அண்ணாகண்ணன் கவிதைகள்: அம்மே அம்மே இது நற்காலமே

Saturday, January 01, 2011

அம்மே அம்மே இது நற்காலமே


அம்மே அம்மே இது நற்காலமே
ஆமே ஆமே இனி உற்சாகமே

மனமே காதலில் பண்படுமே
மானுடம் அன்பினில் மேம்படுமே
திருமிகுமே தீபம் தென்படுமே
திக்குகள் உன்னைக் கும்பிடுமே

எட்டத்தில் இருப்பவை கிட்டத்தில் வரட்டுமே
நட்டத்தில் இருப்பவர் லாபத்தைப் பெறட்டுமே
வட்டத்தில் இருப்பவர் வானத்தில் எழட்டுமே
கட்டத்தைக் கடக்கவே திட்டத்தை தருகவே.

ஒட்டாத நெஞ்சமும் ஒட்டிவர வேண்டுமே
விட்டாடும் யாவுமே தொட்டாட வேண்டுமே.
மொட்டாகப் புன்னகை கட்டாயம் வேண்டுமே
சிட்டாக வானிலே சென்றாட வேண்டுமே.

பட்டமரம் பூக்குமே பாறையும் சுரக்குமே
வெட்டவெளி எங்குமொளி வெள்ளமெனப் பாயுமே
நட்டநடு நெற்றியிலே நட்சத்திரம் தோன்றுமே
விட்டகுறை தொட்டகுறை இட்டுநிறைவாகுமே.

வேட்டைக்குப் போகலாம் வீரத்தைக் காட்டலாம்
மேட்டையும் பள்ளத்தையும் மிதமாய் இணைக்கலாம்
கோட்டைக் கடந்துவந்தால் கோட்டையைப் பிடிக்கலாம்
பாட்டைப் படித்துக்கொண்டே படைகளை நடத்தலாம்.

ஆட்டத்தைத் தொடங்குவோம் ஆழத்தில் இறங்குவோம்
கூட்டத்தைக் கூட்டுவோம் கொட்டத்தை அடக்குவோம்
வாட்டத்தைப் போக்குவோம் வாழ்க்கையை வாழுவோம்
நாட்டுக்குள் நன்மையை நாட்டுவோம் நாட்டுவோம்.

==========================
அம்மே அம்மே இது நற்காலமே - http://www.vallamai.com/?p=1572

4 comments:

Unknown said...

அழகும் கருத்துச்செறிவும்..

tamil web library said...

your all blogs are good

visit my blog

tamil web library

தோழன் சிங்கமுகன் said...

சிறப்பான வலைத்தளம்....

தோழன் சிங்கமுகன் said...

செறிவுள்ள எழுத்தாக்கம்.