அண்ணாகண்ணன் கவிதைகள்: வா

Friday, October 07, 2005

வா

சிறுவர்களின் தமிழ் உச்சரிப்பைச் செம்மையாக்க, தமிழின் சிறப்பெழுத்துகள் அதிகம் வருமாறு ஒரு பாடல் வேண்டும் என்று கவிஞர் ரவி சுப்ரமணியன் கேட்டதற்கு இணங்க, 25-9-05 அன்று எழுதிய பாடல் இது:

அலைஅலையென அலைஅலையென அலைஅலையென வா
அழுக்ககற்றிட, அழகொளிர்ந்திடக் கலகலவென வா
தலைதலையென நிலைநிலையெனத் தாளமிட்டு வா
தழுதழுத்திடும் குளவிழிநிலை ஜொலிஜொலித்திட வா

பளபளக்கிற களமிருக்குது பழம்பறித்திட வா
பள்ளம்மேடு கல்லுமுள்ளு பதறியோட வா
வளவளப்பறு உரைநறுக்கிடு பொறிபறந்திட வா
மலைமுகட்டினில் கொடிபறந்திட அடியெடுத்துடன் வா

கிழக்கிருக்குது விழிப்பிருக்குது உழைப்பிருக்குது வா
கிளைவிரித்திட, தளையறுத்திடக் கிடுகிடுவென வா
சுழன்றடிக்கிற சூறாவளி சொல்லிவச்சு வா
தொல்லைகளைத் தொலைவுகளைச் சுளுக்கெடுத்திட வா

திரைமறைவினில் தரையடியினில் ஒளிந்திடாது வா
திருதிருவிழி கருகருமுகம் புகையகன்றிட வா
சரம்சரமென வரம்வரமெனச் சலசலத்து வா
தகுதியுண்டு தாகமுண்டு கனவுகண்டு வா

இழிபழிவழி தனைஅழித்தொழி ஒளிவழிநட வா
இணையிலைஎனும் கணைவிடுஉடன் இலக்குநோக்கி வா
மொழியினம்புலம் தொழில்வகுப்பெனும் பிரிபிளவொழி வா
முளைவிரிமுனை பிறைநிலவொளி கனல்கதிரென வா.

1 comment:

SnackDragon said...

நல்ல பாடல். சிறுவர்களுக்கு கடினாமாக இருக்குமோவென நினைக்கிறேன்.