ஏது குப்பை?
(சிறுவர் பாடல்)
கொட்டாங் குச்சியில் பாட்டுவரும்
களிமண் போதும் பிரம்மன் நீ!
ஓட்டைகள் நூறு இருக்கட்டுமே!
உள்ளே சல்லடை உற்றுப்பார்!!
சட்டை கிழிந்தால் கைக்குட்டை
சேலை கிழிந்தால் பாவாடை
ஒட்டுப் போடத் தொடங்கிவிட்டால்
ஒன்பது கோள்களுக்கு உடையுண்டு!
முட்டை ஓட்டிலும் ஓவியமே
முள்ளிலும் வேலி வாய்த்திடுமே - மாங்
கொட்டையில் அழகைக் கண்டுபிடி
குப்பையும் செல்வம் ஆகுமடி!
பாலி தீனிலும் பயனுண்டு
பழைய சோற்றிலே சத்துண்டு
காலி டப்பாவிலும் காற்றுண்டு
கழிவு களுக்கும் மாற்றுண்டு
சருகு மக்கினால் உரமாகும்
சிரைத்த மயிரும் பயனாகும்
கருப்பு என்பது அழுக்கன்று
காகித மறுபுறம் குறிப்பேடு!
எதுவும் இங்கே வீணில்லை
எதற்கும் இங்கே அழிவில்லை
மதிப்புடன் பார்த்து மையம்கொள்
மண்ணும் பொன்னாய் மாறிவிடும்!
1 comment:
Pramadham, annakkannan sir.!!
மதிப்புடன் பார்த்து மையம்கொள்
மண்ணும் பொன்னாய் மாறிவிடும்!
Very very meaningful.!!
Post a Comment