அண்ணாகண்ணன் கவிதைகள்: January 2022

Wednesday, January 26, 2022

விழித்தெழுந்த இந்தியா


அண்ணாகண்ணன்


தகதகக்கும் அகமுகத்து நகைநமக்குச் சித்திரம்

சகலருக்கும் சகலமென்ற இதுநமக்குத் தத்துவம்

நிகரிலாத நெறியறங்கள் நிதம்நமக்குச் சத்தியம்

பகைவருக்கும் அருளுகின்ற அருள்நமக்கு நித்தியம்


மனிதனென்ற பெருமிதத்தை வழியவிட்ட நம்முகம்

கனிவுமிக்க மனம்பனிக்கப் பளபளக்கும் நம்விழி

இனிமைமிக்க மதுரகாதல் இசைததும்பும் நம்குரல்

இனிதுவக்கும் பெரிதுவக்கும் இளகிநிற்கும் நம்முயிர்


யுகயுகத்துக் கருச்சுமந்து விழித்தெழுந்த இந்தியா

ஜெகஜெகத்தை வழிநடத்தும் தேசம்இந்த இந்தியா

வகுவகுத்து இடரனைத்தும் சிதறடிக்கும் இந்தியா

பகுபகுத்து முனைகுவித்துப் பணிமுடிக்கும் இந்தியா


செயல்சிறந்து இயல்சிறந்து பெயல்சிறந்து வாழ்கவே

பயில்சிறந்து எயில்சிறந்து ஒயில்சிறந்து வாழ்கவே

பயிர்சிறந்து உயிர்சிறந்து உயர்சிறந்து வாழ்கவே

நயம்சிறந்து லயம்சிறந்து சுயம்சிறந்து வாழ்கவே


அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.


ஓவியம் - வி.கிருத்திகா

Wednesday, January 05, 2022

தொலைக்காட்சி விவாதம்

நீ அடிமை
இருவருமே விரல்நீட்டிச் சொல்லிக்கொண்டார்கள்!
நீ முட்டாள்
உதடு துடிக்க ஏசிக்கொண்டார்கள்!
நீ பொய்யன்
கண்சிவக்கக் கடிந்துகொண்டார்கள்!
நீ துரோகி
குரல் அதிரக் கூச்சலிட்டார்கள்!
நீ பைத்தியம்
மேசையை அடித்ததில் பறந்தது தூசி!
அவர்கள்
ஒருவரை ஒருவர் அறிவார்கள்!
அறியாதவர்கள்
பார்வையாளர்களே!
--------------------------
அண்ணாகண்ணன்
05.01.2022