அண்ணாகண்ணன் கவிதைகள்: சமூகம்
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, March 08, 2011

வீரப் பெண்கள்


செய்யெனில் கேட்பாள், செய்யாயின் என்ன?
செய்யாதே என்று செப்பினாள் கேட்பாள்:
செய்தால் என்ன? எதிர்ப்பதக் கேள்வி
எழுப்பித் தெளிந்தபின் எதையும் செய்யும்
பெருத்த முழக்கவர் பேதைப் பெண்களாம்.

தீவிரப் பிழம்பைத் தெறிப்புற ஏந்தி
எத்தகை துக்கம் எழும்பிடும் போதும்
எற்றி உதைத்தே எதிர்நடை போடும்
பிரகடனத்தவர் பெதும்பைப் பெண்களாம்.

திட்டம் தீட்டித் திறம்படச் செயல்படும்
மதிநுட்பத்தை மகுடமாய்ச் சூடி
வெட்டொன்றாயின் துண்டிரண் டாக்கும்
மறம் மலிந்தவர் மங்கையர் ஆவராம்.

வாழ்க்கை என்கிற சதுரங் கத்தில்
காய்களை நகர்த்திக் கணக்கை முடிக்க
வாய்பேசாது செயலினில் பேசும்
வாலிபச் சித்தர் மடந்தையர் ஆவராம்.

மூடக் குழியில் முடங்கிய பேரைக்
கூட இழுத்துக் கொலுவுறச் செய்து,
தேடலின் பாடலைத் தினம்தினம் பாடும்
ஆடக விழியர் அரிவையர் ஆவராம்.

முலாம் பூசிவரும் முகங்களின் முன்னே
ஒப்பனை தரிக்கும் உயிர்களின் முன்னே
உண்மைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்
ஜீவ தேவியர் தெரிவையர் ஆவராம்.

அர்த்த நர்த்தனம் ஆடி, மனமெனும்
கர்ப்பக் கிரகத்தில் கவிதைகள் பாடி
நடுநிலை வகிக்கும் நாகரிகத்துடன்
அனுபவச் சிறகை அடித்துப் பறக்கும்
பிரபஞ்ச மெளனியர் பேரிளம் பெண்களாம்.

செயற்கை நெடியின் இறுக்கம் பொறாமல்
நியம  எஃகை நெஞ்ச நெருப்பால்
வசதியாய் வளைத்து வழி சமைப்பதிலே
தேரிய பேர்கள் தீரப் பெண்களாம்.

எதனை இயலாது என்று இயம்பினரோ
அதனை முதலில் நிகழ்த்திக் காட்டி,
இயம்பிய வார்த்தைக்கு எடைக்கு எடை சமமாய்ச்
சுயர்ஒளிர் கருத்தைச் சுடச்சுடக் கொடுக்கும்
வலி மிகுந்தவர் வைரியப் பெண்களாம்.

காரணங்களுக்கு விடை கொடுத்துவிட்டுக்
காரியங்களுக்கு மடை திறப்பதனால்
மலர்மறப் பெண்கள் மதியொளிர் மதிப்பில்
இலக்கை அடைவதே இயற்கை ஆதலால்
தோழியர் நெஞ்சத் தூய்மையின் நாமம்
வாழிய வென்று வாழ்த்துவம் நாமே.

(அண்ணாகண்ணனின் ‘உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து – முதல் பதிப்பு: 1997 நவம்பர்)

======================================
வீரப் பெண்கள் - http://www.vallamai.com/?p=2163

Sunday, January 30, 2011

புது சாத்திரம் படைப்போம்


வடிவற்புத விடிகாலையில் தொடங்கிட்டது பயணம்
அடிஉந்தியில் பசிஉந்திட இடர்ஆயிரம் தொடரும்
குடல்வற்றிடக் கடல்வீதியில் நடையாறிடும் பரவர்
முடப்புன்னகை புரியாதொரு முழுநாள்அவர் கனவு.

கடலோடிடும் படகுக்கதன் துடுப்பென்பது சகடம்
உடனாடிடும் உடலங்களில் உழைப்பென்றொரு மகுடம்
நடுமத்தியில் அலைமேடையில் கயலாடிய நடனம்
படுமோர்கணம் வலைஞர்மனம் அடடாவென மகிழும்.

விடம்வென்றிடும் திடம்உண்டெனும் சுடரோடொளிர் வதனம்
நடுசூரிய நடவால்எழில் வியர்வைப்பயிர் விளையும்
படும்பாட்டினில் கிடைக்கின்றது இவருக்கொரு கவளம்
தொடுமுன்னது மறைகின்றது இதுஎன்னடி துயரம்?

துயரங்களின் உயரங்களில் உயிர்வாழ்வதை விடவும்
சயனம்தனில் மடிதல்நலம் ஜெயமாகணும் மரணம்
தயவாய்அழும் சுயசோகமும் பொதுவாகுதல் முறையோ?
புயமோங்கியும் வறுமைஎனும் பயமோங்குதல் சரியோ?

அடிஒன்றிலும் இடிபாய்வது இனிநம்முடை நியதி
படியாதுள விடியல்களை வரவைத்திடும் உறுதி
குடியாட்சியில் முடியாட்சியைக் குடிவைப்பதும் இனிமேல்
நடவாதெனும் முடிவானதும் அகலும்நம தவலம்.

மெலியோர்தமை மிதிப்போர்தமை மனதால்நிதம் ஒழிப்போம்
கொடுவஞ்சக, படுபாதகச் சதைகூறிட உழுவோம்.
கெடுவோர்இலை கெடுப்போர்இலை எனும்நாளினில் புடைப்போம்
அதிமானுடக் கதியோங்கிடப் புதுசாத்திரம் படைப்போம்.

================================================
  • எனது 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து - முதல் பதிப்பு: 1997 நவம்பர்
  •  இணையத்தில் முதல் பதிப்பு: http://www.vallamai.com/?p=1861

Thursday, January 13, 2011

புள்ளிக் கவிதைகள் - பகுதி 9

 
நானும் ஒரு பறவை.
என் சிறகுகளை
மற்றவர்கள் அசைக்கிறார்கள்.

*****************************************

எந்தச் சொல்லைச் சொல்வது
என்ற மோதலி்ல்
பிறகு அவர்கள்
பேசிக்கொள்ளவே இல்லை. 
 
*****************************************

தானும் பயந்து
என்னையும் பயமுறுத்துகிறது
இந்த நாய்.

*****************************************

எப்போதும்
காரமாகவே இருக்கிறது
கடிகாரம்.

*****************************************

மயிர்க்கால் வெளியே தெரிந்தாலும்
முறைக்கிற மெளடீகக் கணவன் போல்
விரல் நுனி வெளியே தெரிந்தாலும்
விரட்டிக் கடிக்கிறது கொசு.

*****************************************

உன்னைக் கொல்லும்
எண்ணமே எனக்கில்லை.
என்னை ஏன் நி்ர்பந்திக்கிறாய்,
கொசுவே?

****************************************************************************
நன்றி : இருவாட்சி இலக்கியத் துறைமுகம், பொங்கல் சிறப்பு வெளியீடு 2, திசம்பர் 2010 | http://www.vallamai.com/?p=1685
படத்திற்கு நன்றி: விழியன்
****************************************************************************

Saturday, January 01, 2011

அம்மே அம்மே இது நற்காலமே


அம்மே அம்மே இது நற்காலமே
ஆமே ஆமே இனி உற்சாகமே

மனமே காதலில் பண்படுமே
மானுடம் அன்பினில் மேம்படுமே
திருமிகுமே தீபம் தென்படுமே
திக்குகள் உன்னைக் கும்பிடுமே

எட்டத்தில் இருப்பவை கிட்டத்தில் வரட்டுமே
நட்டத்தில் இருப்பவர் லாபத்தைப் பெறட்டுமே
வட்டத்தில் இருப்பவர் வானத்தில் எழட்டுமே
கட்டத்தைக் கடக்கவே திட்டத்தை தருகவே.

ஒட்டாத நெஞ்சமும் ஒட்டிவர வேண்டுமே
விட்டாடும் யாவுமே தொட்டாட வேண்டுமே.
மொட்டாகப் புன்னகை கட்டாயம் வேண்டுமே
சிட்டாக வானிலே சென்றாட வேண்டுமே.

பட்டமரம் பூக்குமே பாறையும் சுரக்குமே
வெட்டவெளி எங்குமொளி வெள்ளமெனப் பாயுமே
நட்டநடு நெற்றியிலே நட்சத்திரம் தோன்றுமே
விட்டகுறை தொட்டகுறை இட்டுநிறைவாகுமே.

வேட்டைக்குப் போகலாம் வீரத்தைக் காட்டலாம்
மேட்டையும் பள்ளத்தையும் மிதமாய் இணைக்கலாம்
கோட்டைக் கடந்துவந்தால் கோட்டையைப் பிடிக்கலாம்
பாட்டைப் படித்துக்கொண்டே படைகளை நடத்தலாம்.

ஆட்டத்தைத் தொடங்குவோம் ஆழத்தில் இறங்குவோம்
கூட்டத்தைக் கூட்டுவோம் கொட்டத்தை அடக்குவோம்
வாட்டத்தைப் போக்குவோம் வாழ்க்கையை வாழுவோம்
நாட்டுக்குள் நன்மையை நாட்டுவோம் நாட்டுவோம்.

==========================
அம்மே அம்மே இது நற்காலமே - http://www.vallamai.com/?p=1572

Sunday, May 30, 2010

இனிது கோடை



சமிக்ஞை விளக்கில் நொடிகள் நகர
உமிழும் புகைக்குள் அமிழும் நகரம்.
தேசிய வீதியி்ல் வண்டிகள் பறக்க
தூசி மண்டலம் அடங்குவதி்ல்லை.
தலைக்கு மேலே வெய்யி்ல வெள்ளம்
உலைப்பெரு மூச்சில் நிழலும் கருகும்.
ஆயிரம் கண்களில் வியர்வைக் கண்ணீர்
வாயது கேட்கும் சொட்டுத் தண்ணீர்.

குளிரூட்டிகளோ உறுமுகி்ன்றன
வெளியே வெம்மை ஏறுகின்றது.
சாலைகள் சற்றே அகலம் ஆகின
சோலைகள் ஆயிரம் சுவடு அழி்ந்தன.
நிழலி்ல்லாத நெடிய வீதிகள்
சுழலும் காற்றில் சுடுசாபங்கள்.
பறவைகள் தொலைந்த பட்டணத்திலே
உறவுகள் தொடரும் கட்டணத்திலே.

நன்னீர் விலையை வணிகர் சொன்னார்
தண்ணீர் குடிக்க மனம் வரவி்ல்லை.
தேநீர்க் கடையிலோ அழுக்குத் தண்ணீர்.
சிறுநீர் ஏனோ மஞ்சள் நிறத்தில்.
நிலத்தடி நீரோ கீழே விரைய
நிலத்தின் மேலே எரிமலை பொரியும்.
தெருவில் தீமிதி தினம்தினம் நிகழும்
இருந்தும் எமது நெஞ்சுரம் வளரும்.

தகிக்கும் மணலில் சுகிக்கும் காதலர்
புடைவையில் சேயைப் பொத்தும் தாயர்
காகா என்றே அழைக்கும் கனியோர்
செடிக்கும் நீரை வார்க்கும் இனியோர்
கண்ணீர் துடைக்கும் நல்லோர் வல்லோர்
வண்ணச் சிரிப்புடன் வாஞ்சை வளர்ப்போர்
இன்னும் இன்னும் இருப்பதனாலே
இனிது கோடை! கொளுத்துக பகலே!

============================================

(30.05.2010 தேதியிட்ட கல்கி வார இதழில்  இந்தப் படைப்பு வெளியானது. கவிதை கேட்டுப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ் மணவாளன், கல்கி உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா, ஆசிரியர் சீதா ரவி, அழகுற ஓவியம் வரைந்த அனந்த பத்மநாபன் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்)