காயவைத்த தானியத்தைக்
கொத்தவரும் குருவிகளை நோக்கி
நீளுகிறது ஒரு கழி.
வாழைப்பழத் தோலை
இந்தா என நீட்டி
அருகில் வரும் மாடுகளை
வகையாய் அடிக்கிறது நமது கம்பு.
சாப்பிட முடியாத அளவுக்குக்
கெட்டுப் போன பிறகே
ஞாபகம் வருகின்றன நாய்கள்.
காக்கைக்குச் சோறு வைத்துவிட்டு
வரும் காக்கைகளை
விரட்டுகிறோம்.
கொஞ்சம் பறந்து
மீண்டும் உட்கார வரும் அதனை
மீண்டும் மீண்டும் விரட்டி
விளையாட்டு காட்டுகிறோம் குழந்தைக்கு.
உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
குருவிகளுக்கு அரிசி தூவியபடி
பார்க்கிறான் பாரதி.
ஒவ்வோர் எறும்புப் புற்றிலும்
அடிக்கடி நடக்கிறது
ஜாலியன்வாலாபாக்.
வாலைப் பிடித்து முடிந்தவரை
தூக்கி எறிகிறோம் எலிகளை.
கரப்பான்களைக் கொல்ல ஒரு தெளிப்பான்.
கொசுக்களுக்கும்
ஈக்களுக்கும் வெவ்வேறு தெளிப்பான்கள்.
தன் வீட்டோடு தானும் அழிகிறது
எட்டுக்கால் பூச்சி.
உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
கழுதையைக் கொஞ்சியபடி
பார்க்கிறான் பாரதி.
ஊரிலிருந்து கணவன்
தன் மனைவிக்குக்
காதல் பறவைகளை அனுப்பினான்.
அடுத்த கடிதத்தில் கேட்டான்:
'பறவைகள் எப்படி இருக்கின்றன?'
அதற்கு மனைவி எழுதினாள்:
'பறவைகள் சுவையாய் இருந்தன'.
இது ஒரு கதை.
ஆனால்,
உலகைக் காட்டும் கண்ணாடி.
உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
யானைக்குப் பழம் கொடுத்தபடி
பார்க்கிறான் பாரதி.
நமக்காகக்
காவல் காக்கிறது நாய்.
பால் கொடுக்கின்றன
பசுவும் எருமையும்.
உழுகிறது காளை.
இழுத்துச் செல்கிறது குதிரை.
நமது சுயநலத்துக்காக
இவற்றை உயிரோடு விட்டுள்ளோம்.
எப்போது தேவையோ
அப்போது கொல்வதற்காக
வளர்க்கிறோம்
ஆடுகள், கோழிகள், மீன்கள்...
இன்னும் நிறைய உயிர்கள்.
உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
குயில் பாட்டுப் பாடியபடி
பார்க்கிறான் பாரதி.
(தினமணி கதிர் 31-12-2000
பாரதியார் விழாக் கவியரங்கில் வாசித்த கவிதை)
2 comments:
மிக அருமையான சிந்தனை
உலகம் மனிதர்களுக்கு மட்டும் தானா?
அழகு பொருட்களுக்காகவும், மருந்துகள் செய்வதற்காகவும், நமது இதர சௌகரியங்களுக்காகவும் அப்பாவி ஜீவன்கள் பலி- இதில் சின்னஞ்சிட்ரு கொசு முதல் பெரிய யானை வரை விதிவிலக்கில்லை-
a very nice work and it makes everybody thinking.. see the reality.. no body is even thinking about other human being now a days.. who is taking care of animals and birds.. that life is gone.. i am not even seeing sparrows in chennai.. when i go to my village.. i really enjoy..a life will be happy and valuable if it is having all around us..
Post a Comment