அண்ணாகண்ணன் கவிதைகள்: மகுடம் விரும்பாத கோ

Thursday, February 11, 2010

மகுடம் விரும்பாத கோ

(கவிக்கோ ஞானச்செல்வன் 70ஆம் அகவை நிறைவினை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துப்பா)

பிரம்பில்லா ஆசிரியர்; பிள்ளைமனச் சீலர்;
வரம்பில்லா நேயர்;உளத் தூயர் - நரம்பில்லா
நாவால் தமிழாளும் நாவலர்; கட்டழகுப்
பாவால் உலகளப் பார்.

சிவஞானத் தொண்டர்; தியாகியின் மைந்தர்;
தவமாய்த் தமிழ்கற்ற தக்கார் - நவமாய்
வகுப்பெடுத்த வல்லார்; வழிகாட்டும் நல்லார்;
மகுடம் விரும்பாத கோ.

நன்னூல் படித்ததுடன் நன்னூல்கள் ஆக்கியவர்;
தன்னுள் தனைக்காண் தகவாளர் - புன்னகையால்
மேடைத் தமிழை மெருகேற்றும் பாவலர்க்குள்
கோடை மழையின் குளிர்.

நற்பண்பு, நற்செயல், நற்சொல் இவையெல்லாம்
ஒற்றை உருவில் ஒளிகூட்ட - நற்பயனாய்
நற்குடும்பம், நற்புகழ், நட்பு இவையெல்லாம்
பெற்றார் பெரிதின் பெரிது.

எதுதமிழ் என்றுபலர் இங்கே குழம்ப,
இதுதமிழ் என்றே இயம்பும் - மதுரகவிக்
கோஞானச் செல்வன் கொளுத்தும் சுடரிதனால்
பூஞாலம் வாழும் புலர்ந்து.

எண்ணியவை ஈடேறி, இன்பக் களிதுள்ள,
எண்ணாச் சிறப்புகளும் எய்திடுவீர் - திண்ணம்
நொடிதோறும் வாழ்ந்துவளர் நூற்றாண்டின் ஒவ்வோர்
விடியலையும் காண்பீர் வியந்து.

1 comment:

kargil Jay said...

நல்ல கவிதை அண்ணா கண்ணன்.. மரபுக் கவிதையில் பெரியதாகவே எழுதிஇருக்கிறீர்கள்