"மரணத்தின் கண்களில் மையெழுதுவேன்நான்
வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப்
பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை
மெய்யுண்ணும்; மெய்யினையோ நான்." - அ.க.
Sunday, February 12, 2006
வானப் பரிசு
விடிய விடியக் கொட்டுது
விடிந்த பின்னும் சொட்டுது
முத்து முத்தாய்ச் சிதறுது
முரட்டுத் தனம் தெரியுது
பித்துப் பிடித்த பேய்மழை
பின்னிப் பின்னி எடுக்குது.
காணும் எங்கும் வெள்ளமே.
காணவில்லை பள்ளமே.
கோணம் கொள்ளை கொள்ளுமே
குளிர்ச்சி நம்மை அள்ளுமே.
பளீர் பளீர் மின்னலே
படார் படார் இடிகளே
சுளீர் சுளீர் சாரலே
தொடரும் தவளைப் பாடலே!
கருத்த வானம் மிரட்டுது
கையில் குடையைத் திணிக்குது
கருணை அற்ற காற்றதைக்
கையில் இருந்து பிடுங்குது.
நாடு நகரம் மிதக்குது
நதியும் கரையை உடைக்குது
காடு வயல் மூழ்குது
கடலும் எல்லை மீறுது.
கூடும் போதும் சிக்கலே
குறையும் போதும் சிக்கலே.
கோடு தன்னில் நிற்குமேல்
கோடி நன்மை கிட்டுமே!
வானப் பரிசு வருகவே!
மாதம் தோறும் பொழிகவே!
மானம் காக்கும் மாமழை
வருக வருக வருகவே!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமை ... உங்கள் பதிவு எனது இரண்டாம் வகுப்புப் பாடலை நினைவு படுத்திவிட்டது. எனது ஆசிரியர் பாடலை ராகமாகப் பாடி எங்களையும் பாட வைத்தது கிட்டத்தட்ட 20 வருடங்களாகியும் நினைவில் உள்ளது..
அந்தப்பாடல் இங்கே ..சிறிது மாறியும் மறந்தும் இருக்கலாம்.. மன்னியுங்கள்...
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
தூரலொரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
ஆண்டு தோறும் வாடிக்கை
.... வேடிக்கை
அவ்வளவு தான்..
யாரேனும் இந்த கடைசி வரியை சரியாக முடித்தால் நன்றாக இருக்கும்.
பால்ய நினைவுகளுடன்
சுகா :)
Vazhga valamudan,
Is it children poem?
Wonderful.
VaazhththukkaL.
சுகா, உங்களுக்கு நினைவாற்றல் அதிகம்தான். நானும் இந்தப் பாடலைச் சிறு வயதில் படித்த ஞாபகம் வருகிறது.
ஆனால், அசல் பாடல் வரிகள், நினைவில் இல்லை.
* * *
ஆமாம் சுடர், இதைச் சிறுவர்களுக்காகத்தான் எழுதினேன்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Post a Comment