அண்ணாகண்ணன் கவிதைகள்: 2007

Thursday, December 20, 2007

சில பறவைகள்; சில காட்சிகள்

காலையில் ஒரு கிளியைப் பார்த்தேன்.
எங்கோ
அவசரமாகப் பறந்துகொண்டிருந்தது.

** ** **

மின்சாரக் கம்பி மீது
ஊஞ்சலாடுகின்றன
சிட்டுக் குருவிகள் சில.

** ** **

அவ்வப்போது நிமிர்ந்து பார்த்தபடி
தன் குஞ்சுகளுடன்
கூட்டமாக மேய்கிறது கோழி.

** ** **

மரமே இல்லாத என் வீட்டு
மதில் சுவரில்
நெடுநேரமாய் அமர்ந்திருக்கிறது
மரங்கொத்திப் பறவை.

** ** **

ஓடாத கூவத்தில்
படுத்துக் கிடக்கிறது எருமை.
எருமையின் மீது
நின்றுகொண்டிருக்கிறது கொக்கு!

** ** **

வண்ணத்துப் பூச்சி
உட்காரும் நேரத்தைவிடப்
பறக்கும் நேரமே அதிகம்!

========================

நன்றி: தமிழ்சிஃபி

Tuesday, August 07, 2007

நீங்களாவது பார்த்தீர்களா?

Photo Sharing and Video Hosting at Photobucket

காசியில் பார்த்தேன்
பூரியில் பார்த்தேன்
காஞ்சியில்கூட பார்த்தேன்
சென்னையில் மட்டும் காணவில்லை
குரங்குகளை.

கைப்பொருளைப் பறித்து
மரங்களிலும்
கோயில் கோபுரங்களிலும் அமர்ந்துண்ணும்
அந்தக் குரங்குகள் எங்கே?

கங்காரு போல் தாய்வயிற்றைக்
கட்டிக்கொண்டு அசைந்தாடிச் செல்லும்
குட்டிக் குரங்குகள் எங்கே?

சமர்த்தாக உட்கார்ந்து
பேன் பார்க்குமே!
அவை எங்கே?

பல்லைக் காட்டிச் சிரித்து
தலைகீழாகத் தொங்கி
கிளைக்குக் கிளை தாவி
ஓடி விளையாடி
வாழ்வை ரசித்துக்கொண்டிருந்த
அவை எங்கேதான் போய்விட்டன?

குரங்கே எனத் திட்டுவதுகூட
குறைந்துவிட்டது!

வண்டலூரில் அடைத்து வைத்திருக்கிறார்கள்
சிலவற்றை.
டிஸ்கவரி அலைவரிசையில்
கொஞ்சம் பார்க்க முடிகிறது.
அனிமேஷன் படங்களிலும் சில உண்டு.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை
சாத்துகிறார்கள் பக்தர்கள்.
அவற்றையும்
மனிதர்களே தின்றுவிடுகிறார்கள்.

அட பாவமே!
சங்கிலியில் கட்டிக்கொண்டலையும்
குரங்காட்டியைக்கூட காணவில்லையே!

நன்றி: தமிழ்சிஃபி சுதந்திர தினச் சிறப்பிதழ்

==================================
குறிப்பு: மேலே உள்ள படத்தை ஒரிசாவின் நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் எடுத்தேன்.

Sunday, July 15, 2007

மகராசர் காமராசர் (சிறுவர் பாடல்)



வாசிக்கக் கல்விச் சாலை
வயிற்றுக்கு நல்ல சோறு!
தேசத்தின் வளத்தைக் கூட்ட
திக்கெட்டும் அணைகள்! ஆலை!
யோசிக்கும் நொடியில் இந்த
யுகம்வெல்லும் மனித நேயர்!
மாசில்லை எனப்பார் போற்றும்
மகராசர் காம ராசர்!

வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
வகுப்புகள் ஆறே கற்றார்!
பாட்டாளி அவரின் பேரில்
பல்கலைக் கழகம் இன்று!
வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
மீட்பராய் வந்து காத்தார்!
நேயத்தின் எளிய செல்வர்
நிகரில்லாக் காம ராசர்!

---------------------------------
ராணி காமிக்ஸ் இதழில் (2002இல் என்று நினைவு) வெளிவந்தது.

Thursday, May 24, 2007

தோசை நாடு தமிழ்நாடு!

அவர்ஒரு திட்டம் போடுகிறார்
இவர்அதைத் தூக்கிப் போடுகிறார்
இவர்ஒரு திட்டம் போடுகிறார்
அவர்அதைத் தூக்கிப் போடுகிறார்
போட்டதைத் திருப்பிப் போடுவதில்
போட்டா போட்டி போடுகிறார்
சூட்டோ டு திருப்பிப் போடுவதால்
தோசை நாடு தமிழ்நாடு!

குட்டி குட்டியாய்க் கட்சிகள் - அவை
கூட்டணி சேரும் காட்சிகள்
குட்டிக் கரணப் பட்சிகள் - ஒரே
குட்டையில் ஊறிய மட்டைகள்
கட்சிப் பெயர்கள், கொடிநிறங்கள்
மாறினும் கொள்கை மாறாது.
தட்டினில் மாவு வேகிறது
இட்டிலி நாடு தமிழ்நாடு!

காவிரி, முல்லைப் பெரியாறு,
கற்பு, மீனவர், ஒதுக்கீடு
காவி பச்சை இளநீலம்
கருப்பு சிவப்பு எனமோதல்.
எல்லை இல்லாச் சிக்கல்கள் - இடை
இடையே கொஞ்சம் விக்கல்கள்
கலகக் கூடு! ஓபோடு! -
இடியாப்ப நாடு தமிழ்நாடு!

டாஸ்மாக் லாபம் குவிக்கிறது
இலவச வணிகம் நடக்கிறது
வீங்கிக் கிடக்குது விலைவாசி
அழுது கிடக்குது தொலைக்காட்சி
கொசுக்கள், நோய்கள் குறைவில்லை!
பொசுக்கும் கோடை வெயிலிலே
கொப்புளம் பொங்கும் திருநாடு
பொங்கல் நாடு தமிழ்நாடு!

நன்றி: தமிழ்சிஃபி

Monday, January 22, 2007

உதடு ஒட்டி ஒரு பாடல்

உதடு ஒட்டாமல் ஒரு பாடல் இயற்றினேன். அதைக் கண்டு தோஹாவிலிருந்து ஜகன், இளம் உள்ளங்கள் உதடு ஒட்டாதிருப்பது குறித்து நயமுடன் வருந்தினார். அவரது வருத்தத்தைப் போக்க, இதோ முழுக்க முழுக்க உதடு ஒட்டியும் குவிந்தும் ஒரு பாடல். சித்திரக் கவியில் ஒட்டியம் என இந்த வகைப் பாடல் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிக்கையில் உதடுகள் ஒட்டும் அல்லது குவியும்.

இதே முயற்சியை 10 ஆண்டுகளுக்கு முன்னும் மேற்கொண்டேன். இன்றைய முயற்சியின் பயன் இது:


பம்மிப் போகும் பொம்மி - ஓ
பிம்பம் கும்பம் கும்மி!
பொம்மைப் பாம்பைப் பாரு - வா
சும்மா ஊது ஜோரு!

சூதும் வம்பும் சூழும்
சோம்பும் கூம்பும் வீழும்!
போதும் போதும் கூடு
பாயும் தும்பி பாடு!

வறுமை வெறுமை வெம்மை
கொடுமை கொடுமை கொடுமை!
பொறுமை புதுமை முழுமை
பெருமை பெருமை பெருமை!

Sunday, January 21, 2007

உதடு ஒட்டாமல் ஒரு பாடல்

அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும் என்று ஒரு புதிர் உண்டு. அதற்கு விடை, 'உதடு' தான். அண்ணன் என்று உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டா. தம்பி என்கிற போது ஒட்டும்.

திருக்குறளில் சில பாடல்கள், உதடு ஒட்டாமல் வருபவை.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

என்பது அவற்றுள் ஒன்று.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இல

என்பதையும் உதடு ஒட்டாத பாடலுக்குக் காட்டாகக் கூறுவது உண்டு. ஆயினும் இதில் நோதல் என்ற சொல் வருகிறது. நோ என்று உச்சரிக்கையில் உதடு ஒட்டாவிட்டாலும் குவிகிறது. உதடு குவியாமலும் இருக்குமேயானால் அதுவே இந்த வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளோ, அதன் இன எழுத்துகளோ, கூட்டு எழுத்துகளோ இடம் பெறாமல் ஒரு பாடலை இயற்றினால் அது, இயல்பாகவே உதடு ஒட்டாத பாடலாக இருக்கும். மேலும், வ என்ற எழுத்தினை உச்சரிக்கையில் உதடு ஒட்டவில்லை. ஆனால், கீழுதடு, மேல்வரிசைப் பற்களில் படுகின்றது. இந்த வகையான ஒட்டுறவு கூட இல்லாமல் பாடவேண்டும் என்பது என் விருப்பம்.

உதடு ஒட்டாத பாடல், சித்திரக் கவிகளுள் ஒரு வகையாக இடம் பெற்றுள்ளது.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு 44 அடிகளில் இத்தகைய பாடல் ஒன்றை எழுதினேன். இன்று அதை எடுத்துப் பார்த்தேன். அதில் சில திருத்தங்கள் செய்து, 12 அடிகள் கொண்ட பாடலாகச் சுருக்கினேன். உதடு ஒட்டாமலும் குவியாமலும் கலி வெண்பாவில் அமைந்துள்ள அந்தப் பாடல் இங்கே:

காதல் இசை

காதல் இசையே! கனாக்கணையே! என்திசையே!
நாதக் கடலே! நன்னதியே! என்நிதியே!
ஆசைக் கிளியே! அதியெழிலி ஆயிழையே!
நாசிநிறை காற்றே! நடையழகி நாயகியே!
கண்ணே! கனியே! கனகநிகர் கன்னிகையே!
தண்ணீர்த் தணலே! தயைநிறை தாயே!
அலையே! அலையில் கயலே! கயலின்
கலையே! கலையின் நிலையே! நிலையேன்நீ!
நீசென்றால் அங்கே நிழலாய் நிறைகின்றேன்
நீசிரித்தால் சில்லென நெஞ்சே சிரிக்கின்றேன்!
தித்திக்கத் தீரன் திளையாய்த் திளைத்திட
இத்திக்கைக் காண்நீ இனி!

Tuesday, January 16, 2007

வல்லினம் - மெல்லினம் - இடையினம்

ஒரே இனம்கொண்ட எழுத்துகளை மட்டுமே கொண்டு எழுதப்படும் பாடல்கள், சித்திரக் கவியில் வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு என்பவையாக இடம் பெற்றுள்ளன. கவி காளமேகம், 'க' என்கிற ஒரே எழுத்தின் இனங்களைக் கொண்டே ஒரு பாடல் இயற்றியுள்ளார்.

வல்லினப் பாட்டு

க,ச,ட,த,ப,ற ஆகிய வல்லின எழுத்துகளை மட்டுமே கொண்டு வெண்பா இயற்ற இன்று நான் மேற்கொண்ட முயற்சி இது >>>

கடுகடு காடு; கிடக்குது கோடு;
படபடப் போடுகூப் பாடு! - திடுக்திடுக்!
செப்பக் கடிது; சிடுக்கு தடுக்குது
தப்பச் சிறுபாதை தேடு!


மெல்லினப் பாட்டு

ங, ஞ, ந, ண, ம, ன ஆகிய மெல்லின எழுத்துகளை மட்டுமே கொண்டு ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் இயற்றிய வெண்பா இது >>>

மான்நீ! மணிநீ! மனமும்நீ! மண்ணும்நீ!
நான்நீ! நமனும்நீ! ஞானம்நீ - மீன்நீ
நனிமோனம் நன்னும்நீ நாணுமினம். மௌன
மினிமின்னும்! மானம்நீ மா!


இடையினப் பாட்டு

ய,ர,ல,வ,ழ,ள ஆகிய இடையின எழுத்துகளை மட்டுமே கொண்டு ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் இயற்றிய வெண்பா இது >>>

வல்லவ ரல்லார் வளையாரா? வாயவிழ
வில்லவரே! வாயாரை வேல்விழியால் - வெல்லுவீ
ருள்ளவரில் வாழ்வுளா ரில்லவரே! யாழுளா
ரள்ளுவ ருள்ளவரை! யார்?

ஏழே எழுத்துகளில் ஒரு கவிதை

தானமும் கொடையும் என்ற தலைப்பில் இராம.கி நல்லதொரு பதிவினை இட்டுள்ளார். அதில் ஈ, தா, கொடு ஆகிய சொற்களைத் தொல்காப்பிய நூற்பாக்களுடன் விளக்கியுள்ளார்.

இதே ஈ, தா என்ற எழுத்துகளைக் கொண்டு முன்பு ஒரு கவிதை முயற்சியில் நான் ஈடுபட்டதுண்டு.

1996இல் வெளிவந்த என் பூபாளம் என்ற கவிதைத் தொகுதியில் ஓரெழுத்து ஒருமொழிகளைப் பயன்படுத்தி, ஏழே எழுத்துகளில் ஒரு கவிதை யாத்திட முயன்றேன். அது:



சீ

தா

போ



பே



----------------------------------------------------

இது, இருவருக்கு இடையிலான உரையாடல்.

காட்சி 1:

முதலாமவன், கீழ் நிலையிலிருந்து 'ஈ' என இரந்து கேட்கிறான். இரண்டாமவன் 'சீ' என இகழ்ந்து விரட்டுகிறான்.

காட்சி 2:

இப்போது எண் 1, கொஞ்சம் வளர்ந்துவிட்டான். இரண்டாமவனோடு சம நிலைக்கு வந்துவிட்டான்; எனவே 'தா' எனக் கேட்கிறான். அதற்கு எண் 2 ஒப்பவில்லை. 'போ' என மறுத்து விலக்குகிறான்.

காட்சி 3:

இப்போது எண் 1 சினம் அடைகிறான். தரப் போகிறாயா இல்லையா என மிரட்டும் விதமாக, 'ஏ' என அதட்டுகிறான். அதைக் கண்டு எண் 2, 'பே' என அஞ்சுகிறான்.

இந்த 3 காட்சிகளையும் நோக்கும் மூன்றாம் ஆள் ஒருவர், 'ஓ' எனப் புரிந்துகொள்கிறார்.

இந்த 3 காட்சிகளும் உடனுக்குடன் நிகழுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகும் இவ்வாறு நிகழலாம். இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தால், அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது முதல், இன்று ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பெற்றது வரை பலவற்றையும் இந்த 7 எழுத்துகள் எடுத்து இயம்புவதை உணரலாம்.

Monday, January 15, 2007

என்பெயர் சக்கரக் கட்டி

Photobucket - Video and Image Hosting

என்பெயர் சக்கரக் கட்டி
எதிலும்நான் ரொம்ப சுட்டி
என்னோடு போட்டி போட
எழுந்து வா சிங்கக் குட்டி!

எனக்குண்டு நண்பர் கூட்டம்
எந்நாளும் ஆட்டம் பாட்டம்
தினந்தோறும் காலை ஓட்டம்
சிறுநேரம் வீட்டுத் தோட்டம்!

படிப்பினை ஒருகை பார்ப்பேன்
விளையாட்டை மறுகை பார்ப்பேன்
துடிப்புடன் கலைகள் கற்பேன்
துணிவுடன் தலைமை ஏற்பேன்!

அழுக்கினை அணிய மாட்டேன்
அழுகுரல் எழுப்ப மாட்டேன்
விழுப்புண்ணுக்கு அஞ்ச மாட்டேன்
வேங்கைநான் கெஞ்ச மாட்டேன்!

தவறென்றால் ஒப்புக் கொள்வேன்
சரியாகத் திருத்திக் கொள்வேன்
கவலைக்கு விடை கொடுப்பேன்
கவனிப்பேன் கவனிக்க வைப்பேன்!

சுவருண்டு சித்திரம் உண்டு
சொல்லுண்டு செயலும் உண்டு
தவமுண்டு வரங்கள் உண்டு
தன்மான வெற்றி உண்டு!

நன்றி: வடக்கு வாசல், ஜனவரி 2007

நன்றி: தமிழ்சிஃபி பொங்கல் சிறப்பிதழ் 2007

Sunday, January 07, 2007

எஃப் தொலைக்காட்சி



நூல் சேலை இங்கே
நூலே ஆடை அங்கே.

மறைப்பதற்காக அணிந்தனர் அன்று
காட்டுவதற்காகவே அணிகின்றனர் இன்று

நடந்துகொண்டே இருக்கிறார்கள்
நிற்கவேயில்லை
மனத்தில்.

அய்யா ஒளிப்பதிவாளரே!
பாவம் அவர்கள்.
முகத்தையும் காட்டுங்கள்!

தொழிற்சாலைப் பண்டமாய் அழகு
ஒப்பனைப் பெண்டிர் ஊர்வலம்
செய்கை அனைத்தும் செயற்கை.

வெளிப்படையாக நடக்கிறார்கள்.
அதை இங்கே
ரகசியமாகப் பார்க்கிறார்கள்.

திறந்துவைத்த பண்டம்
ஈக்கள் மொய்க்கின்றன
'களை' கட்டுகிறது வணிகம்!

Monday, January 01, 2007

இதுவா? அதுவா?

Photobucket - Video and Image Hosting

காபிக்கும் தேநீருக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை

வீணை இசைக்கும் சிதார் இசைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

நட்பையும் காதலையும் பிரித்தறிய முடியவில்லை

காதலையும் காமத்தையும்கூட.


இப்போது தொலைபேசியில் பேசுபவர் எந்தச் சீனிவாசன்?

பரிமாணமா? பரிணாமமா?

weatherஆ? whetherஆ?

இப்போது நான் அணிந்திருக்கும் சட்டை என்னுடையதா? என் தம்பியுடையதா?



இந்த இனிப்புக்குப் பெயர் என்ன? ஜாங்கிரியா? ஜிலேபியா?

நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருந்த என் வாகனம் எங்கே?

ஒரே நிற மேசை, இருக்கைகள் கொண்ட என் அலுவலகத்தில் என் இருக்கை எது?

துயில் நீங்கிய வேளையில் நான் காண்பது காலையா? மாலையா?


என் தோட்டத்தில் மேயும் எல்லா ஆடுகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.

ஆடுகள் மட்டுமா?