எண்ணிப்பார் என்றவுடன் எண்ணித்தான் பார்ப்பார்கள்
மண்மனை பொன்பொருள் வங்கிகனம் - வண்டியென
என்னென்ன உள்ளதென எண்ணித்தான் பார்ப்பார்கள்
என்றாலும் நாம்சொல்வோம் எண்ணு!
எண்ணுதல் ஓர்கலை. எண்ணுதல் ஓர்தவம்.
எண்ணுதல் இன்றோர் இயக்கவிதி - உண்மையில்
எண்ணுதல் ஓர்பயிற்சி. எண்ணுதல் நாகரிகம்.
எண்ணுதல் வாழ்வின் எழில்.
இல்லைகளைக் கழித்து உண்டுகளைக் கூட்டாமல்
இல்லார் விடுத்து இருப்பவர் கூட்டி - எல்லை
பெருக்கி மனம்வகுத்துப் பெய்த கணக்கால்
அடைப்புக் குறிக்குள் தினம்.
தினமென்னும் புள்ளிகளைச் சேர்க்க, இடியாப்ப
தினுசாய்ஓர் கோலம் தெரியும் - தினக்கோடு
நேர்க்கோடாய் ஆகிடும் நேரத்தைக் காணக்கண்
நீர்க்கோடு நின்று விடும்.
விடும்அம்பும் வேர்வையும் வீணாக லாமா?
இடும்வித்து பொய்த்துவிட லாமா? - நெடிய
கனவுக்கு அழகிய கண்தருவோம். என்றும்
கனவின் பதிலி நனவு.
நனவின் நரம்புகள் நைகின்ற போதும்
தினவை இழக்காத தோழா - உனக்காக
நான்சுவைத்த தேன்கனவில் நான்கை அனுப்புகிறேன்
நீசுவைத்துச் சொல்உன் நிலை.
நிலையற்ற வாழ்வில் நிகரற்று வாழ,
தலையுற்ற நீவா தயாராய் - அலைக்கும்
தொலைவுண்டு. வெல்லும் தொலைநோக்கும் உண்டு.
விலையில்லை உன்வியர்வை முத்து.
முத்துவாய் கொண்டே முழங்குவாய். சத்தமாய்க்
கத்துவாய். வெற்றிக் களிப்புறுவாய் - மொத்துவாய்
குத்துவாய் பூமி குலுக்குவாய். உண்மையைப்
பத்துவாய் கொண்டேநீ பாடு.
பாடுபடப் பாடுபடப் பாதை கிடைக்குமெனும்
நாடுபட்ட தத்துவத்தை நாட்டிவிடு - வேண்டும்
இருப்பதற்குக் கூடு; பறப்பதற்கு வானம்;
இருட்டெரிக்க வேண்டும் இனி.
( கல்கி தீபாவளி மலர், 2003)
No comments:
Post a Comment