அண்ணாகண்ணன் கவிதைகள்: July 2005

Sunday, July 31, 2005

எண்ணிப் பார்

எண்ணிப்பார் என்றவுடன் எண்ணித்தான் பார்ப்பார்கள்
மண்மனை பொன்பொருள் வங்கிகனம் - வண்டியென
என்னென்ன உள்ளதென எண்ணித்தான் பார்ப்பார்கள்
என்றாலும் நாம்சொல்வோம் எண்ணு!

எண்ணுதல் ஓர்கலை. எண்ணுதல் ஓர்தவம்.
எண்ணுதல் இன்றோர் இயக்கவிதி - உண்மையில்
எண்ணுதல் ஓர்பயிற்சி. எண்ணுதல் நாகரிகம்.
எண்ணுதல் வாழ்வின் எழில்.

இல்லைகளைக் கழித்து உண்டுகளைக் கூட்டாமல்
இல்லார் விடுத்து இருப்பவர் கூட்டி - எல்லை
பெருக்கி மனம்வகுத்துப் பெய்த கணக்கால்
அடைப்புக் குறிக்குள் தினம்.

தினமென்னும் புள்ளிகளைச் சேர்க்க, இடியாப்ப
தினுசாய்ஓர் கோலம் தெரியும் - தினக்கோடு
நேர்க்கோடாய் ஆகிடும் நேரத்தைக் காணக்கண்
நீர்க்கோடு நின்று விடும்.

விடும்அம்பும் வேர்வையும் வீணாக லாமா?
இடும்வித்து பொய்த்துவிட லாமா? - நெடிய
கனவுக்கு அழகிய கண்தருவோம். என்றும்
கனவின் பதிலி நனவு.

நனவின் நரம்புகள் நைகின்ற போதும்
தினவை இழக்காத தோழா - உனக்காக
நான்சுவைத்த தேன்கனவில் நான்கை அனுப்புகிறேன்
நீசுவைத்துச் சொல்உன் நிலை.

நிலையற்ற வாழ்வில் நிகரற்று வாழ,
தலையுற்ற நீவா தயாராய் - அலைக்கும்
தொலைவுண்டு. வெல்லும் தொலைநோக்கும் உண்டு.
விலையில்லை உன்வியர்வை முத்து.

முத்துவாய் கொண்டே முழங்குவாய். சத்தமாய்க்
கத்துவாய். வெற்றிக் களிப்புறுவாய் - மொத்துவாய்
குத்துவாய் பூமி குலுக்குவாய். உண்மையைப்
பத்துவாய் கொண்டேநீ பாடு.

பாடுபடப் பாடுபடப் பாதை கிடைக்குமெனும்
நாடுபட்ட தத்துவத்தை நாட்டிவிடு - வேண்டும்
இருப்பதற்குக் கூடு; பறப்பதற்கு வானம்;
இருட்டெரிக்க வேண்டும் இனி.

( கல்கி தீபாவளி மலர், 2003)

கிலோ என்ன விலை? (சிறுவர் பாடல்)

கவலை, கிலோ என்ன விலை?
அலை அலையாக அல்லல் வந்தாலும்
சுளை சுளையாகச் சுவைக்கும் மனமே!
கவலை, கிலோ என்ன விலை?

இல்லை மாட்டேன் முடியாது - என
எதற்கெடுத் தாலும் சொல்லாதே!
எல்லை இல்லாப் பேரின்பம் - உன்
"இம்'மெனும் சொல்லில் ஆரம்பம்!

இயங்கிக் கொண்டே இருகண்ணே
இன்னும் உண்டு வெகுதொலைவு
புயலிடம் வேகம் கற்றுக்கொள்
ப்பூவென ஊது; தடையோடும்!

கண்ணீர் வியர்வை குருதியெனக்
காலக் கிண்ணியில் திரவங்கள்!
மண்ணின் வளர்ச்சி அனைத்திற்கும்
மையம் வியர்வை நாளங்கள்!

நிகழ்காலத்துள் வாழ்ந்திட வா
நேரிய வழியில் நடந்திட வா
புகழ்காலத்துள் புகுந்திட வா
புள்ளி வாழ்வைப் புதுக்கிட வா!

Saturday, July 30, 2005

புள்ளிக் கவிதைகள்

வெள்ளத்தில் விழுந்த
சருகின்மேல்
உறங்கிக்கொண்டே
சிரிக்கிறது எறும்பு!
---------------------------------
எறிந்த வடையை
அந்தரத்திலேயே
பிடித்தது
காக்கை.
---------------------------------
சுதந்திரக் கிளி
என்றேனும் சொன்னதுண்டா
சோதிடம்?
---------------------------------
'என்னைக் கொல்லாதே'
எமனிடம் மன்றாடியது
எருமை!
---------------------------------
குற்றவாளிகளின்
அடையாள அணிவகுப்பில்
நின்றவர்,
ஏற்கிறார்
அணிவகுப்பு மரியாதை!
---------------------------------
'முட்டாள் பெட்டி'
இருக்குமா இப்பெயர்...
நீங்கள்
அறிவாளியானால்?
---------------------------------
நூறு ஈர்க்கை
ஒன்று சேர்த்தால்
உன் கையில்
விளக்குமாறு!
---------------------------------
நதிக்குள்
ஓடுகிறது
வாய்க்கால்!
---------------------------------
கைத்தடியைத்
தட்டித் தட்டித்
தடம் பார்க்கிறார்கள்
ஞானப் பார்வை உள்ளவர்கள்!

Friday, July 08, 2005

அப்பாடா!

அடங்கவில்லை!
திமிறிக்கொண்டு வந்தது!
சுற்றுச் சூழலை மறந்தேன்!
என்றாலும்
வெளிச்சம் இருக்கிறது.
மனிதர்களும் இருக்கிறார்கள்.
ஓட்டமான ஓட்டம் எடுத்தேன்.
உரிய இடம் வந்துவிட்டது.
உப்பிய பலூனிலிருந்து
காற்றை விடுவிப்பது போல்
விடுதலை கொடுத்தேன்...
அப்பாடா!
மேல் முதுகுத் தண்டு
திடுக்கென்று சிலிர்த்ததில்
சல்லடை சிலுப்பியதுபோல்
வளைந்து வளைந்து
மண்ணில் விழுந்தது
சிறுநீர்!

Wednesday, July 06, 2005

டம்டம்

(சிறுவர் பாடல்)

டம்டம் டமடம் டம்டம் டமடம்
டம்டம் டமடம் டம்டம் டமடம்

இன்பம் விளையும் துன்பம் தொலையும்
அன்பும் அறனும் பண்பும் பயனும்
இன்றும் இனியும் என்றும் தொடரும்
ஒன்றும் அகிலம் மன்றம் மகிழும்
(டம்டம் டமடம்

அண்டம் முழுதும் பிண்டம் அறியும்
பிண்டம் முழுதும் அண்டம் அறியும்
மண்டும் இருளும் முண்டும் ஒளியும்
ரெண்டும் பயிலும் பிம்பம் உலகம்
(டம்டம் டமடம்

தொங்கும் புவனம் புத்தம் புதினம்
தங்கம் உருகும் தாகம் பெருகும்
அங்கும் நடனம் இங்கும் நடனம்
எங்கும் நளினம் ஏகம் சலனம்
(டம்டம் டமடம்

முந்தும் எதுவும் பிந்தும் கவனம்
பிந்தும் எதுவும் முந்தும் கவனம்
உந்தும் தருணம் சொந்தம் சிகரம்
சிந்தும் உதிரம் சொல்லும் சரிதம்
(டம்டம் டமடம்

நச்சும் நசிவும் எச்சம் இழிவும்
மிச்சம் பலவும் துச்சம் கழியும்
அச்சம் விலகும் மச்சம் பொலியும்
உச்சம் உயரம் உதயம் திலகம்
(டம்டம் டமடம்