அண்ணாகண்ணன் கவிதைகள்: தொட்டுப் போகும் (இசைப் பாடல்)

Sunday, February 26, 2006

தொட்டுப் போகும் (இசைப் பாடல்)




தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

குரல் மின்னிடும் இசை உன்னதம்
உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
கரு வண்டினம் வலம் வந்திடும்
அரு மலர்வனம் அதன் நறுமணம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

அருள் தூறிடும் அமுதூறிடும்
பொருள் மீறிடும் புதையல் தடம்
தலையாட்டிடும் மழலை மனம்
தாலாட்டெனும் தனி மந்திரம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

சிலை சித்திரம் நடை நாடகம்
ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
உரு மாறிடும் நிழல் ஓவியம்
கலை மேவிடும் மலை மாருதம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

கரை யாவையும் கரைத்தே எழும்
சிறை யாவையும் மறுத்தே எழும்
குறை யாவையும் அறுத்தே எழும்
நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

தொட்டுப் போகும் - எனைத் தொட்டுப் போகும்

விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
மனம் ஆடிடும் குடை ராட்டினம்
களி காதலின் துளிப் பாற்கடல்


(23.02.06)

No comments: