ஒரே இனம்கொண்ட எழுத்துகளை மட்டுமே கொண்டு எழுதப்படும் பாடல்கள், சித்திரக் கவியில் வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு என்பவையாக இடம் பெற்றுள்ளன. கவி காளமேகம், 'க' என்கிற ஒரே எழுத்தின் இனங்களைக் கொண்டே ஒரு பாடல் இயற்றியுள்ளார்.
வல்லினப் பாட்டு
க,ச,ட,த,ப,ற ஆகிய வல்லின எழுத்துகளை மட்டுமே கொண்டு வெண்பா இயற்ற இன்று நான் மேற்கொண்ட முயற்சி இது >>>
கடுகடு காடு; கிடக்குது கோடு;
படபடப் போடுகூப் பாடு! - திடுக்திடுக்!
செப்பக் கடிது; சிடுக்கு தடுக்குது
தப்பச் சிறுபாதை தேடு!
மெல்லினப் பாட்டு
ங, ஞ, ந, ண, ம, ன ஆகிய மெல்லின எழுத்துகளை மட்டுமே கொண்டு ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் இயற்றிய வெண்பா இது >>>
மான்நீ! மணிநீ! மனமும்நீ! மண்ணும்நீ!
நான்நீ! நமனும்நீ! ஞானம்நீ - மீன்நீ
நனிமோனம் நன்னும்நீ நாணுமினம். மௌன
மினிமின்னும்! மானம்நீ மா!
இடையினப் பாட்டு
ய,ர,ல,வ,ழ,ள ஆகிய இடையின எழுத்துகளை மட்டுமே கொண்டு ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் இயற்றிய வெண்பா இது >>>
வல்லவ ரல்லார் வளையாரா? வாயவிழ
வில்லவரே! வாயாரை வேல்விழியால் - வெல்லுவீ
ருள்ளவரில் வாழ்வுளா ரில்லவரே! யாழுளா
ரள்ளுவ ருள்ளவரை! யார்?
4 comments:
யாழுளா
ரள்ளுவ ருள்ளவரை! யார்?
யாழ் உளார்.
அள்ளுவர்
உள்ளவரை! யார்?
விளக்கமும் வேண்டும் கண்ணன்.
பொருளுரை,பொழிப்புரை,கருத்துரை படித்து வளர்ந்த புத்தி என்னுடையது. :-)
வல்லிசிம்ஹன், கூர்ந்து கவனித்துக் கேட்டுள்ளீர்கள். குறிப்பிட்ட அந்த இடத்தில் சற்று பொருள் மயக்கம் உள்ளது.
பாட்டின் பொருள்:
பெண்கள் வலிமை அற்றவர்களா? அப்படிக் கூறுவோரை வில்லொத்த வளைவும் வீச்சும் ஆற்றலும் கொண்ட பெண்களே, உங்கள் வேல்விழியால் வெல்லுங்கள். மனித இனத்திலேயே மகத்தான வாழ்வு மிக்கவர்கள், மகளிரே! யாழின் ஆற்றலைத் தன்னகத்தே கொண்ட இவர்கள், இந்த உலகையே தம் வசம் ஆக்குவார்கள். இதை மறுப்போர் யார்?
விளக்கம்:
இந்த இடையினப் பாட்டு, பெண்ணின் பெருமையைப் பாடுகிறது. வளையார், வில்லவர், இல்லவர், யாழுளார் என்ற 4 அடைமொழிகளில் அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
வளையார் என்று வளையணிந்த பெண்களைச் சொல்வதுண்டு; இங்கு அந்தப் பொருளுடன் எதற்கும் வளையாதவர் என்ற பொருளும் பொருந்தும். அடுத்த இரண்டாவது சொல்லிலேயே, வளைவதையே தொழிலாகக் கொண்ட வில்லுடன் அவர்கள் ஒப்பிடப்படுகிறார்கள். அடுத்த இரண்டாவது சொல்லில் வளையாத, நேராக மட்டுமே செல்லும் வேலினை அவர்களின் விழிகள் அடையாகப் பெறுகின்றன. இதன் மூலம் 'கொடியென வளைவது உடல்; கூர்மை தவறாது செயல்' என்பதைக் குறிப்பால் உணரலாம்.
இல்லவர் என்பது, வீட்டில் இருப்போரை மட்டும் குறிப்பதாக எடுக்க வேண்டாம். இந்த இல் எது என்பது ஆய்வுக்கு உரியது. உள்ளமே இல் என்பது தொடங்கி, உலகமே இல் என்பது வரைக்கும் பல தத்துவங்கள் உண்டு என்பதை நினைவிற் கொள்க. இந்த இடத்தில் சொல் அளவில் பெண்களைக் குறித்தும் பொருள் அளவில் விரிவான தளத்திலும் இது இயங்குகிறது.
பெண்களை இசையுடன், ராகத்துடன் ஒப்பிடுவது இயல்பு. சங்கீதா, கல்யாணி... என இசை தொடர்பான பெயர்கள் அவர்களுக்குச் சூட்டப்படுகின்றன. கலைவாணி, நரம்பு வாத்தியமான வீணையுடன் வீற்றிருக்கிறாள். வாத்தியங்களைப் பொறுத்தவரை, முழவையும் குழலையும்விட யாழே பெண்மை மிகுந்ததாய் உள்ளது. யாழ் என்பதை ஒட்டுமொத்த கம்பி வாத்தியங்களின் குறியீடாகக் கொள்க. எனவே, யாழினை நிகர்த்த / யாழிசையின் இனிமையும் ஈர்ப்பும் உடையவளாகப் பெண் சித்திரிக்கப்படுகிறாள்.
யார் என்ற முடிபு, பல்வேறு பொருள் சாத்தியங்களைக் கொண்டது. இந்த முடிவை, முதல் அடியில் உள்ள வல்லவ ரல்லார் வளையாரா? என்ற கேள்வியுடன்கூட இணைக்க முடியும். கேள்வியின் அழுத்தத்திற்காக இரு முறை கேள்வி எழுப்பலாம்.
கண்ணன் சார்,
உண்மையில் எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.
படிக்காமல் விட்ட தமிழ் மேல் பாசமும் அதிகம்.
இத்தனை அர்த்தங்கள் ஒரு நான்கு வரிகளில் அடக்கிட முடிகிறது.
நம் தமிழைவிட மேலெ எந்த மொழி இருக்க முடியும்.
வல்லவரவல்லார் வளையாரா.
வளைபவரும் வல்லாரே.
எப்படியெல்லாம் வார்த்தைகள் வளைகின்றன!
//உள்ளி,ல் தொடங்கி உலகி,ல் முடியும்'இல்'.//
உண்மைதான்.
வில்,வேல்,யாழ்,கூர் சொல்
மறுக்க முடியாத உண்மைகள்.
நன்றி நன்றி.மீண்டும் நன்றி.
கடுகடு காடு; கிடக்குது கோடு;
படபடப் போடுகூப் பாடு! - திடுக்திடுக்!
செப்பக் கடிது; சிடுக்கு தடுக்குது
தப்பச் சிறுபாதை தேடு!
அண்ணா கண்ணன்
மூன்று பாடல்களும் அருமை
வல்லின பாடலில் சொல்லிடை வரும் வல்லினம் மெலிந்து ஒலிக்கும்.
கடகட எனப்தில் முதல் க வலிந்தும் அடுத்து வருவது மெலிந்தும் ஒலிக்கும்.
ஹஹ்ஹா
வேந்தன் அரசு
Post a Comment