அண்ணாகண்ணன் கவிதைகள்: வீரப் பெண்கள்

Tuesday, March 08, 2011

வீரப் பெண்கள்


செய்யெனில் கேட்பாள், செய்யாயின் என்ன?
செய்யாதே என்று செப்பினாள் கேட்பாள்:
செய்தால் என்ன? எதிர்ப்பதக் கேள்வி
எழுப்பித் தெளிந்தபின் எதையும் செய்யும்
பெருத்த முழக்கவர் பேதைப் பெண்களாம்.

தீவிரப் பிழம்பைத் தெறிப்புற ஏந்தி
எத்தகை துக்கம் எழும்பிடும் போதும்
எற்றி உதைத்தே எதிர்நடை போடும்
பிரகடனத்தவர் பெதும்பைப் பெண்களாம்.

திட்டம் தீட்டித் திறம்படச் செயல்படும்
மதிநுட்பத்தை மகுடமாய்ச் சூடி
வெட்டொன்றாயின் துண்டிரண் டாக்கும்
மறம் மலிந்தவர் மங்கையர் ஆவராம்.

வாழ்க்கை என்கிற சதுரங் கத்தில்
காய்களை நகர்த்திக் கணக்கை முடிக்க
வாய்பேசாது செயலினில் பேசும்
வாலிபச் சித்தர் மடந்தையர் ஆவராம்.

மூடக் குழியில் முடங்கிய பேரைக்
கூட இழுத்துக் கொலுவுறச் செய்து,
தேடலின் பாடலைத் தினம்தினம் பாடும்
ஆடக விழியர் அரிவையர் ஆவராம்.

முலாம் பூசிவரும் முகங்களின் முன்னே
ஒப்பனை தரிக்கும் உயிர்களின் முன்னே
உண்மைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்
ஜீவ தேவியர் தெரிவையர் ஆவராம்.

அர்த்த நர்த்தனம் ஆடி, மனமெனும்
கர்ப்பக் கிரகத்தில் கவிதைகள் பாடி
நடுநிலை வகிக்கும் நாகரிகத்துடன்
அனுபவச் சிறகை அடித்துப் பறக்கும்
பிரபஞ்ச மெளனியர் பேரிளம் பெண்களாம்.

செயற்கை நெடியின் இறுக்கம் பொறாமல்
நியம  எஃகை நெஞ்ச நெருப்பால்
வசதியாய் வளைத்து வழி சமைப்பதிலே
தேரிய பேர்கள் தீரப் பெண்களாம்.

எதனை இயலாது என்று இயம்பினரோ
அதனை முதலில் நிகழ்த்திக் காட்டி,
இயம்பிய வார்த்தைக்கு எடைக்கு எடை சமமாய்ச்
சுயர்ஒளிர் கருத்தைச் சுடச்சுடக் கொடுக்கும்
வலி மிகுந்தவர் வைரியப் பெண்களாம்.

காரணங்களுக்கு விடை கொடுத்துவிட்டுக்
காரியங்களுக்கு மடை திறப்பதனால்
மலர்மறப் பெண்கள் மதியொளிர் மதிப்பில்
இலக்கை அடைவதே இயற்கை ஆதலால்
தோழியர் நெஞ்சத் தூய்மையின் நாமம்
வாழிய வென்று வாழ்த்துவம் நாமே.

(அண்ணாகண்ணனின் ‘உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து – முதல் பதிப்பு: 1997 நவம்பர்)

======================================
வீரப் பெண்கள் - http://www.vallamai.com/?p=2163

12 comments:

வல்லிசிம்ஹன் said...

ஒவ்வொரு வகைப் பெண்களையும் திறம்பட வகுத்துப் பாராட்டி இருக்கிறீர்கள். எங்கள் சார்பில் உங்களுக்கு நன்றி.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very Good post keep is up

மன்னார் அமுதன் said...

நல்ல அருமையான கவிதை

அளவை கலைக்கரன் said...

Very nice Post...

அளவை கலைக்கரன் said...

Very Nice Post...

Jam@Ramanujam said...

இலக்கணம் ததும்ப உண்மை தமிழ்த் தேன் சுவைத்தேன் தோழரே. அருமை

Latest Tamil Cinema News said...

Nice

ஆனந்தன்,,, said...

உங்களைப்போன்ற கவிஞர்கள் இருக்கும்வரை தமிழின் கொடி தாழாது என்று மகிழ்வுடன் நம்புகிறேன்... நன்றி!

NIZAMUDEEN said...

பருவம் ஏற, ஏற மாறும் பெண்டிர் குணநலன்களைப் பகுத்(து தந்)த கவிதை. மிக்க நன்று.

சே. குமார் said...

வணக்கம் ஐயா...

தங்கள் வலைப்பூவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே..


http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7179.html

நன்றி...

நேசத்துடன்
சே.குமார்

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_7179.html