கரும்பலகையைத் துடைத்தபின் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
மாணவர்கள் கூறினர்: 'ஒன்றுமில்லை'.
கவிழ்த்த புட்டியைக் காட்டிக் கேட்டேன்.
'இதில் என்ன இருக்கிறது?'
பார்த்தோர் அனைவரும் பட்டெனக் கூறினர்:
'ஒன்றுமில்லை'.
வெள்ளைத் தாளைச் சுட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
கல்வியில் சிறந்தோர் எல்லோரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.
அமரா இருக்கையைக் காட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
சற்றுமுன் அதில் அமர்ந்தவர் உள்பட
அனைவரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.
**************************
எழுதிய பலகையில்
சில எழுத்துகளே உண்டு.
எழுதாப் பலகையில்தான்
எல்லாம் உண்டு.
நிறைத்த புட்டியில்
கொஞ்சமே உண்டு
கவிழ்த்த புட்டியில்
காற்றும் உண்டு.
அச்சிட்ட காகிதத்தில்
எழுத்துகள் சிறைப்பட்டுள்ளன.
அவற்றால் இனி எங்கும் தப்பி ஓட இயலாது.
வெள்ளைக் காகிதத்தில்
காத்திருக்கிறது ஒரு சுதந்திர வெளி.
அமரா நாற்காலிகள்
வெற்று இருக்கைகள் அல்ல.
முன்பு அமர்ந்தவர்களின் உடற்சூடு
அதில் இன்னும் இருக்கிறது.
அவர்களின் வியர்வை கலந்த வாசம்
இன்னும் அதில் வீசுகிறது.
உண்மையில்
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.
**************************
நுகரும் இந்த மூச்சிலே
நூறு நூறு சக்திகள்
கண்ணை மூடும் போதிலே
எல்லை இல்லாக் காட்சிகள்!
வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது.
சொற்களுக்கு இடையில்
கவிதை சிரிக்கிறது.
இருளுக்குள் மர்மம் நீடிக்கிறது.
மவுனத்தில் மட்டுமே
முழுமை இருக்கிறது.
ஆம்,
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.
==================================================
(11.12.2009 பாரதியார் பிறந்த நாள் அன்று சென்னை பாரதி நினைவு இல்லத்தில் அமர்ந்து, கவியரங்கில் பங்கேற்குமாறு வானவில் பண்பாட்டு மையம் விடுத்த அழைப்பை ஏற்று, உடனே எழுதியது)
6 comments:
சிறப்பாக இருக்கின்றன.
எழுதாத காகிதத்திலும்
சுதந்திர மனத்திலும்தான்
ஓவியம் வெளிப்படும் என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன்..
அதைவிட சிறப்பாக எழுதிவிட்டீர்
//ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை//
உண்மை.
vetridam enbar makkal. adhu vetri in idam enbaan gnani.
abaaram
அருமை அண்ணாகண்ணன்.
அன்புள்ள அண்ணனுக்கு,
நான் படித்த கவிதைகளின் தாக்கம் ஒரு சில மணித்துளிகள்
மட்டுமே என் மனதில் தாக்கு பிடிக்கும்.
அவற்றுள் சில மட்டும் தான் என் மனதில் குடியிருக்கும்.
ஆனால் உண்மையில் உமது எழுத்தை படித்தபின்
அதை விட்டு விலக நினைத்தும் முடியவில்லை..
அது என் சிந்தனையை சிதறவிடவில்லை வேறு எங்கும்
சிந்தித்தேன்.. ஆம் அண்ணா..
ஒன்றுமில்லை என்று சொல்லும் சொல்லில் கூட
எழுத்துக்கள் உண்டு...
வெற்றிடம் என்று சொல்வார்களே,
அதிலும் கூட வெற்று இடம் இருக்கிறது தானே.
யாரும் இல்லை என்று கூட சொல்லிவிடலாம்.
எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது தானே..
நான் சரியா அண்ணா.
உமக்கு நேரம் இருந்தால் ஒரு சிறு நிமிடம்
எனக்காக தந்து ஒரு மின்னஞ்சல் செய்வீரா?
உமது அலைபேசி என்னுடன் ....
creasen@yahoo.com
Post a Comment