அண்ணாகண்ணன் கவிதைகள்: பொய்க்காரி

Saturday, November 11, 2006

பொய்க்காரி



சிறுகுழந்தை போலென்னை அடிப்பாள்; சற்றே
சிடுசிடுத்தால் கண்ணீரில் குளிப்பாள்; வாழ்வில்
விறுவிறுப்பைக் கூட்டுகிற விதமாய் என்னை
விரட்டுகிறாள் தொலைபேசி ஊடே. சற்றும்
பொறுமையில்லை; வசையுண்டு; முரடு! இந்தப்
பூவையிடம் குறைகள்உள; ஆனால் அன்புச்
சிறையினிலே எனைவைத்து விட்டாள்! அஃதை
உடைத்தாலோ உடைந்திடுவாள்! என்ன செய்ய?

அடிக்கடிஏன் அழுகின்றாய் என்றால், நீதான்
அழவைத்தாய் என்கின்றாள்! அழகுப் பெண்ணே
அடிக்கடிஏன் துயில்கின்றாய் என்றால், நீதான்
அசந்தென்னைத் துயிலவைத்தாய் என்றாள்! ஆஹா
பொடிப்பொடியாய்ப் பொய்யுரைப்ப தேனோ என்றால்
பொய்க்காரி நானில்லை நீதான் என்றாள்!
நடிப்பதில்லை என்தோழி. நடந்தவைக்கு
நானேதான் காரணமோ? இருக்கக் கூடும்.

சட்டென்று சினம்கொள்ளும் பாப்பா! காட்டுச்
சருகுகளை மிதிப்பதுபோல் பார்ப்பாள்! நட்பை
வெட்டிவிட்டால் தொல்லையில்லை என்றால், சீறி
வெறிகொண்டு பாய்ந்தொருகை பார்ப்பாள்! ஓஹோ
வெட்டவேண்டாம் ஒட்டிக்கொள் வாடி என்றால்
வேளைவரும் காத்திருடா என்பாள்! பூவாய்
நட்டநடுவில் நிற்கும் பாவை! என்றன்
நடைவழிக்கு அவளென்றும் தேவை தேவை!!

மடிவேண்டும் தோள்வேண்டும் என்றே என்றன்
மனத்திற்குள் கூடாரம் போட்டாள்! என்னுள்
வடிவெடுக்கும் கனவுகளைக் கேட்டுத் தன்னின்
வலதுகரம் சேர்க்கின்றாள்! ஐயம் போக்கிப்
படிப்படியாய்ச் செதுக்குகிறாள்! ஒற்றை ஆளே
படையாகத் தெரிகின்றாள்! உழைக்கச் சோராள்!
அடிப்படையில் நல்லவளே! உண்மை என்றே
அடுத்துவரும் பத்தியினை நம்பிடாதே!

பறக்காத பறவைநீ! பார்க்கும் என்னைப்
பறக்கவைக்கும் பறவைநீ! பச்சை ராணி!
பிறக்காத பாடல்கள் எனக்குச் சொந்தம்
பிறக்கின்ற பாடல்கள் உனக்குச் சொந்தம்
உறங்காத நேரத்தை உனக்களிப்பேன்
உறங்குகிற நேரத்தை எனக்களிப்பாய்!
திறக்காத திரவியம்நீ! ஆனால் என்னைத்
திறக்கின்ற யாழினிநீ! வாழ்க வாணி!

நன்றி: கல்கி தீபாவளி மலர் 2006

5 comments:

ஷைலஜா said...

//பிறக்காத பாடல்கள் எனக்குச் சொந்தம்
பிறக்கின்ற பாடல்கள் உனக்குச் சொந்தம்//

அருமையான வரி!

உறங்காத நேரத்தை உனக்களிப்பேன்
உறங்குகிற நேரத்தை எனக்களிப்பாய்!
திறக்காத திரவியம்நீ! ஆனால் என்னைத்
திறக்கின்ற யாழினிநீ! வாழ்க வாணி!//

கவிதை, கவிஞர் சொல்வதையும் சொல்லாததையும் மெய்யாலுமே யூகிக்க வைக்கிறது!

அழகான கவிநயமான வார்த்தைகள்!
ஷைலஜா

ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.
தமிழ்நதி said...

“பிறக்காத பாடல்கள் எனக்குச் சொந்தம்
பிறக்கின்ற பாடல்கள் உனக்குச் சொந்தம்”

படித்தவுடனே பிடித்த வரிகள். உண்மையில் அப்படியொரு தோழி வாய்த்திருக்காவிட்டால் எழுதுவது சாத்தியமில்லை. கவிதையின் சந்தம் அல்லது ரிதம் மிக நன்றாக இருக்கிறது. நேற்று உங்களைப் பற்றி கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பேசினார். (அறிமுகப்படுத்துவதாக) இன்று உங்கள் கவிதை வாசிக்கக் கிடைத்தது. பிடித்தது.

நதி

மதுமிதா said...

///அஃதை உடைத்தாலோ உடைந்திடுவாள்! என்ன செய்ய
.....
நீதான் அசந்தென்னைத் துயிலவைத்தாய் என்றாள்
.....
நடந்தவைக்கு
நானேதான் காரணமோ? இருக்கக் கூடும்
.....
சீறி வெறிகொண்டு பாய்ந்தொருகை பார்ப்பாள்!
.....
மனத்திற்குள் கூடாரம் போட்டாள்!
.....
ஒற்றை ஆளே படையாகத் தெரிகின்றாள்
.....
பிறக்காத பாடல்கள் எனக்குச் சொந்தம்
பிறக்கின்ற பாடல்கள் உனக்குச் சொந்தம்
உறங்காத நேரத்தை உனக்களிப்பேன்
உறங்குகிற நேரத்தை எனக்களிப்பாய்!
திறக்காத திரவியம்நீ! ஆனால் என்னைத்
திறக்கின்ற யாழினிநீ! வாழ்க வாணி!
.....

நன்றி அண்ணாகண்ணன்
ரசிக்க ஒரு அருமையான பாடல் அளித்தமைக்கு.

இதற்கு மேல் வரிகளைக் குறைக்க இயலவில்லை. இத்தனை வரிகளிலும் எத்தனையோ அற்புத விஷயங்கள் பொதிந்துள்ளன.

மனமார்ந்த வாழ்த்துகள்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

ஷைலஜா, நதி, மதுமிதா - உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. நதி, இந்தச் சந்தம், சிறப்பாக உள்ளது என்றீர்கள்; அந்தப் பெருமை, நம் முன்னோர்களையே சேரும். ஏனெனில் இது எண்சீர் விருத்தம் வகையைச் சேர்ந்தது.