அண்ணாகண்ணன் கவிதைகள்: தீபத் துளிகள்

Monday, November 07, 2005

தீபத் துளிகள்

ஒண்டி நிற்கும் நாய் வெடவெடக்கிறது.
ஓரக் கூரையிலிருந்து அசைகின்றன
நீர்விழுதுகள்.
காற்று அவற்றைப் பிடித்துக்கொண்டு
குரங்குபோல் ஆடுகிறது.

பிச்சையெடுக்கப் போயிருக்கும் லெச்சுமி
இன்னும் திரும்பவில்லை.
குப்பை பொறுக்கும் கோயிந்துவுக்குக்
கோணி கனியவில்லை.

சோன்பப்டி, பழவண்டி, கீரைக்கூடை
எதற்கும் வழியில்லை.
தெருவோரக் கடைகளுக்குக்
கட்டாய விடுமுறை.
வியாபாரிகளுக்கு இந்த முறை
வேட்டையில்லை.

நமுத்த பட்டாசுகள் வீசி எறியப்படுகின்றன
நடு வீதியில்.
நடைபாதைச் சிறுவர்கள்
அவற்றையும் தம் உதடுகளையும்
பிதுக்குகிறார்கள்.

சேறு அடிக்குமென அஞ்சியபடி
புத்தாடைகள்.
இனிப்புகளை ஆசையோடு பார்க்கும்
நீரிழிவுக்காரர்கள்.

தீபத் திருநாள் வந்தென்ன?
வீட்டுக்குள் ஒளிந்துள்ளன
தீபங்கள்.

அனைவரும் அண்ணாந்து பார்க்கிறார்கள்.
மழை ஒன்றுதான்.
துளிகளோ பல்லாயிரம்.

நன்றி:
தமிழ்சிஃபி தீபாவளி மலர் 2005
அமுதசுரபி தீபாவளி மலர் 2005

1 comment:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

very nice work. shows the other side of festivals.. festivals are for people - and people now a days consider them as just holidays.. money and fast lifestyle made all changes..