அண்ணாகண்ணன் கவிதைகள்: இந்தியத் தாய் திருப்பள்ளியெழுச்சி

Saturday, September 28, 2013

இந்தியத் தாய் திருப்பள்ளியெழுச்சி

இரவி எழுந்தது! இரவு கிழிந்தது!
இருவிழித் திரைகள் இணைந்து திறந்தன!
அரக்கம் அரண்டது! பொய்ம்மை மிரண்டது!
அத்தனை தீமையும் அலறி விழுந்தது!
மரணம் மருண்டது! வல்லவர் நெஞ்சின்
மகிமை புரிந்தது! மகிழ்வு கிளர்ந்தது!
உரங்கொள்ளும் வேளையில் உறங்கிடும் தாயே
உணர்வுகொண்டே பள்ளி எழுந்தருள் வாயே!
வறுமை தொலைந்தது! வளமை திகழ்ந்தது!
வார்த்தையில் இனிமை வழிந்து கிடந்தது!
வெறுமை மறைந்தது வயிற்றிலும் நெஞ்சிலும்!
வெற்றியும் முயற்சியும் இயைந்து தொடர்ந்தன!
நறுமண நேயம் நாளும் கமழ்ந்தது!
நல்லன வாய்த்தன! விழியொளி வளர்கையில்
பொறுமையில் துயில்கொள்ளும் செயலிது தாயே
பொருந்திடுமா பள்ளி எழுந்தருள் வாயே!
துயரம் ஒழிந்தது! இதயம் விரிந்தது!
தோள்கள் இணைந்தன! துணிவு பிறந்தது!
பயமும் அழிந்தது! கவலை கழிந்தது!
பகைபாதகத்தின் சடலம் எரிந்தது!
வயது நிலைத்தது! மனது திளைத்தது!
வானமும் தோற்றது! வல்லஇத் தருணம்
சயனத்தில் இருக்கும் உனக்கிது தாயே
தகுதியில்லை பள்ளி எழுந்தருள் வாயே!
பூக்கள் மலர்ந்தன! காதல் வளர்ந்தது!
புன்னகை எங்கிலும் ஆட்சி புரிந்தது!
தாக்கிய உயிர்கள் தாவி அணைத்தன!
சமத்துவச் செங்கோல் தனித்து நிமிர்ந்தது!
ஊக்கம் மிகுந்தது! நோக்கம் உயர்ந்தது!
உலரா வியர்வை உலகினை ஆண்டது!
ஆக்கங்கொள் பொழுதில் தூக்கங்கொள் தாயே
அகவிழியால் பள்ளி எழுந்தருள் வாயே!
களிப்பினில் மட்டும் கண்ணீர் வந்தது!
கவிதையும் இசையும் கலவிப் புணர்ந்தன!
தெளிவுநல் அகமும் முகமும் அழைத்தன!
திரை விலகியது! சினம் அடங்கியது!
வளிதனை அடக்கும் யோகமும் ஞானமும்
வளர்வுறு தியானமும் வாழ்த்தும் தழைத்தன!
தளிர்வளர் நிலையில் நித்திரை, தாயே
தவறல்லவோ பள்ளி எழுந்தருள் வாயே!
கனவுதோன்றுமுன் நனவில் நடந்தது!
காட்சி தமிழ்த்தது! அமுதம் மழைத்தது!
அனிச்சைச் செயலில் முத்தமும் சேர்ந்தது!
அவனியோர்க்கெலாம் நரகம் மறந்தது!
தினவு மிளிர்ந்திடும் தீந்தமிழ்ச் சொற்களின்
திக்கினை நோக்கித் திளைப்புறல் இன்றி
இனிபள்ளிகொள்வது இந்தியத் தாயே
இழிவல்லவோ பள்ளி எழுந்தருள் வாயே!
(‘பூபாளம்‘ என்ற தலைப்பில் 1996இல் வெளியான எனது முதல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை, இது)

No comments: