அண்ணாகண்ணன் கவிதைகள்: August 2006

Sunday, August 27, 2006

பாரம்



உன்னிடம் பேசினேன்
பாரம் இறங்கியது.

நீ பேசினாய்
பாரம் கூடியது.

இடையில் பேசாதிருந்தோம்.
பாரம், அபாரமாகிவிட்டது.

Sunday, August 06, 2006

சக்கைப் போடு

கட்டம் போட்ட சட்டை போட்ட குட்டிப் பையனே
சட்டம் போட்டும் மட்டம் போடும் சுட்டிப் பையனே
இட்டம் போலக் கொட்டம் போட நட்டம் கூடுமே
திட்டம் போடு சக்கைப் போடு சக்கைப் போடுதான்!

கலக்கு கின்ற காளை உன்றன் காலை முன்னெடு
விலக்கு கின்ற சங்கடத்தை இன்று வென்றெடு
துலக்கு கின்ற வைகறைக்கு முன்பெழுந்திடு
இலக்கு நன்று தூள்கிளப்பு தூள்கிளப்படா!

மண்டு கின்ற கும்மிருட்டு மாறப் போகுதே - பலர்
வண்ட வாளம் தண்ட வாளம் ஏறப் போகுதே!
கண்டு கேட்டு நாலும் கற்கத் திசைதிறக்குமே
உண்டு காலம் நல்ல காலம் நல்ல காலமே!

சாதனைக்கு விலைகொடுக்கச் சக்தி வேண்டுமே
சோதனைக்குத் தீர்வுகாணப் புத்தி வேண்டுமே
வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமே
போதினிக்க வெற்றிவேண்டும் வெற்றிவேண்டுமே!