மீன்கள் பேசிக்கொண்டுதான்
இருக்கின்றன.
மீன் தொட்டியிலிருந்து
மூச்சு விடும் மீன்கள்
உண்டாக்கிய நீர்க்குமிழிகளில்
அவற்றின் பேச்சினை நான் கேட்டேன்.
கரையோரம் ஒதுங்கிய
பிரம்மாண்டமான திமிங்கலங்களின்
மௌனத்தில்
நான் பல சொற்களைக் கண்டெடுத்தேன்.
தூண்டில் புழுக்களுக்கு மயங்கி
இப்போது குழம்பில்
கொதித்துக்கொண்டிருக்கும்
மீன்களின் வாக்குமூலங்களை
நான் பதிவுசெய்திருக்கிறேன்.
மீன் சந்தைகளில்
கூடை கூடையாக நிரம்பியிருக்கும்
மீன்களின் வாசத்தில்
நான் ஓர் ஆழ்ந்த ஆலாபனையை
உணர்ந்தேன்.
கடற்கரைகளில்
காயவைக்கப் பட்டிருக்கும்
கருவாடுகளின்
மேனிகளில் அவற்றின்
வாழ்க்கைச் சரிதத்தை வாசித்தேன்.
வண்ணக் கனவுகளோடு
கருப்பு வெள்ளை டால்பின்கள்
வானத்துக்குத் தாவி
அந்தரத்தில் நடனமாடி
நீருக்குள் பாயும் கடைவெளியில்
என்னுடன் சில வார்த்தைகள் பேசின
அவை பேசியவற்றை
நான் கொஞ்சம்போலச் சொல்கிறேன்.
"வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.
மகாவிஷ்ணுவுக்கு நாங்கள்
மச்சாவதாரமாய் இருந்தோம்.
பாண்டிய மன்னர்களுக்குச்
சின்னமாக இருந்தோம்.
இன்றும் பெண்களுக்குக்
கண்களாய் இருக்கிறோம்.
ஆனால்,
வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.
கடற்பேரரசின்
காவல் தெய்வங்களாக
நாங்கள் இருந்தோம்.
இன்றோ,
மனிதனின் விருப்பத்திற்கேற்ப
கொல்லப்படும்
எளிய ஜீவன்களாய் இருக்கிறோம்.
உயிருக்குரிய மரியாதை
எமக்கு இல்லை.
கண்ணாடித் தொட்டியில்
சிறைவைக்கப்பட்டிருக்கிறோம்.
காகிதப் பூவைப்போல
வரவேற்பறையில் எம் அழகைக்
காட்டுகிறார்கள்
அழகிப்போட்டிகளில்
பெண்கள் உலாப்போவதுபோல்
நாங்கள் இடமும் வலமும்
நடக்கிறோம்.
மனிதனுக்கு முன்னால்
தோன்றியபோதும்
இந்தப் பூமியை நாங்கள்
மனிதனிடம் இழந்துவிட்டோம்
எங்கள் சுதந்திரம் அனைத்தும்
இன்று
நைலான் வலைகளுக்குள்
நைந்துவிட்டது.
அற்பப் புழுவைக் காட்டி
எம்மை ஏமாற்றும்
இந்த மனிதனின்
தந்திரங்கள் எல்லையற்றவை.
மனிதனின் இரக்கத்தால்
நாங்கள் வாழவேண்டி இருக்கிறதே!
எங்கள் தாயகத்தை நாங்கள்
மனிதனிடம் இழந்துவிட்டோம்.
இன்று அகதிகளாகத்
தண்ணீர்த் தொட்டியிலும்
காட்சிக் கூடங்களிலும்
ஏரி - குளங்களிலும்
திரிகிறோம்.
பாசியைத் தின்று
இப்போதும் மனிதனுக்கு
உதவியைத்தான் செய்கிறோம்.
ஆனால்,
எமது நாட்கள்
எண்ணப்படுகின்றன.
உலக இலக்கியங்களில் எல்லாம்
நாங்கள் இடம்பெற்றுவிட்டோம்.
ஆனால்,
வெறும் உவமையாக
பெண்களின் கண்களுக்கு மட்டுமே
உதாரணமாய்
சிறுமைப்படுத்தப்படுகிறோம்.
நாங்கள் நீந்திய நதியலைகள்
இன்று வறண்டு கிடக்கின்றன.
நதியில் குளிக்கிற இளம்பெண்களின்
மெல்லிய மேனியைக் கடித்து
குறுகுறுக்க வைத்ததெல்லாம்
பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போய்விட்டன.
எங்கள் காவிரி எங்கே?
எங்கள் பாலாறு எங்கே?
எங்கள் பஃறுளி ஆறு எங்கே?
இன்று மிஞ்சியிருப்பதெல்லாம்
ஒவ்வொரு வீட்டுக் குப்பைத் தொட்டியிலும்
எங்களின் எலும்புக்கூடுகள் மட்டுமே.
வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.
ஏசுநாதர்
அப்பத்தோடு எங்களையும்
பெருகவைத்து விருந்திட்டார்.
குகன், ராமனுக்கு
எங்களைத்தான் படையலிட்டான்,
கண்ணப்ப நாயனார்
சிவனுக்கு எங்களை
சமர்ப்பித்தார்.
இன்று மனிதருக்கு
நாவூற வைக்கவே
நாங்கள் பயன்படுகிறோம்.
வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.
எங்களை விதவிதமாகச்
சமைப்பது எப்படி என்று
பெண்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
எங்களை எப்படியெல்லாம்
பிடிப்பது என்று
மீனவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
புறாக்களையாவது
அடிக்கடி பறக்கவிடுகிறார்கள்
சமாதானத்துக்காக.
எங்களுக்காகக் காத்திருக்கின்றன
மசாலாக்கள்,
சூடான எண்ணெய்கள்
மிளகாய்ப் பொடிகள்.
வரலாற்றில் நாங்கள் வெறும்
உணவுப்பொருள்தான்.
இன்று
ஆலைக்கழிவு முதல்
அணுக்கழிவு வரை
எமது தலையிலே கொட்டுகிறான் மனிதன்.
கடல், அவனுக்கு ஒரு
குப்பைத் தொட்டி ஆகிவிட்டது.
எங்கள் சடலங்கள் அடிக்கடி
நீர்ப்பாடையில் நீந்துகின்றன.
எண்ணெய்க் கப்பல்களின்
மாலுமிகளே! - உங்கள்
கப்பலின் ஒட்டைகளை அடையுங்கள்.
எங்கள் மூச்சுக் குழலை அடைக்காதீர்கள்.
பல கடல் மைல்களுக்கு
நாங்கள்
கூட்டாகக் கொல்லப்படுகிறோம்.
மனிதனின் சாதாரணக் கண்களில் பட்டாலே
நாங்கள் வாழ்வை இழக்கிறோம்.
இப்போது
ரேடார் கண்களும்
எங்களைக் காட்டிக் கொடுக்கின்றன
நவீன எட்டப்பனைப் போல.
குளக்கரைகளில் அமர்ந்தபடி
எமக்கு பொரிகளை வீசும்
இனியவர்களே!
எம் அக உலகத்தைப்
புற உலகிற்குக் காட்டும்
உயிரியல் - விலங்கியல்
தொலைக்காட்சி அன்பர்களே!
இன்றும்
எம்மை வரையச்சொல்லிப்
போட்டிகள் வைக்கும்
பள்ளிக்கூடங்களே!
எமக்கும் உயிர் உண்டு என்பதை
உணர்ந்திருக்கும்
உன்னத மனிதர்களே! உமக்கு நன்றி!
இதோ என் வால் அசைகிறது.
என் செதிள்கள் அபிநயிக்கின்றன.
நீருக்குள்ளே உன் உடல்
நர்த்தனமிடுகிறது.
இந்த வழவழப்பான உடலுக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறு உயிர்
துடித்துக்கொண்டிருக்கிறது.
ஞாபகம் வைத்திருங்கள்
எங்களுக்கும்
உயிர் இருக்கிறது.
(வின் தொலைக்காட்சி - கவிராத்திரி - ஒளிபரப்பு : 27.03.2004, இரவு 9.30 மணி - ஒளிப்பதிவு : 29.02.2004)
No comments:
Post a Comment