அண்ணாகண்ணன் கவிதைகள்: சுதந்திர சாக்லேட்

Wednesday, August 10, 2005

சுதந்திர சாக்லேட்

2000ஆம் ஆண்டு. சுதந்திர தினத்திற்கு இரண்டு நாள்கள் இருந்தன. எழும்பூரில் உள்ள தினமலர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த செய்தி ஆசிரியர் பார்த்திபன், என்னைக் கண்டதும், 'சுதந்திர தினச் சிறப்பிதழுக்கு ஒரு கவிதை கொடுங்கள்' என்றார். 'எப்போது வேண்டும்?' என்றேன். 'உடனே கொடுக்க முடியுமா?' என்றார். 'சரி' என்று வரவேற்பறையிலேயே உட்கார்ந்தேன். அடுத்து முக்கால் மணி நேரத்தில் கீழ்க்கண்ட கவிதையை எழுத முடிந்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார். மறவன்புலவு க. சச்சிதானந்தன், இக்கவிதை என் இயல்பை நன்கு வெளிப்படுத்துவதாகக் கூறுவார். அக்கவிதை இங்கே:



கட்டுகள் எனக்குப் பிடித்தமில்லை.
சுமைகளை நான் வெறுக்கிறேன்.
இருளின் குடை விரியும்போது
என் இறக்கைகள் மடங்கிவிடுகின்றன.
நிபந்தனைகள் அதிகமுள்ள இடத்தில்
எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

உங்கள் மரபுகளை
மூட்டை கட்டி வையுங்கள்.
திணித்தலின் முதல் எதிரி நான்.
காலை முதல் இரவு வரை
என்ன செய்யவேண்டும் என்று
என் மூளையில் எழுதாதீர்.
எனக்கான நிகழ்ச்சி நிரல்களை
நானே எழுதிக்கொள்வேன்.

சட்டம், விதி, வழக்கம், முறை....
அய்யோ.. சர்வாதிகாரமே!
உனக்குத்தான்
எத்தனை புனைபெயர்கள்!

சுதந்திரம் என்ற பெயரில்
ஒரு சாக்லேட் கொடுத்தார்கள்.
பிரித்தால் ஒன்றுமில்லை.

காற்றே! என் முகத்தில் மோது.
ஒளியே! என் முன் நடனமிடு.
மழையே! என்னை நனை.
மண்ணே! எனக்கொரு மலர் கொடு.
பிரபஞ்சமே! எனக்குன் மடி வேண்டும்.

சுதந்திரமே!
ஏ... வெளிச்ச வார்த்தையே!
உனது கடலில்
ஒரு நதியைப் போல்
என் பெயர் கலக்கட்டும்!

( தினமலர் / 15-8-2000)

No comments: