அண்ணாகண்ணன் கவிதைகள்: September 2005

Thursday, September 22, 2005

பார்க்கிறான் பாரதி

காயவைத்த தானியத்தைக்
கொத்தவரும் குருவிகளை நோக்கி
நீளுகிறது ஒரு கழி.

வாழைப்பழத் தோலை
இந்தா என நீட்டி
அருகில் வரும் மாடுகளை
வகையாய் அடிக்கிறது நமது கம்பு.

சாப்பிட முடியாத அளவுக்குக்
கெட்டுப் போன பிறகே
ஞாபகம் வருகின்றன நாய்கள்.

காக்கைக்குச் சோறு வைத்துவிட்டு
வரும் காக்கைகளை
விரட்டுகிறோம்.
கொஞ்சம் பறந்து
மீண்டும் உட்கார வரும் அதனை
மீண்டும் மீண்டும் விரட்டி
விளையாட்டு காட்டுகிறோம் குழந்தைக்கு.

உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
குருவிகளுக்கு அரிசி தூவியபடி
பார்க்கிறான் பாரதி.

ஒவ்வோர் எறும்புப் புற்றிலும்
அடிக்கடி நடக்கிறது
ஜாலியன்வாலாபாக்.

வாலைப் பிடித்து முடிந்தவரை
தூக்கி எறிகிறோம் எலிகளை.
கரப்பான்களைக் கொல்ல ஒரு தெளிப்பான்.

கொசுக்களுக்கும்
ஈக்களுக்கும் வெவ்வேறு தெளிப்பான்கள்.
தன் வீட்டோடு தானும் அழிகிறது
எட்டுக்கால் பூச்சி.

உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
கழுதையைக் கொஞ்சியபடி
பார்க்கிறான் பாரதி.

ஊரிலிருந்து கணவன்
தன் மனைவிக்குக்
காதல் பறவைகளை அனுப்பினான்.
அடுத்த கடிதத்தில் கேட்டான்:
'பறவைகள் எப்படி இருக்கின்றன?'
அதற்கு மனைவி எழுதினாள்:
'பறவைகள் சுவையாய் இருந்தன'.
இது ஒரு கதை.
ஆனால்,
உலகைக் காட்டும் கண்ணாடி.

உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
யானைக்குப் பழம் கொடுத்தபடி
பார்க்கிறான் பாரதி.

நமக்காகக்
காவல் காக்கிறது நாய்.
பால் கொடுக்கின்றன
பசுவும் எருமையும்.
உழுகிறது காளை.
இழுத்துச் செல்கிறது குதிரை.

நமது சுயநலத்துக்காக
இவற்றை உயிரோடு விட்டுள்ளோம்.
எப்போது தேவையோ
அப்போது கொல்வதற்காக
வளர்க்கிறோம்
ஆடுகள், கோழிகள், மீன்கள்...
இன்னும் நிறைய உயிர்கள்.

உலகம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
குயில் பாட்டுப் பாடியபடி
பார்க்கிறான் பாரதி.

(தினமணி கதிர் 31-12-2000
பாரதியார் விழாக் கவியரங்கில் வாசித்த கவிதை)

Saturday, September 03, 2005

டிஸ்கவரி (சிறுவர் பாடல்)

வந்தது வந்தது டிஸ்கவரி
வாகை சூடிய வானூர்தி

சீறி எழுந்தது பார்த்தாயா?
தீப்புகை கக்கிப் புவியீர்ப்பை
மீறி எழுந்தது பார்த்தாயா?
மீண்டு(ம்) வந்தது ஆர்த்தாயா?

ஏழு பேர்கள் பறந்தார்கள்
எண்ணிய பணிகள் முடித்தார்கள்
வாழும் விண்வெளிக் கப்பலிலே
வல்லமை காட்டி வந்தார்கள்.

கலத்தின் முனையில் ஒருபாகம்
கழன்று விழுந்த அப்போதும் - மன
நலத்தில் உயர்ந்த வீரர்கள்
நன்றே புரிந்த சூரர்கள்.

கண்ணுள் நிற்கும் கல்பனா
காற்றில் கரைந்த கொலம்பியா
இன்னும் நினைவில் ஆடுகையில்
இனிக்க வந்தது நற்செய்தி.

ஆகா நாசா, வாழ்த்துகள்!
ஆசை எமக்குள் ஊறுதே!
ஆக்கம் மிகுந்த ஆகாயம் - நாளை
அதுதான் எங்கள் மைதானம்!

(அமுதசுரபி / செப்டம்பர் 2005)