அண்ணாகண்ணன் கவிதைகள்: May 2005

Sunday, May 08, 2005

உன் சேலையால் எனை மூடு!

Image hosted by Photobucket.com
உன் மடியில் படுத்து
நிலவைப் பார்த்தால்
நிலவின் பேரெழில் தெரிகிறது.

உன் தோளில் சாய்ந்து
இசை கேட்டால்
இசையின் அற்புதம் புரிகிறது

உன் கை கோத்து
நடை பயின்றால்
உலகம் சொர்க்கமாய் விரிகிறது

உனது பூவிதழ்
முத்திரையில்
என் வாழ்க்கை வெற்றி அடைகிறது.

என் ஊற்று நீரில்நீ நீராடு.
உன் வியர்வையில் என்னைக் குளிக்கவிடு.
என் ஒளிச்சுடர் எல்லாம் உனக்குத்தான்
உன் இருட்டை மட்டும் கொடுத்துவிடு.

நானே உனக்கு உடையாவேன்.
உன் மெல்லிய சேலையால் எனை மூடு.
உறக்கம் வராத பித்தன் நான்.
உன் உயிருள் கலந்தால் சித்தன் நான்.

Wednesday, May 04, 2005

மாவட்டம்

(சிறுவர் பாடல்)

மாவட்டமாம் மாவட்டம்
வளரும் தமிழ் மாவட்டம்

சென்னை மதுரை விழுப்புரம்
தேனி இராம நாதபுரம்
கன்யா குமரி பெரம்பலூர்
காஞ்சி நாகை திருவள்ளூர்
(மாவட்டமாம்
நீல கிரி கிருஷ்ணகிரி
நெல்லை கரூர் தருமபுரி
சேலம் தஞ்சை திண்டுக்கல்
திருவண்ணாமலை நாமக்கல்
(மாவட்டமாம்

திருச்சி கோவை திருவாரூர்
தூத்துக் குடி ஈரோடு
விருது நகர் சிவகங்கை
வேலூர் கடலூர் புதுக்கோட்டை
(மாவட்டமாம்

ஊரும் பேரும் அறிகுவோம்
உலவும் பாதை தெரிகுவோம்
யாரும் போற்றும் தென்னகம்
இனிக்கும் இன்பத் தமிழகம்!
(மாவட்டமாம்
நீரும் நிலமும் மாறலாம்
நிறமும் குணமும் மாறலாம்
பேரு பெற்ற மக்களின்
பெருமை என்றும் பெருமையே!
(மாவட்டமாம்

Tuesday, May 03, 2005

சாலை

இதுதான் சாலை கண்மணியே! - நீ
எங்கே செல்ல விரும்புகிறாய்?
இதன்மேல் எத்தனை வாகனங்கள்! - நீ
எதிலே செல்ல விரும்புகிறாய்?
முதலில் செல்வது முக்கியமா?- நீ
முழுதாய்ச் செல்வது முக்கியமா?
மதித்து நேர்வழி நடப்பாயா? - குறுக்கு
வழியைத் தேர்ந்து எடுப்பாயா?

கரடு முரடாய் இருக்கலாம்- கூர்
கல்லும் முள்ளும் குத்தலாம்.
நெரிசல் மிகவும் இருக்கலாம்-கொடு
நீசர் உடைமை பறிக்கலாம்.
இருளில் எதுவும் நடக்கலாம்!- நீ
எதற்கும் தயாரா? நடக்கலாம்.
வருக வருக கண்மணியே - உனை
வாழ்த்தித் தோரணம் கட்டுகிறேன்.

எல்லாம் உனது காலடியில்
யாவும் உனது கைக்குள்ளே
எல்லை இல்லாப் பெரும்பயணம்
ஏகம் அநேகம் அனுபவங்கள்
வல்லமை உண்டேல் வழியுண்டு
வாழ்வும் சாலையும் ஒன்றாகும்
செல்வமே சீரே கண்மணியே! - உன்
சிறிய பாதம் எடுத்து வை.

Monday, May 02, 2005

எட்டு

- சிறுவர் பாடல்

எட்டை எட்டால் பெருக்கினால்
எதிரே வந்திடும் ஆயகலை
எட்டை எட்டால் பெருக்கியே
ஒன்றைக் கழித்தால் நாயன்மார்.
எட்டை எட்டால் பெருக்கியே
நான்கைக் கழித்தால் தமிழண்டு.
எட்டை எட்டுடன் கூட்டினால்
வாழ்த்துடன் தோன்றும் பேறுகளே!

எட்டை நாலால் பெருக்கினால்
இளநகை புரியும் வெண்பற்கள்.
எட்டை நாலால் பெருக்கியே
ஒன்றைக் கூட்ட, ஒதுக்கீடு.
எட்டை நாலுடன் கூட்டினால்
இனிதாய்க் காண்போம் மாதங்கள்.
எட்டில் மூன்றைக் கழித்துவிட்டால்
எதிரே பஞ்ச பூதங்கள்.

எட்டில் இரண்டைக் கழித்துவிடில்
இருந்து காண்போம் அருஞ்சுவைகள்.
எட்டில் ஒன்றைக் கழித்தாலோ
இனிக்கும் பெண்களின் வண்ணவகை
எட்டை எட்டாய் நிறுத்திவிடில்
இசைந்து காண்போம் திசையெல்லாம்.
எட்டா திருக்கும் யாவினையும்
ஒற்றை எட்டில் எட்டிடுவோம்.

Sunday, May 01, 2005

பொட்டலம் கட்டலாம்!

(சிறுவர் பாடல்)

மூக்கை நறுக்கி மிளகிடுவேன்!
முதுகுத் தோலை உரித்திடுவேன்!
காக்காய்க்கு எறிவேன் உன்காதை!
கரண்டிக் காம்பு பழுத்துவிடும்!
வீக்கம் பிறக்கும்! விரலொடியும்!
விசிறிக் காம்பு முறிந்துவிடும்!
ஜாக்கிரதை எனும் பெரியவரே!
அறிந்தேன் தங்கள் அன்புடைமை!

முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்!
மூங்கில் பிரம்பால் இசையமைப்பேன்!
குட்டினால் பள்ளம் தோன்றிவிடும்!
குருதிஎன் கிள்ளலில் ஊற்றுவிடும்!
கட்டி வைப்பேன் தலைகீழாய்! - எனக்
கருணை பொழியும் பெரியவரே!
கட்டி மேய்ப்பது உம்கடமை!
கண்ணீர் எனது பிறப்புரிமை!

அடித்து வளர்ப்பது முறையென்றும்
அரும்பயன் தருவது 'அறை'யென்றும்
ஒடித்துத் தந்தீர் ஒருகிளையை
ஓங்கி வளருது போதிமரம்!
படிக்கும் இந்தப் பாடத்தில்
புத்தர் ஏசு காந்தியெனக்
கிடக்குது வெற்றுக் காகிதமே
கிழித்துக் கட்டலாம் பொட்டலமே!