கரும்பலகையைத் துடைத்தபின் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
மாணவர்கள் கூறினர்: 'ஒன்றுமில்லை'.
கவிழ்த்த புட்டியைக் காட்டிக் கேட்டேன்.
'இதில் என்ன இருக்கிறது?'
பார்த்தோர் அனைவரும் பட்டெனக் கூறினர்:
'ஒன்றுமில்லை'.
வெள்ளைத் தாளைச் சுட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
கல்வியில் சிறந்தோர் எல்லோரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.
அமரா இருக்கையைக் காட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
சற்றுமுன் அதில் அமர்ந்தவர் உள்பட
அனைவரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.
**************************
எழுதிய பலகையில்
சில எழுத்துகளே உண்டு.
எழுதாப் பலகையில்தான்
எல்லாம் உண்டு.
நிறைத்த புட்டியில்
கொஞ்சமே உண்டு
கவிழ்த்த புட்டியில்
காற்றும் உண்டு.
அச்சிட்ட காகிதத்தில்
எழுத்துகள் சிறைப்பட்டுள்ளன.
அவற்றால் இனி எங்கும் தப்பி ஓட இயலாது.
வெள்ளைக் காகிதத்தில்
காத்திருக்கிறது ஒரு சுதந்திர வெளி.
அமரா நாற்காலிகள்
வெற்று இருக்கைகள் அல்ல.
முன்பு அமர்ந்தவர்களின் உடற்சூடு
அதில் இன்னும் இருக்கிறது.
அவர்களின் வியர்வை கலந்த வாசம்
இன்னும் அதில் வீசுகிறது.
உண்மையில்
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.
**************************
நுகரும் இந்த மூச்சிலே
நூறு நூறு சக்திகள்
கண்ணை மூடும் போதிலே
எல்லை இல்லாக் காட்சிகள்!
வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது.
சொற்களுக்கு இடையில்
கவிதை சிரிக்கிறது.
இருளுக்குள் மர்மம் நீடிக்கிறது.
மவுனத்தில் மட்டுமே
முழுமை இருக்கிறது.
ஆம்,
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.
==================================================
(11.12.2009 பாரதியார் பிறந்த நாள் அன்று சென்னை பாரதி நினைவு இல்லத்தில் அமர்ந்து, கவியரங்கில் பங்கேற்குமாறு வானவில் பண்பாட்டு மையம் விடுத்த அழைப்பை ஏற்று, உடனே எழுதியது)
"மரணத்தின் கண்களில் மையெழுதுவேன்நான்
வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப்
பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை
மெய்யுண்ணும்; மெய்யினையோ நான்." - அ.க.
Friday, December 11, 2009
Friday, October 16, 2009
தீபங்கள் தோன்றுக!

தீபங்கள் தோன்றுக! திக்குகள் மின்னுக!
ரூபங்கள் ஆனந்தம் கூட்டுக! - லாபங்கள்
எல்லோர் இடத்தும் எழுக! குதூகலம்
இல்லங்கள் தோறும் இனிப்பு.
உங்கள் இருப்பால் உலகம் தழைக்கிறது
உங்கள் சிரிப்பால் ஒளிர்கிறது - உங்களை
வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்; நல்லவை
சூழ்க! சுடர்க! சுபம்!
===========================
படம் எடுத்து, வாழ்த்து அமைத்தவர்: கார்கில் ஜெய்
இடம்: சிகாகோ ஏரி
நாள்: 10.10.2009
Thursday, July 16, 2009
ஷைலஜாவின் குரலில் என் சிறுவர் பாடல்
மகராசர் காமராசர் என்ற என் சிறுவர் பாடலை, அமெரிக்காவில் இருந்தவாறே கவிதாயினி ஷைலஜா தன் இனிய குரலில் பாடியுள்ளார்.
Labels:
இசைப் பாடல்,
ஒலிக் கோப்பு,
சிறுவர் பாடல்
Wednesday, April 08, 2009
இவர்கள் மக்கள் தலைவர்கள்!
'எவ்வளவு செலவு செய்வீர்கள்?'
எம்.பி. தேர்தல் நேர்காணல்!
நன்கொடை தந்தால் கவனிப்பு!
நல்கா விட்டாலும் 'கவனிப்பு!'
எத்தனை தொகுதி? எத்தொகுதி?
எந்தச் சாதி? என்ன நிதி?
இரகசிய பேரம் எதற்காக?
வெளிப்படைப் பேரம் வந்தாச்சு!
நிரந்தர நண்பர் இங்கில்லை
நிரந்தர எதிரியும் கிடையாது
சேரவும் விலகவும் காரணங்கள்
சிரிக்க வைக்கும் நாடகங்கள்!
புதிதாய் ஒருவர் சேருகையில்
இவரால் நமக்கு வலுவென்பார்!
அவரே விலகிச் செல்லுகையில்
பாதிப்பு ஏதும் இல்லையென்பார்!
பச்சைத் துரோகம் என்றவரே
சிவப்புக் கம்பளம் விரித்திடுவார்!
வாழ்த்தும் வாயே வசைபாடும்
வைத வாயே வாழ்த்துரைக்கும்!
நேற்றைய பேச்சு நேற்றோடு
இன்றைய பேச்சும் இன்றோடு!
இவர்கள் மக்கள் தலைவர்கள்
ஐயோ பாவம் தொண்டர்கள்!
கொள்கை எல்லாம் எதற்காக?
இராஜ தந்திரம் தெரியாதா?
கூட்டணி என்பது பொருந்தாது
இதுவொரு தொகுதி உடன்பாடே!
எதுவும் பேசலாம்! மறுத்திடலாம்!
எந்த எல்லைக்கும் சென்றிடலாம்!
மறதி நிறைந்த சமுதாயம்
போடா போடா வெங்காயம்!
=============================================
நன்றி: சென்னை டைஜஸ்ட், மார்ச்சு 27 - ஏப்ரல் 02 2009
எம்.பி. தேர்தல் நேர்காணல்!
நன்கொடை தந்தால் கவனிப்பு!
நல்கா விட்டாலும் 'கவனிப்பு!'
எத்தனை தொகுதி? எத்தொகுதி?
எந்தச் சாதி? என்ன நிதி?
இரகசிய பேரம் எதற்காக?
வெளிப்படைப் பேரம் வந்தாச்சு!
நிரந்தர நண்பர் இங்கில்லை
நிரந்தர எதிரியும் கிடையாது
சேரவும் விலகவும் காரணங்கள்
சிரிக்க வைக்கும் நாடகங்கள்!
புதிதாய் ஒருவர் சேருகையில்
இவரால் நமக்கு வலுவென்பார்!
அவரே விலகிச் செல்லுகையில்
பாதிப்பு ஏதும் இல்லையென்பார்!
பச்சைத் துரோகம் என்றவரே
சிவப்புக் கம்பளம் விரித்திடுவார்!
வாழ்த்தும் வாயே வசைபாடும்
வைத வாயே வாழ்த்துரைக்கும்!
நேற்றைய பேச்சு நேற்றோடு
இன்றைய பேச்சும் இன்றோடு!
இவர்கள் மக்கள் தலைவர்கள்
ஐயோ பாவம் தொண்டர்கள்!
கொள்கை எல்லாம் எதற்காக?
இராஜ தந்திரம் தெரியாதா?
கூட்டணி என்பது பொருந்தாது
இதுவொரு தொகுதி உடன்பாடே!
எதுவும் பேசலாம்! மறுத்திடலாம்!
எந்த எல்லைக்கும் சென்றிடலாம்!
மறதி நிறைந்த சமுதாயம்
போடா போடா வெங்காயம்!
=============================================
நன்றி: சென்னை டைஜஸ்ட், மார்ச்சு 27 - ஏப்ரல் 02 2009
Wednesday, February 25, 2009
தூக்கக் கணக்கு (சிறுவர் பாடல்)
இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன்
இழுத்துப் போர்வை போர்த்துகிறேன்
அன்பே அழகே ஆருயிரே
அதற்குள் என்னை எழுப்பாதே!
உளறி அலறுது கடிகாரம் - அதன்
உச்சந் தலையில் குட்டுவை
வெளிச்ச வெள்ளம் பாய்கிறது - அதை
வெளியே தள்ளிக் கதவைஅடை!
வேலை ஒருபுறம் இருக்கட்டும் - பிறகு
வேக வேகமாய் முடித்திடுவேன்
வேலை முடியா விட்டாலும்
வேண்டிய காரணம் சொல்லிடுவேன்.
இப்போ தைக்கு என்னைவிடு
இன்னும் கொஞ்சம் தூங்கவிடு
சொப்பனம் கெடுக்க வாராதே - என்
சொத்தை உனக்கே எழுதுகிறேன்!
இப்படிச் சொன்னவர் இன்றில்லை
இருட்டில் கரைந்து போய்விட்டார்!
அப்புறம் என்று சொன்னவரை
அப்புறம் எங்குமே காணவில்லை!
அளவு கடந்தால் போதையிது
ஆளை விழுங்கும் பெருந்தீது
களவுத் தூக்கம் வேண்டாமே
கணக்காய்த் தூங்கக் கற்போமே!
உதய நாழிகை உற்சாகம்
உள்ளம் மலரும் உயிர்வளரும்
முதிய கதிரை முந்தியெழு
மொத்த மாகக் கொண்டாடு!
இழுத்துப் போர்வை போர்த்துகிறேன்
அன்பே அழகே ஆருயிரே
அதற்குள் என்னை எழுப்பாதே!
உளறி அலறுது கடிகாரம் - அதன்
உச்சந் தலையில் குட்டுவை
வெளிச்ச வெள்ளம் பாய்கிறது - அதை
வெளியே தள்ளிக் கதவைஅடை!
வேலை ஒருபுறம் இருக்கட்டும் - பிறகு
வேக வேகமாய் முடித்திடுவேன்
வேலை முடியா விட்டாலும்
வேண்டிய காரணம் சொல்லிடுவேன்.
இப்போ தைக்கு என்னைவிடு
இன்னும் கொஞ்சம் தூங்கவிடு
சொப்பனம் கெடுக்க வாராதே - என்
சொத்தை உனக்கே எழுதுகிறேன்!
இப்படிச் சொன்னவர் இன்றில்லை
இருட்டில் கரைந்து போய்விட்டார்!
அப்புறம் என்று சொன்னவரை
அப்புறம் எங்குமே காணவில்லை!
அளவு கடந்தால் போதையிது
ஆளை விழுங்கும் பெருந்தீது
களவுத் தூக்கம் வேண்டாமே
கணக்காய்த் தூங்கக் கற்போமே!
உதய நாழிகை உற்சாகம்
உள்ளம் மலரும் உயிர்வளரும்
முதிய கதிரை முந்தியெழு
மொத்த மாகக் கொண்டாடு!
Subscribe to:
Posts (Atom)