அண்ணாகண்ணன் கவிதைகள்: December 2009

Friday, December 11, 2009

ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை

கரும்பலகையைத் துடைத்தபின் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
மாணவர்கள் கூறினர்: 'ஒன்றுமில்லை'.

கவிழ்த்த புட்டியைக் காட்டிக் கேட்டேன்.
'இதில் என்ன இருக்கிறது?'
பார்த்தோர் அனைவரும் பட்டெனக் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

வெள்ளைத் தாளைச் சுட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
கல்வியில் சிறந்தோர் எல்லோரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

அமரா இருக்கையைக் காட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
சற்றுமுன் அதில் அமர்ந்தவர் உள்பட
அனைவரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

**************************

எழுதிய பலகையில்
சில எழுத்துகளே உண்டு.
எழுதாப் பலகையில்தான்
எல்லாம் உண்டு.

நிறைத்த புட்டியில்
கொஞ்சமே உண்டு
கவிழ்த்த புட்டியில்
காற்றும் உண்டு.

அச்சிட்ட காகிதத்தில்
எழுத்துகள் சிறைப்பட்டுள்ளன.
அவற்றால் இனி எங்கும் தப்பி ஓட இயலாது.
வெள்ளைக் காகிதத்தில்
காத்திருக்கிறது ஒரு சுதந்திர வெளி.

அமரா நாற்காலிகள்
வெற்று இருக்கைகள் அல்ல.
முன்பு அமர்ந்தவர்களின் உடற்சூடு
அதில் இன்னும் இருக்கிறது.
அவர்களின் வியர்வை கலந்த வாசம்
இன்னும் அதில் வீசுகிறது.

உண்மையில்
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.

**************************

நுகரும் இந்த மூச்சிலே
நூறு நூறு சக்திகள்
கண்ணை மூடும் போதிலே
எல்லை இல்லாக் காட்சிகள்!

வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது.

சொற்களுக்கு இடையில்
கவிதை சிரிக்கிறது.

இருளுக்குள் மர்மம் நீடிக்கிறது.

மவுனத்தில் மட்டுமே
முழுமை இருக்கிறது.

ஆம்,
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.

==================================================
(11.12.2009 பாரதியார் பிறந்த நாள் அன்று சென்னை பாரதி நினைவு இல்லத்தில் அமர்ந்து, கவியரங்கில் பங்கேற்குமாறு வானவில் பண்பாட்டு மையம் விடுத்த அழைப்பை ஏற்று, உடனே எழுதியது)