அண்ணாகண்ணன் கவிதைகள்: 2010

Saturday, September 04, 2010

சில நேரங்களில் சில உயிரினங்கள்

வாலைத் தூக்கிக்கொண்டு
ஓடி வந்த அணில்,
திறந்த கதவினுள்
எட்டிப் பார்க்கிறது.

பரணில் ஒளிந்திருந்த பூனை
திடுக்கென இறங்கி ஓடியது.
'குட்டி போட்டுவிடப் போகிறது'
அஞ்சினாள் அம்மா.

சமையல் மேடையில்
அடிக்கடி உலவுகின்றன
பல்லிகள்.

குளியலறையிலிருந்து
குதித்துத் தாவுகின்றன
தவளைக் குஞ்சுகள்.

கரப்பான்களுடன்
அவ்வப்போது நிகழ்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம்.

ஒட்டடை தட்டும்போதெல்லாம்
தப்பிவிடுகிறது சிலந்தி.

ஒரு படையெடுப்பு
எப்படி இருக்கும் என
எறும்புகள் கற்பிக்கின்றன.

எறும்புகள் மொய்த்த முறுக்குகளை
வெயிலில் காயவைத்தேன்.
கவ்விச் சென்றது காக்கை.

மின்விசிறியை ஏமாற்றி,
என்னை எங்கே, எப்படி
கடிக்க வேண்டும் எனக்
கொசுக்களுக்குத் தெரியும்.

இவற்றிடமிருந்து தப்பிக்க,
அனைத்து ஜன்னல், கதவுகளை
மூடி வைத்தேன்.
மூச்சு முட்டியது
வியர்வை பெருகியது.

எல்லாக் கதவுகளையும்
திறந்துவிட்டேன்.

முக்கியம்தான்
என் மூச்சு எனக்கும்
அதன் மூச்சு அதற்கும்.

================================
நன்றி - வடக்கு வாசல், செப்.2010

கிரகம் பிடித்து ஆட்டுகிறது




‘உன் கிரகம் சரியி்ல்லை’
என்ற ஜோதிடனைப் பார்த்துக் கேட்டேன்:
‘உனக்கு எப்படிப்பட்ட கிரகம் வேண்டும்?

காற்றும் நீரும் வெளிச்சமும்
எந்த விகிதத்தில் இருக்கலாம்?
அங்கே உயிரினங்களின்
உருவும் நிறமும் குணமும்
எவ்வாறு அமையலாம்?
என்னிடம் சொன்னால்
ஆவன செய்கிறேன்.

வானில் அதை
எங்கே நிலைநிறுத்தட்டும்?
இங்கேயா? அங்கேயா?
அது எப்படிச் சுழல வேண்டும்?
இடப்புறமா? வலப்புறமா?

நம் விருப்பப்படி இரவு பகல்களை
சுருங்கி விரியச் செய்யட்டுமா?
துணைக்கோள் ஏதும் வேண்டுமா?'

'………………………….'
ஓட்டம் எடுத்தான் ஜோதிடன்.
கிரகங்கள் இரகசியமாய்க் கண்சிமிட்டுகின்றன.


===========================
படத்திற்கு நன்றி – http://a1star.com
முதல் பதிப்பு:  http://www.vallamai.com/?p=631

Sunday, May 30, 2010

இனிது கோடை



சமிக்ஞை விளக்கில் நொடிகள் நகர
உமிழும் புகைக்குள் அமிழும் நகரம்.
தேசிய வீதியி்ல் வண்டிகள் பறக்க
தூசி மண்டலம் அடங்குவதி்ல்லை.
தலைக்கு மேலே வெய்யி்ல வெள்ளம்
உலைப்பெரு மூச்சில் நிழலும் கருகும்.
ஆயிரம் கண்களில் வியர்வைக் கண்ணீர்
வாயது கேட்கும் சொட்டுத் தண்ணீர்.

குளிரூட்டிகளோ உறுமுகி்ன்றன
வெளியே வெம்மை ஏறுகின்றது.
சாலைகள் சற்றே அகலம் ஆகின
சோலைகள் ஆயிரம் சுவடு அழி்ந்தன.
நிழலி்ல்லாத நெடிய வீதிகள்
சுழலும் காற்றில் சுடுசாபங்கள்.
பறவைகள் தொலைந்த பட்டணத்திலே
உறவுகள் தொடரும் கட்டணத்திலே.

நன்னீர் விலையை வணிகர் சொன்னார்
தண்ணீர் குடிக்க மனம் வரவி்ல்லை.
தேநீர்க் கடையிலோ அழுக்குத் தண்ணீர்.
சிறுநீர் ஏனோ மஞ்சள் நிறத்தில்.
நிலத்தடி நீரோ கீழே விரைய
நிலத்தின் மேலே எரிமலை பொரியும்.
தெருவில் தீமிதி தினம்தினம் நிகழும்
இருந்தும் எமது நெஞ்சுரம் வளரும்.

தகிக்கும் மணலில் சுகிக்கும் காதலர்
புடைவையில் சேயைப் பொத்தும் தாயர்
காகா என்றே அழைக்கும் கனியோர்
செடிக்கும் நீரை வார்க்கும் இனியோர்
கண்ணீர் துடைக்கும் நல்லோர் வல்லோர்
வண்ணச் சிரிப்புடன் வாஞ்சை வளர்ப்போர்
இன்னும் இன்னும் இருப்பதனாலே
இனிது கோடை! கொளுத்துக பகலே!

============================================

(30.05.2010 தேதியிட்ட கல்கி வார இதழில்  இந்தப் படைப்பு வெளியானது. கவிதை கேட்டுப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ் மணவாளன், கல்கி உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா, ஆசிரியர் சீதா ரவி, அழகுற ஓவியம் வரைந்த அனந்த பத்மநாபன் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்)

Monday, March 08, 2010

பெண்மை வந்தது

நெரிசலான சாலையிலே நெருப்பெனுமோர் பாலையிலே
                நீர்சுமந்து காற்று வந்தது.
இரைச்சலான காரமான இறுக்கமான சுற்றளவில்
                இனிக்கும்இசைப் பாடல் வந்தது.
கருகருத்த காலவெளி மருளுடுத்து மூடுகையில்
                கர்ப்பூர தீபம் வந்தது.
உருக்குலைந்து திருக்கலைந்து உலகெறிந்த போதினிலே
                ஒய்யாரப் பெண்மை வந்தது.

நாவறண்டு மெய்தளர்ந்து நடுக்காட்டில் நிற்கையிலே
                 நறுங்குளிர்நீர்ப் பந்தல் வந்தது.
பூவனத்து மண்வெடிக்க, பூச்சியத்துள் சதமடிக்க,
                 பொன்வானில் கங்கை வந்தது.
நோவெடுத்து நீர்வடித்து நோக்கழியும் வேளையிலே
                 நூதனக் களிம்பு வந்தது.
சாவெனக்குப் பக்கத்தில் சம்மணக்கால் இட்டபோது
                 சஞ்சீவிப் பெண்மை வந்தது.

பேசுமொழி புரியாமல் பிறநாட்டில் நிற்கையிலே
                 தாய்மொழிச்சொல் ஒன்று வந்தது.
காசிலாத வேளையிலே கடன்காரர் சூழ்கையிலே
                 கருவூலம் ஒன்று வந்தது.
ஏச்சுகளும் எள்ளல்களும் ஏறிவரும் அந்நேரம்
                 இதமான வார்த்தை வந்தது.
வீச்சுடைய விரிவானம் விரைந்தென்னைக் கவ்வுகையில்
                 விளையாடும் பெண்மை வந்தது.

(அமுதசுரபி - செப்டம்பர் 2004)

Thursday, February 18, 2010

நாக்கைச் சுழற்றி ஒரு மாலை மாற்று

முகநானூறு என்ற தலைப்பில் இலக்கியப் பாசறை இதழில் நான் வெண்பாத் தொடர் ஒன்று எழுதினேன். அதில் எழுதிய இன்னொரு மாலை மாற்று இங்கே. (மாலை மாற்று என்பது, தலைகீழாகத் திருப்பிப் படித்தாலும் அதே பாடல் மீண்டும் வருமாறு எழுதுவது). 1997 மே, ஜூன் இதழில் 'நாக்கு' என்ற தலைப்பில் வெளியான அத்தியாயத்தின் முதற்பாடல் இது:


நாள்உலை கொதி அசீரண உலாதுதி
நீள்கதை சரிக வருது - வாழ்வா
துருவ கரிசதைகள் நீதி துலா உ
ணரசீ அதிகொலை உள் நா.

இதைப் பின்வருமாறு பொருள் கொள்ளலாம்:

நாள் என்ற உலை கொதிக்கிறது. அது தரும் உணவோ செரிக்கவில்லை. அந்த அசீரணத்துடன் வாழ்க்கை உலா தொடர்கிறது. ஆயினும் இதுவே பெருவாழ்வு எனத் துதித்துப் போற்றுகிறோம். இந்த நீள்கதை சரிக. நாம் எதிர்கொண்டு வருவது வாழ்வா? துருவிப் பார்க்கிறோம். வாழ்வின் அழுத்தங்களால் கரியாக உருமாறும் ஒரு வகை வாழ்வு. அதுவும் எரியூட்டப்படுவதற்கே. சதையின் கவர்ச்சி உள்ள வரை அதன் பின் அலையும் ஒரு வாழ்வு. பழக்கங்களுக்கு அடிமையாகி, கள்ளெனப் போதை மிகுந்து நிற்கும் இன்னொரு வாழ்வு. நம் வாழ்வுக்கு நாம் அளிக்கும் நீதியா இது? நம் உளத் தராசில் நிறுத்துப் பார்த்தால் உண்மை தெரியும். அதை உணரும்பொழுது, சீ என வெட்கித் தலை குனிவோம். அப்போது நம் உள்ளத்தின் நாக்கு, கொடும் வேதனையால் கொலையுண்டு கிடக்கும். அந்த மவுனத்தின் அலறல் கேட்கிறதா?

வெண்பா  யாப்பின்படி அலகு பிரித்துக் காட்டவேண்டும் எனக் கேட்போருக்காக:

நாள்உ லைகொதி அசீரணஉ லாதுதி
நீள்க தைசரி கவருது - வாழ்வா
துருவ கரிசதைகள் நீதி துலாஉ
ணரசீ அதிகொலைஉள் நா.

====================================================

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

Friday, February 12, 2010

தமிழின் மிக எளிய மாலை மாற்று


முகநானூறு என்ற தலைப்பில் இலக்கியப் பாசறை இதழில் நான் வெண்பாத் தொடர் ஒன்று எழுதினேன். அதில் சில மாலை மாற்றுகளையும் சித்திரக் கவிகளையும் சில இதழ்களில் தொடர்ந்து எழுதினேன். மாலை மாற்று என்பது, தலைகீழாகத் திருப்பிப் படித்தாலும் அதே பாடல் மீண்டும் வருமாறு எழுதுவது. மார்ச், ஏப்ரல் 1997 இதழில் 'வாய்' என்ற தலைப்பில் வெளியான அத்தியாயத்தின் முதற்பாடல் இது:

வாய்போல் சரிவில் தினமழை கோணிபிடி
கோவில் தோத்தோத் தோத்திரமயம் - ஆம்ஆம்
யமரதித் தோத்தோத் தோல்வி கோடிபிணி கோழை
மனதில் விரிசல் போய்வா.

நான் படித்த மாலை மாற்றுகள் பலவும் கடுமையான மொழி நடையில் இருந்தன (எ.கா: திருஞானசம்பந்தரின் மாலைமாற்று திருப்பதிகம்). எனவே படிப்பதற்கு எளிய வடிவில் அவற்றை எழுத இயலுமா என முயன்றதன் விளைவே இது. நான் படித்த வரையில், தமிழில், நான்கு அடிகளில் எழுதப்பெற்ற மாலை மாற்றுகளிலேயே இதுதான் படிக்க மிக எளிதானது.வேறு எளிய பாடல் இருந்தால், என் கவனத்திற்குத் தாருங்கள்.

இப்பாடல், பற்பல பொருள்களை அளிக்கக் கூடியது.

அதிகம் பேசுபவர்களின் வாயிலிருந்து சொற்கள் தினந்தோறும் மழையெனப் பொழிகின்றன. அவற்றைக் கோணியிலே பிடிக்க முயன்று பார். சிலர் கோவிலில் வாழும் தெய்வம் எனப் புகழ்ந்து, தோத்திரங்கள் படிப்பார்கள்; வேறு சிலரோ நாயின் குரைப்பொலி போல் தூற்றுவார்கள். இதற்கும் ஆம் என்று சொல்; அதற்கும் ஆம் என்று சொல். இரண்டையும் சமமாகக் கருது.

மரணத்தைப் போன்றும் ரதியைப் போன்றும் சொற்கள் உண்டு. சூழலைப் பொறுத்து, மன நிலையைப் பொறுத்து, ஒரே சொல்லே அவ்வாறு இரு விதங்களாகவும் இருக்கலாம். அவை நம் பின்னால் நாய் போல் தொடர்ந்து வருகின்றன. அவற்றுள் எந்தப் பொருளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும். சொல்லின் பொருளைத் தவறுதலாக எடுத்துக்கொண்டால் அதனால் உனக்குத் தோல்வியும் கோடி பிணிகளும் கிட்டும்.

எந்தப் பொருளை எடுக்கிறாயோ, அதற்கு நேர் எதிரான பொருள் (நல்ல பொருளை எடுத்தால், அல்லாத பொருளும் அல்லாத பொருளை எடுத்தால் நல்ல பொருளும்), தோற்ற நாயின் தன்மையுடன் ஆங்காரத்துடன் பின்தங்கி, ஓடி மறையும். ஆயினும் உன் கண் எதிரேயே அடிக்கடி தோன்றும். கல்லெடுத்து விரட்டினால், முற்றிலும் கண்ணை விட்டு அகன்றாலும் அதன் குரைப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கும்.

சொல்லின் பொருளை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர் கோழையாகக் கருதப்படுவார். இவ்வளவு சொல்கிறாயே, இப்பொழுது நான் எந்தப் பொருளை எடுப்பது எனப் பெரிதும் குழம்புகிறேன். இதனால் என் மனதில் விரிசல் உண்டாகிவிட்டது. நான் இன்னும் அமைதியாகச் சிந்தித்துத்தான் முடிவு எடுக்க வேண்டும். இப்பொழுதைக்கு நீ போய் வா.

மேலும் விளக்கங்கள்:

வாய்போல் சரிவில் தினமழை என்பதே பல்வேறு பொருள்களுக்கு இட்டுச் செல்கின்றன. வாயிலிருந்து தொண்டைப் பகுதி கீழிறங்குவது போன்ற அமைப்புடைய அந்த மலைச் சரிவில் சந்திப்போம். என்னைத் தினமும் அழை என்றுகூட பொருள் கொள்ளலாம். இங்கு வாய், சரிவு, மழை ஆகியவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்பக் குறியீடுகளாக மாற்றிவிட முடியும்.

கோணியில் ஒரு சொல்லைப் பிடித்தல் என்பது, நிறைய சிந்திக்க வைப்பது. கோணியின் நிறைய புத்தகங்களைப் பிடிக்கலாம். புத்தகங்கள் முழுக்க இருப்பவை சொற்கள். பிடித்து வைப்பதற்கு உரிய சொற்களா? போகட்டும் என விடுவதற்கு உரிய சொற்களா? பிடித்து அளந்து பார்த்தால் தெரிந்துவிடும், அதன் கனம். சரி, பேசும் சொற்களை, அதாவது ஒலியைப் பிடிக்க இயலாதா? அதற்குத்தான் நிறைய கருவிகள் உள்ளனவே. அந்த ஒலிப் பதிவு வட்டுகளை, சிப்புகளை எல்லாம் கோணியில் பிடிக்க முடியும்தானே. சரி, காற்றில் ஒலி அலைகள் பரவுகையில் காற்றாகவே அவற்றைப் பிடிக்க இயலும்தானே. அதற்கு ஏற்றதாக அந்தக் கோணி இருக்க வேண்டும். அவ்வளவுதான். இங்கு கோணி என்பதை மனம் என்றும் கொள்ளலாம்.

கோவில் என்பதும் ஆலயத்தையும் குறிக்கலாம்; மன்னனின் வில் என்பதையும் குறிக்கலாம். மன்னனின் வில்லின் வேகத்துடன் சொற்கள் பாய்வதாகக் கருதலாம்.

தோத்தோ என்பது நாயைக் குறிக்கும் சொல் எனினும் ஓரிடத்தில் நாயின் குரைப்பொலியையும் அடுத்த இடத்தில் பின்னே அலையும் அதன் இயல்பையும் சுட்டி நிற்கிறது.

யமரதி என்பதும் பல்பொருட் சொல். மரணத்தைப் போன்ற அழகுடைய ரதி, ரதியைப் போன்று அழகுடைய மரணம் என இரு வழிகளிலும் பொருள் கொள்ளலாம்.

ஏதோ எனக்குத் தோன்றிய சில பொருள்களைக் கூறினேன். சொற்கள், யானையின் வால் போல் ஒரு முனையே. அவற்றைப் பின்பற்றிச் சென்றால், நாம் நிச்சயமாக வழி தவறுவோம். புரியாத இடத்தில் நின்றபடி வழிதேடி அலைகையில் நாம் எதிர்பாராத புதிய பாதைகள் ஆயிரம் ஆயிரமாய் கிட்டும்.

Thursday, February 11, 2010

மகுடம் விரும்பாத கோ

(கவிக்கோ ஞானச்செல்வன் 70ஆம் அகவை நிறைவினை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துப்பா)

பிரம்பில்லா ஆசிரியர்; பிள்ளைமனச் சீலர்;
வரம்பில்லா நேயர்;உளத் தூயர் - நரம்பில்லா
நாவால் தமிழாளும் நாவலர்; கட்டழகுப்
பாவால் உலகளப் பார்.

சிவஞானத் தொண்டர்; தியாகியின் மைந்தர்;
தவமாய்த் தமிழ்கற்ற தக்கார் - நவமாய்
வகுப்பெடுத்த வல்லார்; வழிகாட்டும் நல்லார்;
மகுடம் விரும்பாத கோ.

நன்னூல் படித்ததுடன் நன்னூல்கள் ஆக்கியவர்;
தன்னுள் தனைக்காண் தகவாளர் - புன்னகையால்
மேடைத் தமிழை மெருகேற்றும் பாவலர்க்குள்
கோடை மழையின் குளிர்.

நற்பண்பு, நற்செயல், நற்சொல் இவையெல்லாம்
ஒற்றை உருவில் ஒளிகூட்ட - நற்பயனாய்
நற்குடும்பம், நற்புகழ், நட்பு இவையெல்லாம்
பெற்றார் பெரிதின் பெரிது.

எதுதமிழ் என்றுபலர் இங்கே குழம்ப,
இதுதமிழ் என்றே இயம்பும் - மதுரகவிக்
கோஞானச் செல்வன் கொளுத்தும் சுடரிதனால்
பூஞாலம் வாழும் புலர்ந்து.

எண்ணியவை ஈடேறி, இன்பக் களிதுள்ள,
எண்ணாச் சிறப்புகளும் எய்திடுவீர் - திண்ணம்
நொடிதோறும் வாழ்ந்துவளர் நூற்றாண்டின் ஒவ்வோர்
விடியலையும் காண்பீர் வியந்து.

Thursday, January 14, 2010

வாழ்த்துப் பாடல்

வாழ்வு மலரும்; மனம்கனியும்; அன்புமிகும்;
தாழ்விலகும்; வெற்றி தழைக்கும்;சீர் - சூழும்எழில்
வல்லமை கூடும்; வலியினிக்கும்; மண்ணொளிரும்!
எல்லாமே இன்ப மயம்!

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!