அண்ணாகண்ணன் கவிதைகள்: March 2005

Tuesday, March 08, 2005

உப்பு நீரும் உதட்டு நீரும்

உன் மூச்சுக்காற்றின் வெப்பத்தில்
என் ஆசை அணையின் நீர்ப்பரப்பு
ஆவியாகிறது.

உப்புநீர் குடித்தவனின் தாகம் எனக்கு
உன்
உதட்டுநீர் கொடுப்பாயா?

உன் மலர்வனத்தின் மடியில் இளைப்பாறி
உன் கனிமரத்தின் கிளையில் பசியாறி
உன் நறுமணத்தில் உள்ளம் களியேறி
நிற்கிறேன் கண்ணே பித்தம் தலைக்கேறி.

காட்டாறு போலநான் பாய்ந்திருந்தேன் - என்னைக்
கைக்குழாய் போலநீ கட்டிவிட்டாய்.
காற்றாக எங்கெங்கும் தவழ்ந்திருந்தேன் - என்னைக்
காற்றாடி ஆக்கி நீ இயக்குகின்றாய்.

உலகத்தை ஒருகை பார்க்கவந்தேன் - உன்
உள்ளங்கைக்குள்ளேயே சிக்கிவிட்டேன்.
திலகமே இருகைகள் அணைப்பதற்கே - அர்த்தம்
தெரிந்துகொள் அடிக்கடிநான் கணைப்பதற்கே.