தானமும் கொடையும் என்ற தலைப்பில் இராம.கி நல்லதொரு பதிவினை இட்டுள்ளார். அதில் ஈ, தா, கொடு ஆகிய சொற்களைத் தொல்காப்பிய நூற்பாக்களுடன் விளக்கியுள்ளார்.
இதே ஈ, தா என்ற எழுத்துகளைக் கொண்டு முன்பு ஒரு கவிதை முயற்சியில் நான் ஈடுபட்டதுண்டு.
1996இல் வெளிவந்த என் பூபாளம் என்ற கவிதைத் தொகுதியில் ஓரெழுத்து ஒருமொழிகளைப் பயன்படுத்தி, ஏழே எழுத்துகளில் ஒரு கவிதை யாத்திட முயன்றேன். அது:
ஈ
சீ
தா
போ
ஏ
பே
ஓ
----------------------------------------------------
இது, இருவருக்கு இடையிலான உரையாடல்.
காட்சி 1:
முதலாமவன், கீழ் நிலையிலிருந்து 'ஈ' என இரந்து கேட்கிறான். இரண்டாமவன் 'சீ' என இகழ்ந்து விரட்டுகிறான்.
காட்சி 2:
இப்போது எண் 1, கொஞ்சம் வளர்ந்துவிட்டான். இரண்டாமவனோடு சம நிலைக்கு வந்துவிட்டான்; எனவே 'தா' எனக் கேட்கிறான். அதற்கு எண் 2 ஒப்பவில்லை. 'போ' என மறுத்து விலக்குகிறான்.
காட்சி 3:
இப்போது எண் 1 சினம் அடைகிறான். தரப் போகிறாயா இல்லையா என மிரட்டும் விதமாக, 'ஏ' என அதட்டுகிறான். அதைக் கண்டு எண் 2, 'பே' என அஞ்சுகிறான்.
இந்த 3 காட்சிகளையும் நோக்கும் மூன்றாம் ஆள் ஒருவர், 'ஓ' எனப் புரிந்துகொள்கிறார்.
இந்த 3 காட்சிகளும் உடனுக்குடன் நிகழுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகும் இவ்வாறு நிகழலாம். இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தால், அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது முதல், இன்று ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பெற்றது வரை பலவற்றையும் இந்த 7 எழுத்துகள் எடுத்து இயம்புவதை உணரலாம்.
9 comments:
உயர்ந்துவிட்டீர்கள் அண்ணாகண்ணன்.
அருமை. அற்புதம் உங்கள் ஏழு எழுத்து கவிதை.
நன்றி.
நான்கூட ஒரு கவிதை எழுதினேன்.
இதோ :
4, 8, 12, 16, 20 .....
படகடியில் மறைந்தன!
இதில் கடைசியில் மூன்றாவது வரியாக ஒரு வார்த்தை குறைகிறது.
அது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?
சொல்லுங்கள் பார்க்கலாம்!
4, 8, 12, 16, 20 .....
படகடியில் மறைந்தன
...பாதங்கள்!
மாசிலா.
விளக்கம் :
மணலில் காதலர்கள் இருவர்களின் காலடிகள்.
ஆ
[அருமையான கற்பனை.
பாராட்டுகள் அண்ணா கண்ணன். :-)]
அருமை மாசிலா. அழகிய காட்சி, கண்முன் விரிகிறது.
கலக்கல் !!!!!
நீரே எழுதியதா அல்லது மண்டபத்தில் யாரேனும் ? ஹி ஹி
மரபை மீறு கவிசமைத்துவிட்டதாக வந்து ஊளையிடாது இருந்தால் சரி.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
செந்தழல் ரவி,
என் பூபாளம் கவிதைத் தொகுப்பில் (முதல் பதிப்பு - நவம்பர் 1996) பக்கம் 94இல் இந்தக் கவிதை இடம் பெற்றுள்ளது. ஐயம் இருந்தால் சரி பார்க்கலாம். இந்த நூல், தமிழக நூலகங்களிலும் சென்னை கன்னிமரா, கொல்கத்தா, மும்பை தேசிய நூலகங்களிலும் உள்ளது.
ஆ!
ஹா!!
ஓ!
சே!!
Post a Comment