அண்ணாகண்ணன் கவிதைகள்: காதல் கவிதைகள் சில

Saturday, August 06, 2005

காதல் கவிதைகள் சில

நம்மைச் சுற்றி...

என் இளமைத் தேன்கூட்டின் மீது
நீ பார்வைச் சிறுகல் வீசினாய்.
நம்மைச் சுற்றி
எத்தனை கனவுகள்...

------------------------------------

தலைகீழ் மாற்றம்

அவளை
ஒரு விளையாட்டுப் பெண்ணாகப்
பார்த்தேன்.
கடைசியில்
நானே அவளது
விளையாட்டுப் பொருளானேன்.

அவள் பேச்சை
மழலை எனச் சிரித்தேன்.
பிறகு
அவள் பாடுவதற்காக
நானே ஒரு பாடலாகி நின்றேன்.

அவளுக்குச் சொல்ல
நிறைய அறிவுரைகள்
என்னிடம் இருந்தன.
இப்போது
என் விரல்பிடித்து
அவள் அழைத்துச் செல்வதையே
விரும்பி நிற்கிறேன்.

------------------------------------

குழந்தையிடம் சிற்றாடு

பூகம்பத்துக்குப் பிந்தைய
ஆற்றைப் போல
உன்னைப் பார்த்தபிறகு
நான் திசைமாறிவிட்டேன்.

நீ சிரிக்கும்போது
மாலைநேர நிழலாய்
நீள்கிறது என் மகிழ்ச்சி.

நீ சினக்கையில்
உச்சிநேர நிழலாய்
பாதத்தின் கீழே
பதுங்குகிறது என் இன்பம்.

எந்தப் பக்கம் திரும்பினாலும்
மறிக்கிறது உன் நினைவு.

சிறு குழந்தையிடம்
சிக்கிய ஆட்டுக் குட்டிக்குக்
கவலையில்லை.
எனக்கினி ஏது கவலை?

------------------------------------

பெண்மை வந்தது

நெரிசலான சாலையிலே நெருப்பெனுமோர் பாலையிலே
நீர்சுமந்து காற்று வந்தது.
இரைச்சலான காரமான இறுக்கமான சுற்றளவில்
இனிக்கும்இசைப் பாடல் வந்தது.
கருகருத்த காலவெளி மருளுடுத்து மூடுகையில்
கர்ப்பூர தீபம் வந்தது.
உருக்குலைந்து திருக்கலைந்து உலகெறிந்த போதினிலே
ஒய்யாரப் பெண்மை வந்தது.

நாவறண்டு மெய்தளர்ந்து நடுக்காட்டில் நிற்கையிலே
நறுங்குளிர்நீர்ப் பந்தல் வந்தது.
பூவனத்து மண்வெடிக்க, பூச்சியத்துள் சதமடிக்க,
பொன்வானில் கங்கை வந்தது.
நோவெடுத்து நீர்வடித்து நோக்கழியும் வேளையிலே
நூதனக் களிம்பு வந்தது.
சாவெனக்குப் பக்கத்தில் சம்மணக்கால் இட்டபோது
சஞ்சீவிப் பெண்மை வந்தது.

பேசுமொழி புரியாமல் பிறநாட்டில் நிற்கையிலே
தாய்மொழிச்சொல் ஒன்று வந்தது.
காசிலாத வேளையிலே கடன்காரர் சூழ்கையிலே
கருவூலம் ஒன்று வந்தது.
ஏச்சுகளும் எள்ளல்களும் ஏறிவரும் அந்நேரம்
இதமான வார்த்தை வந்தது.
வீச்சுடைய விரிவானம் விரைந்தென்னைக் கவ்வுகையில்
விளையாடும் பெண்மை வந்தது.

( அமுதசுரபி - செப்டம்பர் 2004)

No comments: