Sunday, January 30, 2011

புது சாத்திரம் படைப்போம்


வடிவற்புத விடிகாலையில் தொடங்கிட்டது பயணம்
அடிஉந்தியில் பசிஉந்திட இடர்ஆயிரம் தொடரும்
குடல்வற்றிடக் கடல்வீதியில் நடையாறிடும் பரவர்
முடப்புன்னகை புரியாதொரு முழுநாள்அவர் கனவு.

கடலோடிடும் படகுக்கதன் துடுப்பென்பது சகடம்
உடனாடிடும் உடலங்களில் உழைப்பென்றொரு மகுடம்
நடுமத்தியில் அலைமேடையில் கயலாடிய நடனம்
படுமோர்கணம் வலைஞர்மனம் அடடாவென மகிழும்.

விடம்வென்றிடும் திடம்உண்டெனும் சுடரோடொளிர் வதனம்
நடுசூரிய நடவால்எழில் வியர்வைப்பயிர் விளையும்
படும்பாட்டினில் கிடைக்கின்றது இவருக்கொரு கவளம்
தொடுமுன்னது மறைகின்றது இதுஎன்னடி துயரம்?

துயரங்களின் உயரங்களில் உயிர்வாழ்வதை விடவும்
சயனம்தனில் மடிதல்நலம் ஜெயமாகணும் மரணம்
தயவாய்அழும் சுயசோகமும் பொதுவாகுதல் முறையோ?
புயமோங்கியும் வறுமைஎனும் பயமோங்குதல் சரியோ?

அடிஒன்றிலும் இடிபாய்வது இனிநம்முடை நியதி
படியாதுள விடியல்களை வரவைத்திடும் உறுதி
குடியாட்சியில் முடியாட்சியைக் குடிவைப்பதும் இனிமேல்
நடவாதெனும் முடிவானதும் அகலும்நம தவலம்.

மெலியோர்தமை மிதிப்போர்தமை மனதால்நிதம் ஒழிப்போம்
கொடுவஞ்சக, படுபாதகச் சதைகூறிட உழுவோம்.
கெடுவோர்இலை கெடுப்போர்இலை எனும்நாளினில் புடைப்போம்
அதிமானுடக் கதியோங்கிடப் புதுசாத்திரம் படைப்போம்.

================================================
  • எனது 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து - முதல் பதிப்பு: 1997 நவம்பர்
  •  இணையத்தில் முதல் பதிப்பு: http://www.vallamai.com/?p=1861

Thursday, January 13, 2011

புள்ளிக் கவிதைகள் - பகுதி 9

 
நானும் ஒரு பறவை.
என் சிறகுகளை
மற்றவர்கள் அசைக்கிறார்கள்.

*****************************************

எந்தச் சொல்லைச் சொல்வது
என்ற மோதலி்ல்
பிறகு அவர்கள்
பேசிக்கொள்ளவே இல்லை. 
 
*****************************************

தானும் பயந்து
என்னையும் பயமுறுத்துகிறது
இந்த நாய்.

*****************************************

எப்போதும்
காரமாகவே இருக்கிறது
கடிகாரம்.

*****************************************

மயிர்க்கால் வெளியே தெரிந்தாலும்
முறைக்கிற மெளடீகக் கணவன் போல்
விரல் நுனி வெளியே தெரிந்தாலும்
விரட்டிக் கடிக்கிறது கொசு.

*****************************************

உன்னைக் கொல்லும்
எண்ணமே எனக்கில்லை.
என்னை ஏன் நி்ர்பந்திக்கிறாய்,
கொசுவே?

****************************************************************************
நன்றி : இருவாட்சி இலக்கியத் துறைமுகம், பொங்கல் சிறப்பு வெளியீடு 2, திசம்பர் 2010 | http://www.vallamai.com/?p=1685
படத்திற்கு நன்றி: விழியன்
****************************************************************************

Saturday, January 01, 2011

அம்மே அம்மே இது நற்காலமே


அம்மே அம்மே இது நற்காலமே
ஆமே ஆமே இனி உற்சாகமே

மனமே காதலில் பண்படுமே
மானுடம் அன்பினில் மேம்படுமே
திருமிகுமே தீபம் தென்படுமே
திக்குகள் உன்னைக் கும்பிடுமே

எட்டத்தில் இருப்பவை கிட்டத்தில் வரட்டுமே
நட்டத்தில் இருப்பவர் லாபத்தைப் பெறட்டுமே
வட்டத்தில் இருப்பவர் வானத்தில் எழட்டுமே
கட்டத்தைக் கடக்கவே திட்டத்தை தருகவே.

ஒட்டாத நெஞ்சமும் ஒட்டிவர வேண்டுமே
விட்டாடும் யாவுமே தொட்டாட வேண்டுமே.
மொட்டாகப் புன்னகை கட்டாயம் வேண்டுமே
சிட்டாக வானிலே சென்றாட வேண்டுமே.

பட்டமரம் பூக்குமே பாறையும் சுரக்குமே
வெட்டவெளி எங்குமொளி வெள்ளமெனப் பாயுமே
நட்டநடு நெற்றியிலே நட்சத்திரம் தோன்றுமே
விட்டகுறை தொட்டகுறை இட்டுநிறைவாகுமே.

வேட்டைக்குப் போகலாம் வீரத்தைக் காட்டலாம்
மேட்டையும் பள்ளத்தையும் மிதமாய் இணைக்கலாம்
கோட்டைக் கடந்துவந்தால் கோட்டையைப் பிடிக்கலாம்
பாட்டைப் படித்துக்கொண்டே படைகளை நடத்தலாம்.

ஆட்டத்தைத் தொடங்குவோம் ஆழத்தில் இறங்குவோம்
கூட்டத்தைக் கூட்டுவோம் கொட்டத்தை அடக்குவோம்
வாட்டத்தைப் போக்குவோம் வாழ்க்கையை வாழுவோம்
நாட்டுக்குள் நன்மையை நாட்டுவோம் நாட்டுவோம்.

==========================
அம்மே அம்மே இது நற்காலமே - http://www.vallamai.com/?p=1572