
அவை தலையசைக்கின்றன
ஆரோ சொல்வதை ஆமோதிப்பதைப் போல்.
இடையிடையே மெளனிக்கின்றன
ஞானியைப் போல்.
அவை நடனம் ஆடுகின்றன
திரைப்படங்களில்
வரிசையாக நின்றாடும் துணை நடிகைகளைப் போல்.
அவை விழிக்கின்றன
பரணில் ஏறிவிட்டு இறங்கத் தெரியாத குழந்தையைப் போல்.
அவை ஊஞ்சல் ஆடுகின்றன
கட்டப்பட்ட மாட்டினைப் போல் கட்டுப்பாட்டுடன்.
எந்தக் குற்றமும் செய்யவில்லை
ஆயினும் அவற்றைத் தூக்கில் தொங்கவிட்டுவிட்டார்கள்.
ஆளற்ற தனிமையைவிட
நெரிசலையே அவை விரும்புகின்றன.
அப்போதுதான் அவற்றைக் கைப்பிடிக்கப் பலர் முன்வருவர்.
கைப்பிடியைப் பற்றி நிற்கிறாள் காதலி.
காதலனும் அதே கைப்பிடியைப் பற்றுகிறான்.
அங்கே விரல்கள் உரசும் சரசம்.
மெல்ல இரு கைகளும் இணைகின்றன.
இதை யாரும் பார்க்கவில்லை என்பது அவர்களின் எண்ணம்.
எனக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நடவாதென
ஆடிக்கொண்டே ஆட்டுவிக்கிறது
அந்தர சுந்தரம்.
நன்றி: தமிழ் சிஃபி தீபாவளி மலர்