அண்ணாகண்ணன் கவிதைகள்: ஒரு 'ப' திருப்பம்

Saturday, October 04, 2008

ஒரு 'ப' திருப்பம்



வெளியே செல்பவர் யாராயினும்
அவர் கை நீட்டி அழைத்தால்
உடனே தாவும் குழந்தை நான்.

அழைக்காவிட்டாலும்
நானே அவர் தோளில் ஏறி,
தெரு முனை வரையாவது
சென்று திரும்புவேன்.
ஊர் சுற்ற அவ்வளவு ஆசை.
வீட்டிலிருந்து விடுதலை பெறவும்.

என் நிறுத்தம் வந்த பிறகும்
இறங்க மறுத்து
அழுது அடம் பிடிக்கிறேன்.
குண்டுக் கட்டாகத் தூக்கி
இழுத்துச் செல்கிறார்கள்.
பயணிக்கப் பேராவல்.
வீட்டில் இருக்க அல்ல.

கீழே கிடக்கும் காகிதத்தை
எடுத்துக் கொடுக்கச் சொன்னாலும்
நான் விதிக்கும் முதல் நிபந்தனை
என்னை இந்த இடத்திற்கு
அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே.
உலாவப் பிடிக்கும்
உள்ளே இருக்க அல்ல.

குறுகிய, நீண்ட சுற்றுலாக்கள்
திட்டமிட்ட, திட்டமிடாத பயணங்கள்... என
அடிக்கடி காணாமல் போவேன்.
குறைந்தபட்சம்
அண்டை அயல் வீடுகளுக்காவது.
வீட்டுக்கு வெளியே தான்
தொடங்கும் என் உலகம்.

இன்று
ஊர் ஊராகச் சுற்றும் பணி எனக்கு.

இப்போதெல்லாம்
வீடு திரும்ப மனம் ஏங்குகிறது.
அந்த 4 சுவர்களே போதும் எனக்கு.
ஆம்
இப்போது
வீட்டில் இருக்கிறாய் நீ!

2 comments:

நவநீதன் said...

நன்றாக இருக்கிறது...
"தலைகீழ் மாற்றம்" என்று தமிழிலேயே தலைப்பி இருக்கலாமே..

முனைவர் அண்ணாகண்ணன் said...

முதலில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், முன்பு, தலைகீழ் மாற்றம் என்ற தலைப்பிலேயே ஒரு கவிதை எழுதியுள்ளேன்.

'U' உருவத்திற்கு இணையாகத் தமிழில் 'ப' வடிவம் இருக்கிறது. எனவே, "ஒரு 'U' திருப்பம்" என்பதற்குப் பதிலாக, "ஒரு 'ப' திருப்பம்" எனத் தலைப்பை மாற்றியுள்ளேன்.