பாதாளச் சாக்கடைகளில்
கோவணத்தோடு மூழ்கும் மனிதன்
வாய்க்குள் நுழைந்த நீரைத்
தூ தூ தூ என்று துப்பும் இடம்.
குட்டை விளக்குமாற்றைப் பிடித்துக்
குனிந்து
கழிவறைத் தொட்டியைத் தேய்ப்பவனின்
சாப்பிடும் நேரம்.
கூவக் கரையோரம் நெடுநேரமாய்
இருட்டுவதற்காகக் காத்திருக்கும்
இயற்கை உபாதையால் துடிக்கும்
இளம் பெண்ணின் தவிப்பு.
கை, கால்கள் சூம்பிய நிலையில்
தெருவோரம் பிச்சை எடுப்பவனின்
உடலுறவு ஏக்கம்.
ஒரு பைசா மிட்டாய் கிடைக்காமல்
தினமும் ஏமாறும் சிறுவன்.
தூக்கி எறிந்த, தீர்ந்து போன
·பேர் அண்டு லவ்லி பாக்கெட்டைக்
கஷ்டப்பட்டுக் கிழித்து
இடுக்கில் இருக்கும் பசையைக்
கன்னத்தில் தேய்த்துக்கொள்ளும்
குப்பை பொறுக்கும் சிறுமி.
தீர்ந்துபோன ஷாம்பூ பாக்கெட்
பவுடர் டப்பா போன்ற
பளபளப்பான குப்பைகளைக்
கண்ணில் படும்படி கொலு வைப்பவர்கள்.....
இந்த முடிவுறாத பட்டியலை
அழுக்குகளின் தீட்டு என்றோ
ஆபாசங்களின் கூட்டு என்றோ
சொல்லிவிடாதீர்கள்.
சிலரின்
பல நேரங்கள் எழுதப்படுகின்றன.
பலரின்
சில நேரங்களும் எழுதப்படுவதில்லை.
எழுதப்படாத மனிதர்களின்
முற்றிலும் எழுதப்படாத நேரங்களை
இருள் அப்பியிருக்கிறது.
எழுத எழுதத்தான் அங்கே
சூரியன் உதிக்கும்.
இந்த விழிமறைவுப் பகுதிகள்
துயர்மறைவுப் பகுதிகள் ஆகட்டும்.
எழுதுகோல்களின் முனைகளில்
சூரியன் உதிக்கட்டும்.
(இலக்கிய நந்தவனம் - அக்டோபர் 2000)
No comments:
Post a Comment