அண்ணாகண்ணன் கவிதைகள்: விழிப்பாவை

Thursday, August 11, 2005

விழிப்பாவை





கொய்யாப் பழத்தில் குடியிருக்கும் சில்வண்டே!
கொட்டம் அடிக்கின்ற கும்மிருட்டு வெளவாலே!
செய்யாப் பிறப்பே! சிறகடிக்கும் கொக்கே!
சிலிர்க்கின்ற காற்றில் வெடுக்கென்று பாய்ந்திடும்
ஒய்யாரச் சிட்டே! ஒளிப்பூக்கும் மின்மினியே!
ஓங்காரக் கோட்டானே! ஒத்தூதும் ஊர்க்கொசுவே!
மெய்யாகக் காற்றில் மிதக்கும் கச்சேரி!
பறக்கின்ற தோழரைப் பாராய் விழிப்பாவாய்!

மாய மழைவான்; மழிக்காத மண்கன்னம்;
மாறிலியாய்க் கோப்பை. விதவிதமாய் வண்ணங்'கள்'!
மையக் குழியம்; மகரந்தத் தூவியம்;
வண்டுவாய்ச் சீழ்க்கை; வயதுவரும் வைகறை;
தூய கிழக்கு; சுவரில்லாச் சித்திரங்கள்;
துய்த்துத் துணித்துத் துளையம் அடித்தாடி
ஏய நெகிழாமல் இன்னுமா தூக்கம்?
இமைஎறிந்து விட்டே எழாயோ விழிப்பாவாய்!

முட்டியிட்டுத் தாய்மடியை முட்டும் கருப்பாடு;
முத்தமிடும் தத்தை. முகையவிழும் மந்தாரை;
சொட்டுவிடும் கீற்று; சுழற்றிவிடும் பேரிளமை;
தொட்டுவிடும் பாட்டு; துவைத்துவிடும் நாதலயம்;
தட்டிலைகள் ஏந்தும் தடாகம்; மழலையுடன்
தத்திவரும் சிட்டுகள்; தாவிவரும் ஆழியலை
எட்டும் அசைவெல்லாம் காற்றின் வரிவடிவம்.
ஈதைப் பயின்று விரிவாய் விழிப்பாவாய்!

பேழை திறப்பதுபோல் பேசுகிற பைம்பெண்ணே!
பெய்யும் மழைக்கட்டி கையேந்தி, உள்ளங்கை
ஆழ உறைந்தே எறிந்து விளை யாடாயோ!
ஆர்க்கும் அருவிக்குள் காதடைய நில்லாயோ!
நாழிகள் சேமித்து நாத இயற்கைக்குள்
நட்டு வளர்த்து நிழல்காய வாராயோ!
தாழை இறுக்கித் திரைக்குள் புதையாது
தாகங்கள் தீர்த்துமீண்டும் தாராய் விழிப்பாவாய்!

மேகத்தின் மெந்நீழல் மெல்ல நகர்கிறது.
மேற்கின் அலகிற்குள் செம்பூச்சி வீழ்கிறது.
ஆக அகஅகழ்வில் அத்வைதம் பூக்கிறது.
ஐந்து புலத்தும் அமரம் வழிகிறது.
ஊகத்தின் பேரில் உடலை வருடுகிறோம்.
ஊறும் உயிரில் உருஅருவம் ஆகின்றோம்.
ஏகத் திரைவிழுங்கும் ஏக்கத்தில் ஆழாமல்
எங்கே தொலைந்தாய்? எழுவாய் விழிப்பாவாய்!

சாயும் காலங்கள் சயனத்தில் ஆழ்கையிலே
சாயல் தெரிகிறது சாரங்கீ! உன்இதழில்
தோயும் தொழிலைத் தொழப்புகுமென் சிந்தையிலே
தூறல் விழுகிறது தூவம்மே! நானுனக்கு
வேயும் விதானம் வெறிப்பரிவால் என்கையிலே
வெள்ளம் புரள்கிறது மாதங்கீ! என்னிடத்தில்
நேயம் இருக்கிறது. நீயும் இருக்கின்றாய்.
நித்தம் கனவிருக்கும். நீசொல் விழிப்பாவாய்!

வார்த்தையற்ற மெட்டுகளை வாயில் குதப்பி
வடித்த இசைச் சிற்ப வடிவமென வந்துநிற்கும்
நேர்த்தியான தேவியின் நித்திரையை ஆராய,
நீள்வெட்டுத் தோற்றத்தில் நானும் குறுக்குவெட்டுத்
தோற்றத்தில் அந்தத் துணைமயிலும் பூத்திருக்க,
தூவிகளில் என்கை துழாவித் துழாவியொரு
தேர்ந்த மயக்கத்தைத் தீட்ட, செருகும்உன்
தேவ சுயசரிதம் தேவை விழிப்பாவாய்!

நாடிய மேனகை சேலைத் தலைப்பின்
நயமிகு பாவனை நோக்காயோ! நீள்குழல்
சூடிய பூச்சரம் மெல்லிடை மேலிடும்
சுந்தர நாட்டியம் காணாயோ! அன்னவர்
தோடு ஜிமிக்கி துணைநடம் ஆடும்
சுறுசுறுப் பிற்குள் சுருளாயோ! எங்கெங்கும்
ஊடும் ஒளிக்கூழை ஒட்ட வழிக்காது
உறக்கம் தகுமோ உனக்கே விழிப்பாவாய்!

முத்தக் கறைபடிந்த கன்னங்கள்; செங்குருதி
முட்டிச் சிவந்துவிட்ட பாகங்கள்; பேராவல்
பித்துப் பிடித்தலையும் சித்தங்கள்; இல்லையிதில்
பின்னென்றும் முன்னென்றும் பேதங்கள்; அந்தரங்கம்
அத்துப் படியாகி ஆட்டங்கள்; தீபூத்த
ஆவி நிறையமிகு ஊட்டங்கள்; மூழ்கியெழில்
முத்தை எடுத்துவரும் நேரங்கள்; வாழ்வின்
வெளிச்சங்கள் என்றே விரிப்பாய் விழிப்பாவாய்!

'கிட்டுங்கால் கிட்டும்; கிடக்கட்டும்' என்றின்றிக்
'கிட்டாமல் விட்டோமோ' என்றே முழக்கமிடும்
கட்டிளங் காளையரும் கன்னியரும் சேர்ந்திருக்க,
கைக்குள் வலுவிருக்க, கண்ணில் ஒளியிருக்க,
நெஞ்சில் உரமிருக்க, நீதியெனும் வாளிருக்க,
நீசரின் சூழ்ச்சியின்முன் நீர்வடிய நிற்பதினும்
வெட்கப் படுமோர் விடயம்வே றில்லை
விசைமுடுக்கி என்தோழா இன்றே விழிப்பாவாய்!

நாலெழுத்துக் கற்றறிந்து நால்வர் உடன்பழகி
நாலுபேர் கையால் நறுக்கெனக் குட்டுவாங்கி
நாலுகால் பாய்ச்சலில் நாலுதிசை சுற்றிவந்து
நாலுகாசு பார்த்து, ஒரு நாற்காலி வாய்ப்பதற்குள்
நாலு கழுதை வயதேறி, பாரம்
நசுக்கிவிட, நாலுகால் இல்லாத கட்டிலை
நாலுபேர் தூக்கும் நலிவுற்ற வாழ்வினை
நாலிமையும் கொட்டி நகைப்பாய் விழிப்பாவாய்!

கேணி மிகப்பெரிது; கெட்டிச் சுவருண்டு;
கீர்த்தனம் பாடும் சகடை; கயிறுகொஞ்சம்
நாணிச் சிறிதுகோணும்; எத்தனையோ பேரழகு
நங்கையர்கை பட்ட நினைப்புத்தான்; உள்ளிறங்க
ஏணி வளைவாய்ப் படியுண்டு; கொஞ்சமே
எட்டிநாம் பார்த்தால் திகிலுண்டு; பாதாள
வாணிபம் போல வளர்ந்திருக்கும் தண்ணீரைப்
பார்க்க முடிந்தால் பார்த்துக்கொள் விழிப்பாவாய்!

சுற்றும் விசிறியே! சும்மா புலம்பாதே!
நேர்கீழே நின்றும்உன் மூச்சென்னை எட்டவில்லை.
வெற்றுச் சுழற்சி; வெறும்பயிற்சி! மின்சாரம்
வேறு குடிக்கிறாய்; வண்ணம் தொலைத்தாய்; உன்
அற்றைநாள் வீரம் நினைக்கிறேன். தென்றலை
அள்ளிக் கொடுத்தாய் அலையெகிற! இன்றுன்னைச்
சுற்றிவிட ஒற்றைக் கழிதேவை. காலச்
சுவடுகளின் மாறாட்டம் பாராய் விழிப்பாவாய்!

நிலத்தினை நீர்விழுங்கி நின்றதோர் காலமுண்டு
நீரை நிலம்விழுங்கக் காணுகின்றோம் இன்று.
நலந்தரு நீர்நிலைக்கு நல்ல சமாதியேபோல்
நஞ்சேறும் வேகத்தில் நீள்நெடு மாடங்கள்
உலக்கை மனிதர் ஒருநீள் வரிசையில்
ஓர்கைக்குப் பத்தாய்க் குடங்களுடன். யாகம்
வளர்த்தால் மழையென்பார் வண்ணம்பார். புத்தி
வளர்க்கும் வழிசொல்ல வாராய் விழிப்பாவாய்!

தோலில் சுருக்கம்; செவிகொஞ்சம் மந்தம்;
தொடுந்தொலைவோ தோன்றும் நெடுந்தொலைவாய்; ஊன்று
கோலில் நடக்கும்; குழறும் மொழியெழும்;
கோலயிளங் காலத்தில் மூழ்கும்; கரத்தினில்
காலில் நடுக்கம்; கடிகாரம் தாழும்;
கடல்சூழ் உலகம் அறையாய்க் குறுகும்; மென்
மேலும் தனிமை விரியும் முதுமையின்
மேன்மையை மென்மையாய் மீட்டு விழிப்பாவாய்!

உத்தமா எங்கே? உறங்கும்இவ் வூரில்
ஒளிந்துகொண்டா? யாரோ எறிந்த குப்பையில்
பத்தோடு மற்றொன்றாய்? வெங்காற்றில் சுற்றுகிற
பாலிதீன் பையினுள்? கத்தலிடை கூவலாய்?
புத்தம் புதிய படச்சுவ ரொட்டியைத்
தின்னும் பசுவைத் தடவிக் கொடுத்தபடி?
பொத்தாம் பொதுவில் கரித்துண்டு வாக்கியங்கள்
தீட்டும் அவனெங்கே? தேடேன் விழிப்பாவாய்!

கையில் கழியும் கழியில் இசையுமாய்க்
காற்றைத் தடவும் கருமை உலகம். இம்
மையில் உறையும் வடிவ கணங்கள்
மயங்குழல் வாழ்வின் பெருஞ்சல னங்கள்.இவ்
வையவான் திக்கெலாம் மையம் இழுக்க
விழியும்அதில் பார்வையும் வேண்டும். இறந்தபின்
தாயேன் உனையிங்கு தானமாய். ஊழிதாண்டும்
தக்கவாய்ப்பைத் தக்கவைத்துத் தங்கு விழிப்பாவாய்!

வெய்யில் மழைக்குள் வெளிச்சஇருள் நின்றமர,
வித்துமரம் ஆழ்ந்தோங்க, மொட்டுமலர் ஆடிஅற,
மெய்ப்பொய்யாய்க் காட்சி விழுந்துஎழ, காற்று
மிதவேக மாய்க்கதவை மூடித் திறக்கவொரு
தெய்வ மிருகம் சிரித்துஅழ, எங்கெங்கும்
சேய்க்கிழமாய்க் கேட்கும் ஒலியமைதி, உள்வெளியில்
ஒய்யார கோரம் உயிர்ச்சவமாய்த் தீக்குளிரில்
ஓய்வாய் உழைக்கப் பயில்வாய் விழிப்பாவாய்!


அமுதசுரபி தீபாவளி மலர் 2004

No comments: