Saturday, October 25, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 7


மண்ணில் விழுந்த மரப்பாச்சி
மழையில் நனைந்து துளிர்விட்டு
கண்முன் எழுந்து நிற்கிறதோ
பெண்ணே உனது உருவத்தில்!

====================

உன் கண்வெட்டு
ஒரு மின்னல்வெட்டு.
நீ காணாவிட்டால்
அதுவே என் மின்வெட்டு.

====================

காற்றில்
உன் கூந்தல் இழைகள்
ஓயாமல் வரைகின்றன
ஓவியங்கள்.

====================

உன் நினைவெனும்
உத்திரத்தில் ஏறிவிட்டு
இறங்கத் தெரியாச்
சிறுவன் நான்.

====================

கெட்டிக்காரி நீ!
சிரித்து மழுப்பிச்
சொல்ல மறுக்கிறாய்
அந்த ஒரு சொல்லை.

====================

ஆயிரம் மரங்கள்
அசைகின்றன
ஒரு காற்றில்.

========================================

படத்திற்கு நன்றி: பிரபாகரன்

========================================

நன்றி: தமிழ் சிஃபி தீபாவளி மலர்

Thursday, October 16, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 6நாவால் இதழைத் துடைக்கிறாய்
நகத்தை மெல்ல கடிக்கிறாய்
பூவாய் இதயம் துடிக்கிறாய்
புன்னகை விருந்து படைக்கிறாய்.

=======================

இருகரம் தூக்கி
சேலையைப் பிடித்து
சிறுமழைக்கு அஞ்சி
குறுநடை பயின்றாய்.
மயில் அங்கே தோற்றது.

=======================

ரேகை இல்லாத உள்ளங்கை
தோகை இல்லாத ஆண்மயில்.
வெண்ணிலா இல்லாத வான்.
நீ இல்லாத நான்.

=======================

வாய் திறவாமல் கொட்டாவி விடவும்
சத்தம் வராமல் தும்மவும்
யாரும் அறியாமல் வாயு பிரிக்கவும்
முயல்கிறார்கள்.
ஐயோ பாவம் நாகரிகம்!

=======================

பருவத்தே பயிர் செய்.
இப்படிக்கு,
பயிர் செய்யாதவன்.

=======================

Sunday, October 12, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 5


மின்னல் கிறுக்கி எழுதிய
முகவரியை ஏந்தியபடி
வழிகேட்டு அலைகிறது மேகம்.

=======================

பறக்கிற பறவை
இறங்கி வரும்.
வந்தே தீரும்.

=======================

விருப்பம் போல்
சுற்றிக்கொண்டிருக்கிறது
ரெயில் பூச்சி.

=======================

சுடும் எனத் தெரிந்தும்
விரல் வைக்கிறேன்
இந்தத் தீயில்.

=======================

நீ
கொஞ்சம் சிரித்தால்
உலகம் பிழைக்கும்.
கொஞ்சி சிரித்தால்
உலகு தழைக்கும்.
இதழ்விரி என் சுந்தரி.

=======================

Wednesday, October 08, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 4நேற்றிலிருந்து
ஜோசியம் பிடிக்கிறது எனக்கு
உன் கையைப் பிடிக்கும்
வாய்ப்பு கிட்டியதால்.

=======================

உன் விழியில் கருவண்டு.
அது துளைப்பதோ
என் மனத்தை.

=======================

நீ யாரெனக் கேட்டவரிடம்
என் சொந்தம் என்றேன்.
எனக்குச் 'சொந்தம்' ஆவாயா?

=======================

அச்சச்சோ என
நீ உச்சுக் கொட்டுவது
இச்சுக் கொட்டுவது போல
இனிக்கிறது.

=======================

தக்காளி பிடிக்காது
என்றாய் நீ.
அதைக் கேட்டு அழுது அழுது
மேலும் மேலும்
எப்படி சிவந்துவிட்டது பார்!

=======================

படத்திற்கு நன்றி: http://www.palm-reading.co.uk

Saturday, October 04, 2008

ஒரு 'ப' திருப்பம்வெளியே செல்பவர் யாராயினும்
அவர் கை நீட்டி அழைத்தால்
உடனே தாவும் குழந்தை நான்.

அழைக்காவிட்டாலும்
நானே அவர் தோளில் ஏறி,
தெரு முனை வரையாவது
சென்று திரும்புவேன்.
ஊர் சுற்ற அவ்வளவு ஆசை.
வீட்டிலிருந்து விடுதலை பெறவும்.

என் நிறுத்தம் வந்த பிறகும்
இறங்க மறுத்து
அழுது அடம் பிடிக்கிறேன்.
குண்டுக் கட்டாகத் தூக்கி
இழுத்துச் செல்கிறார்கள்.
பயணிக்கப் பேராவல்.
வீட்டில் இருக்க அல்ல.

கீழே கிடக்கும் காகிதத்தை
எடுத்துக் கொடுக்கச் சொன்னாலும்
நான் விதிக்கும் முதல் நிபந்தனை
என்னை இந்த இடத்திற்கு
அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே.
உலாவப் பிடிக்கும்
உள்ளே இருக்க அல்ல.

குறுகிய, நீண்ட சுற்றுலாக்கள்
திட்டமிட்ட, திட்டமிடாத பயணங்கள்... என
அடிக்கடி காணாமல் போவேன்.
குறைந்தபட்சம்
அண்டை அயல் வீடுகளுக்காவது.
வீட்டுக்கு வெளியே தான்
தொடங்கும் என் உலகம்.

இன்று
ஊர் ஊராகச் சுற்றும் பணி எனக்கு.

இப்போதெல்லாம்
வீடு திரும்ப மனம் ஏங்குகிறது.
அந்த 4 சுவர்களே போதும் எனக்கு.
ஆம்
இப்போது
வீட்டில் இருக்கிறாய் நீ!

Wednesday, October 01, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 3நெடுநேரமாய்க்
கரைகிறது காகம்.
விருந்தே நீ
என்று வருவாய்?

=======================

என் உயிரை உடலுடன்
தைப்பதால்தானோ
நீ
தையல்?!

=======================

வானில் படபடக்கும்
பட்டம் நான்.
என் நூல்
இதோ உன்னிடம்.

=======================

உன் நினைவலைகளில்
நீந்தும் சிறு மீன் நான்.
கடல் எதற்கு?
உன் தொட்டி(ல்) போதும் எனக்கு.

=======================

என் எழுத்தைப் படித்து,
'கவிதை கவிதை' என்றாய்.
உன் பெயரை ஏன்
இரு முறை சொன்னாய்?
அது இங்கே
இரு நூறு முறை
எதிரொலிக்கிறது.

=======================

படம்: Sunset at the North Pole with the moon at its closest point.