அண்ணாகண்ணன் கவிதைகள்: September 2006

Sunday, September 10, 2006

செல்லக் கிளியே 'செல்'லை எடு



தரையினில் கால் படாமலே நடக்கிறாய் - வளர்
கனவினில் பல காதங்கள் கடக்கிறாய்.

ஒளிகிற உணர்வைக் கண்டு பிடிக்கிறாய் - விழி
ஒளிதரும் மதுவை மொண்டு குடிக்கிறாய்.

நினைக்கையில் நீயும் அதையே நினைக்கிறாய் - என்
நினைவினை நாலெட்டாக மடிக்கிறாய்.

எனக்கொரு துன்பம் என்றால் துடிக்கிறாய் - உன்
இமைகளும் அறியாது கண்ணீர் வடிக்கிறாய்.

மனத்தினுள் என்னைப் படம் பிடிக்கிறாய் - என்
மவுனத்தை அணுஅணுவாகப் படிக்கிறாய்.

தாமதம் ஆனால் வார்த்தை தடிக்கிறாய் - பெரும்
சண்டமாருதத்தைப் போலே இடிக்கிறாய்.

தொடுகிற தொலைவில்தான் நீ இருக்கிறாய் - செல்லில்
தொடர்புகொள் நிலையில் இல்லை என விடுக்கிறாய்.

அழைக்கிற செல்லைக் கொஞ்சம் எடுக்கிறாயா? - இல்லை
அழையாத தொலைவுக்கு என்னைக் கொடுக்கிறாயா?