அண்ணாகண்ணன் கவிதைகள்: November 2006

Thursday, November 23, 2006

அந்தி மழை - கவிதைத் திருவிழாவில் நான்

அந்தி மழை இணைய தளத்தின் கவிதைத் திருவிழா பகுதியில் இந்த வாரம் என் இசைப் பாடல்கள் சில வெளியாகியுள்ளன.

சுட்டி இங்கே >>>

Saturday, November 11, 2006

பொய்க்காரி



சிறுகுழந்தை போலென்னை அடிப்பாள்; சற்றே
சிடுசிடுத்தால் கண்ணீரில் குளிப்பாள்; வாழ்வில்
விறுவிறுப்பைக் கூட்டுகிற விதமாய் என்னை
விரட்டுகிறாள் தொலைபேசி ஊடே. சற்றும்
பொறுமையில்லை; வசையுண்டு; முரடு! இந்தப்
பூவையிடம் குறைகள்உள; ஆனால் அன்புச்
சிறையினிலே எனைவைத்து விட்டாள்! அஃதை
உடைத்தாலோ உடைந்திடுவாள்! என்ன செய்ய?

அடிக்கடிஏன் அழுகின்றாய் என்றால், நீதான்
அழவைத்தாய் என்கின்றாள்! அழகுப் பெண்ணே
அடிக்கடிஏன் துயில்கின்றாய் என்றால், நீதான்
அசந்தென்னைத் துயிலவைத்தாய் என்றாள்! ஆஹா
பொடிப்பொடியாய்ப் பொய்யுரைப்ப தேனோ என்றால்
பொய்க்காரி நானில்லை நீதான் என்றாள்!
நடிப்பதில்லை என்தோழி. நடந்தவைக்கு
நானேதான் காரணமோ? இருக்கக் கூடும்.

சட்டென்று சினம்கொள்ளும் பாப்பா! காட்டுச்
சருகுகளை மிதிப்பதுபோல் பார்ப்பாள்! நட்பை
வெட்டிவிட்டால் தொல்லையில்லை என்றால், சீறி
வெறிகொண்டு பாய்ந்தொருகை பார்ப்பாள்! ஓஹோ
வெட்டவேண்டாம் ஒட்டிக்கொள் வாடி என்றால்
வேளைவரும் காத்திருடா என்பாள்! பூவாய்
நட்டநடுவில் நிற்கும் பாவை! என்றன்
நடைவழிக்கு அவளென்றும் தேவை தேவை!!

மடிவேண்டும் தோள்வேண்டும் என்றே என்றன்
மனத்திற்குள் கூடாரம் போட்டாள்! என்னுள்
வடிவெடுக்கும் கனவுகளைக் கேட்டுத் தன்னின்
வலதுகரம் சேர்க்கின்றாள்! ஐயம் போக்கிப்
படிப்படியாய்ச் செதுக்குகிறாள்! ஒற்றை ஆளே
படையாகத் தெரிகின்றாள்! உழைக்கச் சோராள்!
அடிப்படையில் நல்லவளே! உண்மை என்றே
அடுத்துவரும் பத்தியினை நம்பிடாதே!

பறக்காத பறவைநீ! பார்க்கும் என்னைப்
பறக்கவைக்கும் பறவைநீ! பச்சை ராணி!
பிறக்காத பாடல்கள் எனக்குச் சொந்தம்
பிறக்கின்ற பாடல்கள் உனக்குச் சொந்தம்
உறங்காத நேரத்தை உனக்களிப்பேன்
உறங்குகிற நேரத்தை எனக்களிப்பாய்!
திறக்காத திரவியம்நீ! ஆனால் என்னைத்
திறக்கின்ற யாழினிநீ! வாழ்க வாணி!

நன்றி: கல்கி தீபாவளி மலர் 2006