
காய்ச்சலா என்று கேட்டு
நெற்றியில் கையை வைத்தாய்.
இல்லாத காய்ச்சல் சூடு
ஜிவ்வென ஏறக் கண்டேன்.
வேர்க்குதா என்று கேட்டு
மேலாக்கால் துடைத்து விட்டாய்.
இல்லாத வேர்வை பொங்கி
என்மேனி மூழ்கக் கண்டேன்.
தூசியா என்று கேட்டு
இதழ்குவித்து ஊதி விட்டாய்.
உலகமே தூசியாச்சு
உன்னிதழ் உலக மாச்சு.
கோணலா வகிடு என்று
சீப்பினால் சிலை வடித்தாய்.
மேகமாய் மிதந்து சென்று
காற்றுக்குத் தலை கொடுத்தேன்.
பசிக்குதா என்று கேட்டு
ஒற்றைவாய் ஊட்டிவிட்டாய்.
உறுபசி தன்னைத் தின்று
உயிர்ப்பசி ஊறக் கண்டேன்.
தூங்கென்று சொல்லிவிட்டுத்
தூரத்தில் புள்ளி யானாய்.
கனவென்னும் கட்டெறும்பு - என்
காலத்தைக் கடிக்குதேடி.
(13.3.06 காலை 10 மணிக்கு எழுதியது)