அண்ணாகண்ணன் கவிதைகள்: இனி என்ன செய்ய?

Saturday, August 13, 2005

இனி என்ன செய்ய?

அரிது அரிது பலகணி உள்ள அறை!
என் அறையில் உள்ளதுபோல்
பெரிய பலகணி அரிதினும் அரிது.

நுழைந்தவர்கள்
உடனே எழுந்து செல்ல விரும்பியதில்லை.
எழுந்தாலும் 'போய் வருகிறேன்' என
மனமுவந்தே சொல்கிறார்கள்.

தென்றல் சிறுநடை பயிலும்
ஒளி வெள்ளமெனப் பாயும்
கிளைகள் விதவிதமாய் அபிநயிக்கும்
புறாக்கள் வந்தமர்ந்து எட்டிப் பார்க்கும்.

நான் பார்ப்பது குறைவாயினும்
வானம் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும்
இந்த அறை அரிதுதான்.

இங்கு அமர வந்த
உங்களை வரவேற்கிறேன்.

உட்காரும்முன் இருக்கையை
ஆராய்கிறீர்கள்.
உங்கள் கைக்குட்டையால்
விசிறித் துடைக்கிறீர்கள்.

உங்கள் தூய்மைப் பணி பாராட்டுக்கு உரியதே.
ஆயினும் பயனில்லை.
அடுத்த ஐந்து நிமிடத்தில்
எப்படியும் வந்துவிடும் தூசி,
விலக்கிய பாசி மீண்டும் வருவதுபோல்.

மேசை மேல் உங்கள் கையை வைக்கலாம்
தாராளமாக.
வெள்ளை முழுக்கைச் சட்டை அணிந்திருந்தால்
கொஞ்சம் மடக்கிவிட்டுக் கொள்ளுங்களேன்.

தொலைபேசிக் கருவியில்
புத்தக அடுக்கில்
கணினித் திரை மீது
மேசை மேல்.... என
எப்பொருள் மீதும்
பாய்விரித்ததுபோல்
தூசிப் போர்வை.

நாம் அதனிடமிருந்து
தப்பித்துவிட முடியாது.
எவ்வளவு துடைத்தாலும் போதாது.
போகாது.

இங்கிருந்து நீங்கள்
வெளியே அனுப்பும் தூசி
பக்கத்து அறைக்குச் செல்லும்.

பக்கத்து அறையிலிருந்து
வெளியே அனுப்பும் தூசி
எங்கே செல்லும்?

காற்று மண்டலமே
தூசி மண்டலமான பிறகு
ஓடிப் பிடித்து விளையாடும்
அந்தத் துகள்களை
ஒன்றும் செய்ய இயலாது.

சுவாசத்தைக் கைப்பற்றி விட்டது, தூசி.
இனி என்ன செய்ய?
நன்றாக இழுத்து மூச்சுவிடுங்கள்.

தூசிப் படலத்தின் மேல்
விரலால் கோலம் போட முடிகிறது.
கொஞ்சம் முயன்றால்
புதுமையான ஓவியங்கள் கிடைக்கலாம்.

தூசிகளைத் தடுக்க
இந்தப் பலகணிகளை மூடிவிடலாம்
என்கிறீர்கள்.

தூசிகளைக்
குறைத்து மதிப்பிடவேண்டாம்.
பல மாதங்களாக
மூடியிருக்கும் அறைக்குள்
அவ்வளவு தூசி எப்படி வந்திருக்கும்...
சிந்தித்ததுண்டா?

மாற்ற முடியாததை ஏற்கும் விதிப்படி
தூசியை ஏற்கவேண்டியதுதான்.
வெளியே உலகம் வளர்ந்துகொண்டிருக்கிறது நண்பரே.

(கானல் காட்டில் நடைபெற்ற திசைகள் இலக்கிய முகாமில் வாசிக்கப்பெற்றது)

[ திசைகள் / ஜுலை 2005 ]

No comments: