
மொழியில் வைத்தாய் தொடர் வெடிகுண்டு
சொற்கள் சிதறிக் கிடக்கின்றன
வழியில் எங்கும் மவுனக் குருதி!
அவசர ஊர்தியில் அர்த்தங்கள்!
சஞ்சல சலங்கை நெஞ்சினில் அதிர
சந்திர ஒளியில் நிற்கின்றேன்.
அஞ்சன விழிகள்! கொஞ்சிடும் மழலை!
கனவுக் கலையைக் கற்கின்றேன்.
உன்னைத் தவிர உலகம் இல்லை
என்றாய் நன்றாய் சென்றாயே!
வலியைத் தின்றேன் கவிதை மென்றேன்
இரவைக் கொன்றாய் கொன்றாயே.
சாட்டை எடுங்கள்! என்மீது இழுங்கள்!
என்னை அடித்துக் கிடத்துங்கள்!
ஆசைப் பட்ட குற்றத்திற்காய்
அனலில் தள்ளிப் புரட்டுங்கள்!
சிந்திப்பதற்கு நேரம் தராதீர்
வேலைச் சுமையைக் கூட்டுங்கள்.
இந்த வாழ்க்கை கசக்க வேண்டும்;
முகத்தில் காறித் துப்புங்கள்.
இருளில், பசியில், இழிவில், நோயில்
என்னைப் பிடித்துத் தள்ளுங்கள்.
ஐயோ இந்தத் தண்டனை எல்லாம்
போதாது! ஏதும் செய்யுங்கள்!
மறதி வேண்டும்; இல்லாவிட்டால்
மரணம் வேண்டும் இக்கணமே.
புத்தன் வாழ்க! துன்பத்திற்கு
ஆசை காரணம் என்றானே!
நினைவுப் புழுதி பறக்கிற வேளை
கண்கள் மூடி நடக்கிறேன்.
பனைமரம் போலே பொட்டல் வெளியில்
பாடிக் கொண்டே இருக்கிறேன்.
நன்றி: வடக்கு வாசல் இலக்கிய மலர் (செப்.2008)
படம்: அண்ணாகண்ணன்
எடுத்த இடம்: ஆலம்பரை கோட்டை