அண்ணாகண்ணன் கவிதைகள்: சில நேரங்களில் சில உயிரினங்கள்

Saturday, September 04, 2010

சில நேரங்களில் சில உயிரினங்கள்

வாலைத் தூக்கிக்கொண்டு
ஓடி வந்த அணில்,
திறந்த கதவினுள்
எட்டிப் பார்க்கிறது.

பரணில் ஒளிந்திருந்த பூனை
திடுக்கென இறங்கி ஓடியது.
'குட்டி போட்டுவிடப் போகிறது'
அஞ்சினாள் அம்மா.

சமையல் மேடையில்
அடிக்கடி உலவுகின்றன
பல்லிகள்.

குளியலறையிலிருந்து
குதித்துத் தாவுகின்றன
தவளைக் குஞ்சுகள்.

கரப்பான்களுடன்
அவ்வப்போது நிகழ்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம்.

ஒட்டடை தட்டும்போதெல்லாம்
தப்பிவிடுகிறது சிலந்தி.

ஒரு படையெடுப்பு
எப்படி இருக்கும் என
எறும்புகள் கற்பிக்கின்றன.

எறும்புகள் மொய்த்த முறுக்குகளை
வெயிலில் காயவைத்தேன்.
கவ்விச் சென்றது காக்கை.

மின்விசிறியை ஏமாற்றி,
என்னை எங்கே, எப்படி
கடிக்க வேண்டும் எனக்
கொசுக்களுக்குத் தெரியும்.

இவற்றிடமிருந்து தப்பிக்க,
அனைத்து ஜன்னல், கதவுகளை
மூடி வைத்தேன்.
மூச்சு முட்டியது
வியர்வை பெருகியது.

எல்லாக் கதவுகளையும்
திறந்துவிட்டேன்.

முக்கியம்தான்
என் மூச்சு எனக்கும்
அதன் மூச்சு அதற்கும்.

================================
நன்றி - வடக்கு வாசல், செப்.2010

8 comments:

அதிரை என்.ஷஃபாத் said...

ஆஹா.. என்ன ஒரு அருமையான கவிதை.

உங்களின் 'பூபாளம்' படித்து இருக்கின்றேன்..


அன்புடன்,
அருட்புதல்வன்
www.aaraamnilam.blogspot.com

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அருமையான கவிதை வரிகள்

மனம் மகிழ வாசித்தேன்

வாழ்த்துக்கள்

நட்புடன் இளங்கோவன்
சென்னை.

அப்பாதுரை said...

ரசித்துப் படித்தேன்

Unknown said...

Hi.. One of my south indian friends suggested your blog. I've made this Golu Application, and would be more than happy if you would try it and maybe review it on our Blog!

http://parlegolugalata.com/

With much appreciation,
Nainy

Unknown said...

இந்தப் பூச்சிகளுடனான அனுபவங்கள் அன்றாடம் எல்லாருக்குமே நிகழக்கூடும் என்ற போதிலும் இவைகளை கவனித்து கவிதையுள் திணித்த தங்களின் சாமர்த்தியம் படிப்பதற்கு ஓர் இன்பானுபவமாக உள்ளது...ஆனால் அணிலைக் கூட விட்டு வைக்காத நீங்கள் எலியை எப்படி மறந்தீர்கள்?...

முனைவர் அண்ணாகண்ணன் said...

இவையெல்லாம் என் வீட்டில் நான் கண்டவை. பூனையார், பாம்பார் இருப்பதால், எலியாரின் நடமாட்டம் சற்று குறைவு. அதனால் அவர், கவிதைக்குள்ளும் எட்டிப் பார்க்கவில்லை.

Jayakumar said...

Arumaiyana kavithai... thodarnthu ezhuthungal...

Vazhuthukaludan

tha.jaikumar(Thrisakthi)

pammalar said...

மிக வித்தியாசமான கவிதை !