அண்ணாகண்ணன் கவிதைகள்: உதடு ஒட்டாமல் ஒரு பாடல்

Sunday, January 21, 2007

உதடு ஒட்டாமல் ஒரு பாடல்

அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும் என்று ஒரு புதிர் உண்டு. அதற்கு விடை, 'உதடு' தான். அண்ணன் என்று உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டா. தம்பி என்கிற போது ஒட்டும்.

திருக்குறளில் சில பாடல்கள், உதடு ஒட்டாமல் வருபவை.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

என்பது அவற்றுள் ஒன்று.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இல

என்பதையும் உதடு ஒட்டாத பாடலுக்குக் காட்டாகக் கூறுவது உண்டு. ஆயினும் இதில் நோதல் என்ற சொல் வருகிறது. நோ என்று உச்சரிக்கையில் உதடு ஒட்டாவிட்டாலும் குவிகிறது. உதடு குவியாமலும் இருக்குமேயானால் அதுவே இந்த வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளோ, அதன் இன எழுத்துகளோ, கூட்டு எழுத்துகளோ இடம் பெறாமல் ஒரு பாடலை இயற்றினால் அது, இயல்பாகவே உதடு ஒட்டாத பாடலாக இருக்கும். மேலும், வ என்ற எழுத்தினை உச்சரிக்கையில் உதடு ஒட்டவில்லை. ஆனால், கீழுதடு, மேல்வரிசைப் பற்களில் படுகின்றது. இந்த வகையான ஒட்டுறவு கூட இல்லாமல் பாடவேண்டும் என்பது என் விருப்பம்.

உதடு ஒட்டாத பாடல், சித்திரக் கவிகளுள் ஒரு வகையாக இடம் பெற்றுள்ளது.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு 44 அடிகளில் இத்தகைய பாடல் ஒன்றை எழுதினேன். இன்று அதை எடுத்துப் பார்த்தேன். அதில் சில திருத்தங்கள் செய்து, 12 அடிகள் கொண்ட பாடலாகச் சுருக்கினேன். உதடு ஒட்டாமலும் குவியாமலும் கலி வெண்பாவில் அமைந்துள்ள அந்தப் பாடல் இங்கே:

காதல் இசை

காதல் இசையே! கனாக்கணையே! என்திசையே!
நாதக் கடலே! நன்னதியே! என்நிதியே!
ஆசைக் கிளியே! அதியெழிலி ஆயிழையே!
நாசிநிறை காற்றே! நடையழகி நாயகியே!
கண்ணே! கனியே! கனகநிகர் கன்னிகையே!
தண்ணீர்த் தணலே! தயைநிறை தாயே!
அலையே! அலையில் கயலே! கயலின்
கலையே! கலையின் நிலையே! நிலையேன்நீ!
நீசென்றால் அங்கே நிழலாய் நிறைகின்றேன்
நீசிரித்தால் சில்லென நெஞ்சே சிரிக்கின்றேன்!
தித்திக்கத் தீரன் திளையாய்த் திளைத்திட
இத்திக்கைக் காண்நீ இனி!

9 comments:

Anonymous said...

அண்ணாகண்ணன்,
பாடல் நன்றாக இருந்தது. பாடலில் நீங்கள் கையாண்டுள்ள தமிழ் மிகவும் இளமை. ஆனால் இளமைக்கே உரிய (உதடு)ஒட்டுதலை அகற்றி விட்டது வருத்தமே.
நன்றி.
ஜகன்
தோஹா, கத்தார்.

Anonymous said...

புதுமையான முயற்சி.

புதுக்கவிதையில் இதுபோன்ற பரீட்சைகள் செய்து பார்ப்பது அவ்வளவு சுலபமாக இருக்காதுதானே?

முனைவர் அண்ணாகண்ணன் said...

கிருபாஷங்கர்,

புதுக்கவிதையிலும் இப்படி முயன்று பார்க்கலாம். ஆனால், யாப்பில் இதை முயல்வதில் மூன்று சவால்கள் உண்டு.

1. உதடு ஒட்டாத எழுத்துகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. யாப்பின் அளவுக்குள் பொருந்தி வர வேண்டும்.

3. பொருட்செறிவும் இருக்கவேண்டும்.

அதுவும் வெண்பாவில் இதை முயலும்போது, காய் முன் நேர், விளம்முன் நிரை, மாமுன் நிரை என்ற முறைப்படி அமைய வேண்டும். இதற்குள் எதுகை மோனையும் அமைந்தால் இன்னும் சிறப்பு.

மொழித் திறனை வளர்க்க, இத்தகைய முயற்சிகள் பெரிதும் உதவும்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

முக்கிய தகவல் ஒன்று:

உதடு ஒட்டாத பாடல் வகைக்கு நீரோட்டகம் என்று பெயர். இந்தப் பாடலைப் பாடும்போது, சலசலவென நீர் ஓடுவது போல் இருப்பதால் முன்னோர்கள் இவ்வாறு பெயர் வைத்துள்ளார்கள்.

ஐந்திணை said...

மிக நல்ல முயற்சி....தொடருங்கள்

Anonymous said...

அண்ணாகண்ணன்,

பாடல் நல்லா இருக்கு.

ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதர், நிரோஷ்டா என்றொரு ராகத்தை (சங்கராபரணத்தை தாய் ராகமாகக் கொண்டு) உருவாக்கினார். 'ச ரி க ம ப த நி' என்ற ஸ்வரங்களில் உதடு ஒட்டா ஸ்வரங்களான 'ச ரி க த நி' என்ற ஸ்வரங்களைக் கொண்ட ராகம் அது. அந்த ராகத்தில் அவர் இயற்றியுள்ள 'ராஜ ராஜ ராதிதே' என்ற பாடலும் தாங்கள் எழுதியுள்ளதைப் போலவே அமைந்துள்ளது.

பாடலை இங்கு கேட்கலாம்: http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/s/artist.114/

அன்புடன்,
லலிதா ராம்.

Anonymous said...

nirOttam is a word derived from sanskrit nirOshtram. nir means no, Oshtram means lips. Thus a song or sentence with no use of lips.

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

நன்று.
நீசிரித்து /து இதழ்குவியும்.
தித்திக்க ஐயன் //வகரவுடன்படுமெய் பெற்று, தித்திக்க வையன் - என்றாகும். வகரம் இதழொட்டும்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களுக்கு நன்றி. திருத்தியுள்ளேன்.