பெரும்பாலும் வகையுளிக்கு உட்படுத்தாமல் முழுச் சொற்களாக விட்டுள்ளேன். தளை பார்க்க விரும்புவோர், பிரித்துக்கொள்ளுங்கள்.)

ஒருமழைநாள்; எங்கும் உறைஇருள்; அந்தத்
தெருவில் இருள்தடவிக் கொண்டே - நடந்தேன்.
எனக்குத் தெரியாது எதிரே ஒருத்தி
எனைப்போல் வருகிறாள் என்று.

என்கை அவள்முகத்தில்; என்மார்பிலோ அவள்கை.
மின்னியது மின்னல் அந்நேரம்பார்த்து! - பெண்அழகாய்த்
தான்இருந்தாள். 'மன்னிக்க வேண்டும்' எனும்போதும்
சொன்னோம்: 'அடச்சே இருட்டு'.

மேலும் இரண்டடி வைத்திருப்பேன். 'ஆ'என்றோர்
கூச்சல். இருளால் தடுக்க - முடியாத
சத்தம் வழிகாட்ட, கைகளால் கண்டேன்.
அவள்சேற்றில் வீழ்ந்திருந் தாள்.

'வழுக்கி விழுந்துவிட்டேன். மண்ணாயிடுச்சு உடம்பு'
என்றாள். 'மழையிலே நில்லுங்க - போயிடும்'
என்றேன். 'அதில்லை. மண்ணு உள்ளேபோய்க் குத்துது.
உடனே கழுவணும்'என் றாள்.

மீண்டும் உதித்தது மின்னல். தெரிந்தது
கையடி நீர்க்குழாய் ஒன்று. - அவள்கழுவ
நான்அடித்தேன். 'கொஞ்சம் திரும்பி அடியுங்கள்.
ஆடை களையணும்'என் றாள்.

எப்படிப் பார்ப்பேன் இருட்டில்? என்றாலும்
திரும்பினேன். அவள்குளித்தே விட்டாள். - குறும்பாக
ஓர்தவளை பாய்ந்தது அவள்மேலே. வீலென்று
கத்தி அணைத்தாள் எனை.

தவளைக்கு நன்றி! இருள்மழை மின்னல்
அனைத்துக்கும் நன்றிசொல்லும் வேளை - அவள்சொன்னாள்
'ரொம்ப பயமா இருக்கு. என்னை என்வீட்டில்
கொண்டு விடமுடியு மா?'

அவள்கூந்தலில் இருந்து நீர்த்துளிகள் என்முதுகில்
சொட்டின. இன்னும் மழைவிட - வில்லை.
உடைஉடலோடு ஒட்ட, கால்கள் பின்ன, இடையுரச,
கைகோத்த வாறுஎம் நடை.

தெருக்களைத் தின்றன எம்கால்கள். 'அய்யோஎன்
கால்வலிக்குதே' என்று அமர்ந்தாள். - அவளை
இருகையால் தூக்கிஎன் மார்போடு அணைத்து
நடந்தேன் வெகுநேர மாய்.

வீடுவந்து விட்டதென்றாள். பார்த்தால் அ·துஎன்வீடு.
கையில் இருந்தவளும் இல்லை. - கதவருகே
நின்றென்னை வித்யாசமாய்ப் பார்த்தாள் அம்மா.
தலைதுவட்டிக் கொண்டிருந்தேன் நான்.

(சுந்தர சுகன் / ஜூன் 2001 / இதழ் எண்: 169)

சுதந்திர சாக்லேட்

2000ஆம் ஆண்டு. சுதந்திர தினத்திற்கு இரண்டு நாள்கள் இருந்தன. எழும்பூரில் உள்ள தினமலர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த செய்தி ஆசிரியர் பார்த்திபன், என்னைக் கண்டதும், 'சுதந்திர தினச் சிறப்பிதழுக்கு ஒரு கவிதை கொடுங்கள்' என்றார். 'எப்போது வேண்டும்?' என்றேன். 'உடனே கொடுக்க முடியுமா?' என்றார். 'சரி' என்று வரவேற்பறையிலேயே உட்கார்ந்தேன். அடுத்து முக்கால் மணி நேரத்தில் கீழ்க்கண்ட கவிதையை எழுத முடிந்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார். மறவன்புலவு க. சச்சிதானந்தன், இக்கவிதை என் இயல்பை நன்கு வெளிப்படுத்துவதாகக் கூறுவார். அக்கவிதை இங்கே:கட்டுகள் எனக்குப் பிடித்தமில்லை.
சுமைகளை நான் வெறுக்கிறேன்.
இருளின் குடை விரியும்போது
என் இறக்கைகள் மடங்கிவிடுகின்றன.
நிபந்தனைகள் அதிகமுள்ள இடத்தில்
எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

உங்கள் மரபுகளை
மூட்டை கட்டி வையுங்கள்.
திணித்தலின் முதல் எதிரி நான்.
காலை முதல் இரவு வரை
என்ன செய்யவேண்டும் என்று
என் மூளையில் எழுதாதீர்.
எனக்கான நிகழ்ச்சி நிரல்களை
நானே எழுதிக்கொள்வேன்.

சட்டம், விதி, வழக்கம், முறை....
அய்யோ.. சர்வாதிகாரமே!
உனக்குத்தான்
எத்தனை புனைபெயர்கள்!

சுதந்திரம் என்ற பெயரில்
ஒரு சாக்லேட் கொடுத்தார்கள்.
பிரித்தால் ஒன்றுமில்லை.

காற்றே! என் முகத்தில் மோது.
ஒளியே! என் முன் நடனமிடு.
மழையே! என்னை நனை.
மண்ணே! எனக்கொரு மலர் கொடு.
பிரபஞ்சமே! எனக்குன் மடி வேண்டும்.

சுதந்திரமே!
ஏ... வெளிச்ச வார்த்தையே!
உனது கடலில்
ஒரு நதியைப் போல்
என் பெயர் கலக்கட்டும்!

( தினமலர் / 15-8-2000)

புள்ளிக் கவிதைகள் - 2

கண்ணீர் விட்டு வளர்த்ததனால்
மீண்டும் மீண்டும் கேட்கிறது
ருசி கண்ட வேர்.

--------------------------

எங்கே கிளம்பியதோ,
எங்கே திரும்புமோ
இந்தப் பட்டாம்பூச்சி!

--------------------------

சூரனின் தலைபோல்
வெட்ட வெட்ட முளைக்கும்
உண்மையின் வேர்.

--------------------------

நன்கு இழுத்து மூச்சுவிடு
மருத்துவர் சொல்கிறார்
ஆஸ்துமாக்காரனிடம்.

--------------------------

நெடுநேரமாய்க் கேட்கிறாய்
பேசு பேசு என்று
ஊமையிடம்.

--------------------------

கேட்கிறார் தியாகியின் பேச்சை
அடுத்து வருவது
சிம்ரன் பேட்டி.

--------------------------

கூண்டுக்கு வெளியேயும்
சிறைதான்
சிறகறுந்த பறவைக்கு.

--------------------------

மூன்று போதாது மகாத்மா!
நாற்றம் தவிர்ப்பதற்காக வேண்டும்
நான்காவது குரங்கு.

(இலக்கிய நந்தவனம் ஜூன் 2000)

Tuesday, August 09, 2005

விழிமறைவுப் பகுதிகள்

பாதாளச் சாக்கடைகளில்
கோவணத்தோடு மூழ்கும் மனிதன்
வாய்க்குள் நுழைந்த நீரைத்
தூ தூ தூ என்று துப்பும் இடம்.

குட்டை விளக்குமாற்றைப் பிடித்துக்
குனிந்து
கழிவறைத் தொட்டியைத் தேய்ப்பவனின்
சாப்பிடும் நேரம்.

கூவக் கரையோரம் நெடுநேரமாய்
இருட்டுவதற்காகக் காத்திருக்கும்
இயற்கை உபாதையால் துடிக்கும்
இளம் பெண்ணின் தவிப்பு.

கை, கால்கள் சூம்பிய நிலையில்
தெருவோரம் பிச்சை எடுப்பவனின்
உடலுறவு ஏக்கம்.

ஒரு பைசா மிட்டாய் கிடைக்காமல்
தினமும் ஏமாறும் சிறுவன்.

தூக்கி எறிந்த, தீர்ந்து போன
·பேர் அண்டு லவ்லி பாக்கெட்டைக்
கஷ்டப்பட்டுக் கிழித்து
இடுக்கில் இருக்கும் பசையைக்
கன்னத்தில் தேய்த்துக்கொள்ளும்
குப்பை பொறுக்கும் சிறுமி.

தீர்ந்துபோன ஷாம்பூ பாக்கெட்
பவுடர் டப்பா போன்ற
பளபளப்பான குப்பைகளைக்
கண்ணில் படும்படி கொலு வைப்பவர்கள்.....

இந்த முடிவுறாத பட்டியலை
அழுக்குகளின் தீட்டு என்றோ
ஆபாசங்களின் கூட்டு என்றோ
சொல்லிவிடாதீர்கள்.

சிலரின்
பல நேரங்கள் எழுதப்படுகின்றன.
பலரின்
சில நேரங்களும் எழுதப்படுவதில்லை.

எழுதப்படாத மனிதர்களின்
முற்றிலும் எழுதப்படாத நேரங்களை
இருள் அப்பியிருக்கிறது.

எழுத எழுதத்தான் அங்கே
சூரியன் உதிக்கும்.

இந்த விழிமறைவுப் பகுதிகள்
துயர்மறைவுப் பகுதிகள் ஆகட்டும்.

எழுதுகோல்களின் முனைகளில்
சூரியன் உதிக்கட்டும்.

(இலக்கிய நந்தவனம் - அக்டோபர் 2000)

ஓவிய மொழி

ஓவியர் நெடுஞ்செழியன், குதிரையை மையப்படுத்தி, எண்பதிற்கும் மேற்பட்ட நவீன ஓவியங்களை வரைந்து, ஓவிய மொழி என்ற தலைப்பில், நூல் ஒன்றை வெளியிட்டார். இதயம் பேசுகிறது சரவணா ஸ்டோர்ஸ் இதழினர், அந்த நூலிலிருந்து சில ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து, கவிஞர்கள் சிலரிடம் கொடுத்து, கவிதை எழுதச் சொன்னார்கள். அவ்வகையில் கீழ்க்காணும் ஓவியத்தை என்னிடம் கொடுத்து, கவிதை கேட்டார்கள். நானும் எழுதிக் கொடுத்தேன். அது, 17-3-2002 இதழில் வெளியானது. அக்கவிதை இங்கே:

Image hosted by Photobucket.com

வெட்ட வெட்ட
எனக்கும் தலைமுளைக்கும்!

அனுமனால்
பிடிக்க முடியாத
சூரியப் பழத்தைப்
பிய்த்துத் தின்கிறேன் தினமும்!

மாநகரங்களை எரிக்கும்
கொங்கைகள் இருப்பினும்
இன்னும் என் தோளில்
சமாதானப் புறா!

விடியற் சேவலை
ஈன்றெடுக்கக்
காத்திருக்கிறது
என் மரும உறுப்பு!

நான் ஈழத்துக்காரி!

Monday, August 08, 2005

தீபாவளி சங்கமம்

(தீபாவளிக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்கள் இருக்கின்றன. எனினும் சுமார் 5 ஆண்டுகள் முன் நான் எழுதிய தீபாவளி தொடர்பான படைப்பை இங்கு பதிந்து வைக்கிறேன்.)

பொங்கலுக்கான பொங்கல்
கிருஷ்ண ஜெயந்தி முறுக்கு
கார்த்திகை கடலை உருண்டை...
பலகாரங்கள் பலவும்
சங்கமிக்கின்றன.

சுடிதார், புடைவை,
ஜீன்ஸ், வேட்டி....
கைக்குட்டையிலிருந்து
கோட் வரை
சேர்கின்றன துணிமணிகள்.

சக்கரம், சாட்டை,
ரயில், ராக்கெட்...
பொட்டு வெடி முதல்
பத்தாயிர வாலா வரை
குவிகின்றன வெடிகள்.

உற்றார், சுற்றம்,
நட்பு, உறவு...
அண்டைவீட்டார் முதல்
அயல்நாட்டார் வரை
கூடுகின்றனர் மனிதர்கள்.

கிருஷ்ணர், முருகர்,
அம்மன், சிவன்...
வீட்டிலுள்ள எல்லாக்
கடவுளர்க்கும்
பூசை, படையல்.

ஒரு லட்சுமி வெடி வெடித்தது.
சிதறிய தாள்களை எடுத்துப் பார்த்தேன்.
'...ணக்கத்திற்குரிய
அல்லா....'
'நீங்கள் இரட்சிக்கப்படுவீ...'
'...ரணம் கச்சாமி'
'...ள்ளையார்பட்டி விநா...'
'பெரியாரின் கண்'.

( தினமலர் 26-10-2000)

மேலும் மூன்று கவிதைகள்

படிக்கத் தகுந்த முகம்

முன்னும் பின்னுமாய்
எத்தனையோ பேர்
மிதிவண்டியில் போனாலும்
என்னைத்தான் கேட்கிறார்கள்:
"லிப்ட்'

தேநீர்க் கடைகளில்
எத்தனையோ பேர்
நுழைந்து வெளியேறினாலும்
என்னைத்தான் கேட்கிறார்கள்:
"சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு
ஒரு டீ வாங்கித் தாங்க சார்'

நேற்றுகூட
எதிர்ப்புறத்தில் இருந்து
கஷ்டப்பட்டுச் சாலையைக் கடந்து
ஒரு முதிய தம்பதியர்
என்னிடம் கேட்டார்கள்:
"பிள்ளைகளிடம் கோபித்துக்கொண்டு
வந்துவிட்டோம்.
இருந்த 400 ரூபாய் தீர்ந்துவிட்டது.
வேண்டும்
ஊருக்குப் போகப் பணம்'

முகத்தை எப்படியோ
படித்து விடுகிறார்கள்.
அவர்களின் படிப்பைப்
பொய்யாக்க வேண்டி,
சிரிக்காமல்
உர்ரென்று பார்க்கும் முயற்சிகளில்
தோற்றுப் போகிறது என் முகம்.

----------------------------------
விலங்குகளின் கால்களில் சலங்கைகள்

ஆட்றா ராமா ஆட்றா ராமா
ஜல்ஜல் ஜல்ஜல் ஜலக்கு ஜலக்கு
ஆட்றா ராமா ஆட்றா ராமா.

அய்யாவுக்கொரு தோப்புக்கரணம்
அம்மாவுக்கொரு ஆட்டம் பாட்டம்
அக்காவுக்கு நடந்து காட்டு
பாப்பாவுக்குப் பாய்ந்து காட்டு.
ஆட்றா ராமா ஆட்றா ராமா

நெற்றியில் நாமம் ஜோராய்ச் சொக்காய்
கையில் வளையல் கழுத்தில் மாலை
வேளாவேளைக்கு வாழைப் பழங்கள்
வீதி உலாக்கள்! வேறென்ன வேண்டும்?!
ஆட்றா ராமா ஆட்றா ராமா

வீதிகள் தோறும் வித்தையைக் காட்டு
எல்லோரிடத்தும் சில்லறை கேளு
கத்துக்கிட்டது காமிக்கத்தானே
தாவுடா ஜோரா வாயு குமாரா.
ஆட்றா ராமா ஆட்றா ராமா

விலங்கின் கால்களில் சலங்கை இருக்கு
சலங்கை மட்டுமா சங்கிலியும்தான்.

----------------------------------

யார் அந்த முதல் ஆள்?

தாழ்தனை நீக்கித் தாழ்வுகள் விலக்கிச்
சூழ்பகை எல்லாம் தூள்தூளாக்கி
பாழ்இருள் பொசுக்கிப் பரிபூரணமாய்
வாழ்வினை வாழ வருகின்ற மனிதன்
யார் அந்த முதல் ஆள்?

சோதனை ஒன்றையும் சாதனை ஆக்கி
வேதனை சுருக்கி வித்தகம் பெருக்கிப்
பூதனை ஏந்திப் போர்தனைப் புரிய
தீதினை எல்லாம் தீர்த்துக் கட்டுவோன்
யார் அந்த முதல் ஆள்?

அடிபடத் துணிந்து அவமதிப் புணர்ந்து
இடிபல தாங்கி இடர்களைத் தாண்டி
வடிவுற நிமிர்ந்து வானிடிப் பதற்காய்
முடிமுள் தாங்க முன்வரு கின்றவன்
யார் அந்த முதல் ஆள்?

( அமுதசுரபி - டிசம்பர் 2004)

Sunday, August 07, 2005

மூன்று கவிதைகள்

மரண ஊர்வலத்தின் முன்

மரண ஊர்வலத்தின் முன்
நான் நடனம் ஆடுகிறேன்.
சீழ்க்கை ஒலிக்கும்
வெடிச் சத்தத்திற்கும் நடுவில்
நான் அபிநயிக்கிறேன்.
அழுகையும் மெளனமும்
அடர்ந்த கூட்டத்தின் முனைநான்
மயானத்தை நோக்கிய பாதையில்
வாழ்வின் தத்துவங்களை விளக்கியபடி
சுழன்றுச் சுழன்று
துள்ளித் துள்ளி
நகர்ந்தபடியே போகிறது என்
நாட்டியம்.
என் ஆடைக்கு வரையறை இல்லை.
என் அசைவுக்கு இலக்கணம் இல்லை
என் மேடைக்கு எல்லைகள் இல்லை
நவரசங்களின் கலவையாக
அறுசுவைகளின் சேர்க்கையாக
நிற்காத காற்றாக
நான் ஆடுகிறேன்.
உயிரற்றவற்றை ஏந்தும் மனிதரைப் பரிகசித்தபடி
லட்சியங்களின் வீழ்ச்சிக்கு வருந்தியபடி
கொடுமையின் தோல்விக்கு மகிழ்ந்தபடி
எண்ணற்ற உணர்வுகளோடு
நான் ஆடுகிறேன்.
வேகமாக வெகு வேகமாக
நகர்கிறது என் உடல்.
அகராதியில் இல்லாத சொற்களோடு
என் மொழி.
சமுதாயத்தைப் பிரதிபலிக்கிற
ஒரு கண்ணாடியாக என் முகம்.
கனவுகளோடு உரையாடும்
எனது மனம்.
எந்த நேரத்திலும்
எந்த நிலத்திலும் பதியலாம்
எனது கால்.

-------------------------------
கர்மயோகம்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்
க்ரார்ர்ர்ர்ர்ர்ர்
ருர்ர்ர்ர்ர்ர்
க்ளிங் க்ளிங் க்ளிங்
கீய்ங் கீய்ங் கீய்ங்
க்ஈஈஈஈஈஈங்
பட் பட் பட் பட்
க்ர்ர் க்ர்ர் க்ர்ர்
டமடம டமடம
ப்பாம் ப்பாம் ப்பாம்
இத்தனைக்கும் அசையாமல்
அந்த நாற்சந்தித் திட்டின்மேல்
அமர்ந்து
ஓர் எலியைக்
கிழித்துக்கொண்டிருக்கிறது
காகம்.

-------------------------------

சுடர்

வயிற்றிலொரு கடிகாரம் மணிய டிக்க,
வாய்க்குளத்தில் நீரற்று நாமீன் துள்ள,
துயிலுடுக்க விழியிரண்டும் துடிக்க, காரத்
துயருடுத்தி இமையிரண்டும் தடிக்க, கொண்ட
இயல்பனைத்தும் தலைகீழாய் எகிற, மொத்த
இயக்கமொரு சுழலுக்குள் அமிழ, ஆஹா
உயிர்வெளிச்சம் மின்மினிபோல் மின்ன, என்முன்
உருப்பெருக்கும் பசிச்சுடர்மம் விண்ணிடிக்கும்.


( அமுதசுரபி - அக்டோபர் 2004)

Saturday, August 06, 2005

காதல் கவிதைகள் சில

நம்மைச் சுற்றி...

என் இளமைத் தேன்கூட்டின் மீது
நீ பார்வைச் சிறுகல் வீசினாய்.
நம்மைச் சுற்றி
எத்தனை கனவுகள்...

------------------------------------

தலைகீழ் மாற்றம்

அவளை
ஒரு விளையாட்டுப் பெண்ணாகப்
பார்த்தேன்.
கடைசியில்
நானே அவளது
விளையாட்டுப் பொருளானேன்.

அவள் பேச்சை
மழலை எனச் சிரித்தேன்.
பிறகு
அவள் பாடுவதற்காக
நானே ஒரு பாடலாகி நின்றேன்.

அவளுக்குச் சொல்ல
நிறைய அறிவுரைகள்
என்னிடம் இருந்தன.
இப்போது
என் விரல்பிடித்து
அவள் அழைத்துச் செல்வதையே
விரும்பி நிற்கிறேன்.

------------------------------------

குழந்தையிடம் சிற்றாடு

பூகம்பத்துக்குப் பிந்தைய
ஆற்றைப் போல
உன்னைப் பார்த்தபிறகு
நான் திசைமாறிவிட்டேன்.

நீ சிரிக்கும்போது
மாலைநேர நிழலாய்
நீள்கிறது என் மகிழ்ச்சி.

நீ சினக்கையில்
உச்சிநேர நிழலாய்
பாதத்தின் கீழே
பதுங்குகிறது என் இன்பம்.

எந்தப் பக்கம் திரும்பினாலும்
மறிக்கிறது உன் நினைவு.

சிறு குழந்தையிடம்
சிக்கிய ஆட்டுக் குட்டிக்குக்
கவலையில்லை.
எனக்கினி ஏது கவலை?

------------------------------------

பெண்மை வந்தது

நெரிசலான சாலையிலே நெருப்பெனுமோர் பாலையிலே
நீர்சுமந்து காற்று வந்தது.
இரைச்சலான காரமான இறுக்கமான சுற்றளவில்
இனிக்கும்இசைப் பாடல் வந்தது.
கருகருத்த காலவெளி மருளுடுத்து மூடுகையில்
கர்ப்பூர தீபம் வந்தது.
உருக்குலைந்து திருக்கலைந்து உலகெறிந்த போதினிலே
ஒய்யாரப் பெண்மை வந்தது.

நாவறண்டு மெய்தளர்ந்து நடுக்காட்டில் நிற்கையிலே
நறுங்குளிர்நீர்ப் பந்தல் வந்தது.
பூவனத்து மண்வெடிக்க, பூச்சியத்துள் சதமடிக்க,
பொன்வானில் கங்கை வந்தது.
நோவெடுத்து நீர்வடித்து நோக்கழியும் வேளையிலே
நூதனக் களிம்பு வந்தது.
சாவெனக்குப் பக்கத்தில் சம்மணக்கால் இட்டபோது
சஞ்சீவிப் பெண்மை வந்தது.

பேசுமொழி புரியாமல் பிறநாட்டில் நிற்கையிலே
தாய்மொழிச்சொல் ஒன்று வந்தது.
காசிலாத வேளையிலே கடன்காரர் சூழ்கையிலே
கருவூலம் ஒன்று வந்தது.
ஏச்சுகளும் எள்ளல்களும் ஏறிவரும் அந்நேரம்
இதமான வார்த்தை வந்தது.
வீச்சுடைய விரிவானம் விரைந்தென்னைக் கவ்வுகையில்
விளையாடும் பெண்மை வந்தது.

( அமுதசுரபி - செப்டம்பர் 2004)

Friday, August 05, 2005

அம்பலம் கவிதைகள் 12-9-1999

இதயத்தில் வெடித்த வெடி.

காற்றைப் பார்க்கும் யுக்தியாய் அதற்குக்
கறுப்பு வர்ணம் அடித்தார் மனிதர்.

தேநீர்க்கடைக்காரர் கருணை உள்ளவர்
இல்லையென்றால் தண்ணீர்த் தொட்டியில்
புழுக்களுக்கும் இடம்தரு வாரா?

அறுந்த வாலைத் தனியே விட்டு
அகன்று விடுகிற பல்லியைப் போலே
அமைதியின் சிதிலம் துடிக்கத் துடிக்க
அருமை மக்கள் ஓடிப் போகிறார்.

சூரியக் கரண்டி வறுத்து வறுத்துத்
தீய்ந்து போன கத்திரிக் காய்போல்
ஏழைச் சிறுவன் எதிரே வருகிறான்.

வயிற்றிலே பசி! விழியிலோ நிசி!
மெல்ல நடந்தான். மெதுவாய் விழித்தான்.
கண்களுக் கெதிரே உணவு தெரிந்தது.
அதனை நோக்கி அவன் நகர்கையிலே......

சே! டிபன் பாக்சிலா குண்டு வைப்பது?

--------------------------------------------------------------------------------

சிறகுகள் நமக்குச் சுமையல்ல

கல்மீதில் இடித்தவரைக் கேட்டோம் என்றால்
கல்இடித்து விட்டதாகக் குற்றம் சொல்வார்!
சொல்லின்றித் தனக்குத்தான் சரியில்லாதார்
சூழ்நிலைமேல் குற்றத்தைச் சுமத்துவார்கள்!

அயர்ச்சியுளார், முயற்சியிலார், முதிர்ச்சி இல்லார்
அறிவதனைப் பயன்படுத்தும் பயிற்சி இல்லார்
தயக்கமுளார் மயக்கமுளார் எதிர்த்து நிற்கும்
சக்தியிலார் எந்நாளும் வீழ்ச்சி கொள்வார்!

திரட்சியுற வறட்சியற புரட்சி செய்வோம்!
திசையெங்கும் தீவளர்க்கப் புயல்வளர்ப்போம்!
மரணபுரம் தனைவென்று வரலா றாவோம்!
வளர்சிறகால் விரிவானை வளைத்துக் கொள்வோம்!

துயர்உடைய உயர்வடைய நாளும் இங்கே
தொகைதொகையாய் நம்பிக்கைப் பயிர் வளர்ப்போம்!
ஜெயமென்று ஜெயமென்று உளம் களிப்போம்!
சிறகிங்கு சுமையல்ல வரம் நமக்கு!

--------------------------------------------------------------------------------

திருமகள் நீ!

விழிச்சிறகுகள் அடித்திடுகையில் மனம் பறக்குதடி-உன்றன்
மொழி மரகதம் ஒளிவிடுகையில் மழை விறைக்குதடி.

மருத்துவமனை எனக்கெதற்கடி அருகினிலேநீ - உன்றன்
கருத்துருவினை வளர்க்கிறவனை வளர்த்திடவாநீ.

இசைத்தறிகளில் தினம்புடைவைகள் உனக்கென நெய்வேன் - அதிலே
விசைக்கவிகளை விதிவிதநிற அடுக்கினில் பெய்வேன்.

நினைவெனும் குளம் நிதம் கலங்குது எறிகிறவள்நீ-என்றன்
புனைவினில்உன் பொறிபறக்குது எரிகிறவன்நான்.

பரவெளிகளில் பறக்கிறஎனை இழுக்கிறமகளே-வண்ணச்
சமவெளிகளைப் பெருங்கடல்எனப் புதுக்கிடும் முகிலே.

தனிமைகளை எழுப்புகிற தனிப்பெருந் தலைவி-எங்கும்
இனிமைகளை நிரப்புகிற இமைக்கிற தமிழி.

வரம்தருபவள் மறம்தருபவள் ஒருதிருமகள்நீ - வெல்லும்
உரம்தருபவள் திறம்தருபவள் பெருங்கலைமகள்நீ.

உனக்கெதிரினில் அனைத்துவமையும் அடையுது தோல்வி-என்றன்
கணப்பொழுதுகள் அனைத்திலும்புதுக் கவிதையின் வேள்வி.

அலையடிக்குது அலையடிக்குது மனம்கரையலையா?
அனலடிக்குது அனலடிக்குது உளம் உருகலையா?

கனம்மிகுந்தஎன் கனவெனும் முகில் தரை இறங்கிடுமா?
கடல்நடுவுள மனப்படகது கரையினைத் தொடுமா?

--------------------------------------------------------------------------------

ஊரை ஊராக்குங்கள்

எல்லைகளின் பிள்ளைகளே! எழுங்கால வெள்ளிகளே!
ஏகாந்தக் கிள்ளைகளின் பாட்டு - செவி
ஏறுவதை நூறுவிதம் கேட்டு-மனம்
சொல்லுவதற் கில்லாத சொப்பனத்தில் மூழ்கிமிகச்
சொக்குவதை எப்படிநான் சொல்ல-இந்தச்
சூழலினை மீட்டுவிட்டீர் மெல்ல.

அந்திபகல்! மூடுபனி! குண்டுமழை! கண்ணிவெடி!
அத்தனையும் அத்தனையும் கடந்து-ஒவ்வோர்
அடியாக எடுத்துவைத்து நடந்து-இதோ
இந்தநிலம் சொந்தநிலம் இந்தியாவின் நந்தநிலம்
என்றுரைத்தீர் பீரங்கி வாயால் - அதை
எழுதி வைத்தீர் துப்பாக்கித் தீயால்.

வரிப்புலியே நன்கிதுபார்! வந்ததுபோல் போனதுபோர்!
வழியெங்கும் இடிந்தபடி வீடு - முதுலில்
மனைதிருத்தலே நமது பாடு - ஊரைச்
சரிசெய்வாய் இனிமேலும் சமரற்ற படிசெய்வாய்.
காஷ்மீரம் ஆனந்தக் கிண்ணம் - இணைந்த
கைகளில்தான் அமைதி மின்னும்.

மலர்களினால் கவசங்கள்! மனிதர்களால் பாலங்கள்!
கவிதைகளால் வாழ்த்துகள் சொல்லி-இன்பக்
கானங்களால் அவரை அள்ளி - எனப்
புலர்கிறது விழிக்குள்ளே! புலம்பிடுது விழிவெளியே!
பூபாளம் முப்போதும் சமைப்போம் - நகும்
புல்லாங் குழல்களாய் இமைப்போம்.

--------------------------------------------------------------------------------

கனவெட்டும் தூரம் வேண்டும்

உறக்கத்தை மீட்டு கின்ற
உலராத கனவே! நானும்
பறக்கின்றேன்! உலகம் என்னும்
பரப்பினை வளைத்து வானைத்
திறக்கின்றேன்! ஏகாந் தத்தில்
திளைக்கின்றேன்! என்னை மண்ணில்
இறங்கென்று சொல்கிறாயா?
இன்னும்போ என்கிறாயா?

பொழுதுகள்! நடனம்! பாட்டு!
புன்னகை! பூக்கள்! காதல்
மெழுகுகள்! அலைகள்! சேய்கள்!
மின்னிடும் விழிகள்! வேர்வை!
விழுந்தாலும் எழுதல்! காற்றின்
விளையாடல்! வெளியே ஊஞ்சல்!
எழுதாத கவிதை போலே
இவையெல்லாம் ஈர்க்குதேடா!

விண்ணெட்டும் மனிதக் கைகள்
விரியட்டும்! இன்னும் என்ன
பண்ணட்டும் என்று கேட்கும்
பரதெய்வம் வரட்டும்! எங்கும்
மின்னட்டும் மனித நேயம்!
மிளிரட்டும் ஞான பீடம்!
கண்ணெட்டும் தூரம் வேண்டாம்!
கனவெட்டும் தூரம் வேண்டும்!

நன்றி : அம்பலம் இணைய இதழ்