அண்ணாகண்ணன் கவிதைகள்: இயற்கை
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Saturday, September 04, 2010

சில நேரங்களில் சில உயிரினங்கள்

வாலைத் தூக்கிக்கொண்டு
ஓடி வந்த அணில்,
திறந்த கதவினுள்
எட்டிப் பார்க்கிறது.

பரணில் ஒளிந்திருந்த பூனை
திடுக்கென இறங்கி ஓடியது.
'குட்டி போட்டுவிடப் போகிறது'
அஞ்சினாள் அம்மா.

சமையல் மேடையில்
அடிக்கடி உலவுகின்றன
பல்லிகள்.

குளியலறையிலிருந்து
குதித்துத் தாவுகின்றன
தவளைக் குஞ்சுகள்.

கரப்பான்களுடன்
அவ்வப்போது நிகழ்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம்.

ஒட்டடை தட்டும்போதெல்லாம்
தப்பிவிடுகிறது சிலந்தி.

ஒரு படையெடுப்பு
எப்படி இருக்கும் என
எறும்புகள் கற்பிக்கின்றன.

எறும்புகள் மொய்த்த முறுக்குகளை
வெயிலில் காயவைத்தேன்.
கவ்விச் சென்றது காக்கை.

மின்விசிறியை ஏமாற்றி,
என்னை எங்கே, எப்படி
கடிக்க வேண்டும் எனக்
கொசுக்களுக்குத் தெரியும்.

இவற்றிடமிருந்து தப்பிக்க,
அனைத்து ஜன்னல், கதவுகளை
மூடி வைத்தேன்.
மூச்சு முட்டியது
வியர்வை பெருகியது.

எல்லாக் கதவுகளையும்
திறந்துவிட்டேன்.

முக்கியம்தான்
என் மூச்சு எனக்கும்
அதன் மூச்சு அதற்கும்.

================================
நன்றி - வடக்கு வாசல், செப்.2010

கிரகம் பிடித்து ஆட்டுகிறது




‘உன் கிரகம் சரியி்ல்லை’
என்ற ஜோதிடனைப் பார்த்துக் கேட்டேன்:
‘உனக்கு எப்படிப்பட்ட கிரகம் வேண்டும்?

காற்றும் நீரும் வெளிச்சமும்
எந்த விகிதத்தில் இருக்கலாம்?
அங்கே உயிரினங்களின்
உருவும் நிறமும் குணமும்
எவ்வாறு அமையலாம்?
என்னிடம் சொன்னால்
ஆவன செய்கிறேன்.

வானில் அதை
எங்கே நிலைநிறுத்தட்டும்?
இங்கேயா? அங்கேயா?
அது எப்படிச் சுழல வேண்டும்?
இடப்புறமா? வலப்புறமா?

நம் விருப்பப்படி இரவு பகல்களை
சுருங்கி விரியச் செய்யட்டுமா?
துணைக்கோள் ஏதும் வேண்டுமா?'

'………………………….'
ஓட்டம் எடுத்தான் ஜோதிடன்.
கிரகங்கள் இரகசியமாய்க் கண்சிமிட்டுகின்றன.


===========================
படத்திற்கு நன்றி – http://a1star.com
முதல் பதிப்பு:  http://www.vallamai.com/?p=631

Sunday, May 30, 2010

இனிது கோடை



சமிக்ஞை விளக்கில் நொடிகள் நகர
உமிழும் புகைக்குள் அமிழும் நகரம்.
தேசிய வீதியி்ல் வண்டிகள் பறக்க
தூசி மண்டலம் அடங்குவதி்ல்லை.
தலைக்கு மேலே வெய்யி்ல வெள்ளம்
உலைப்பெரு மூச்சில் நிழலும் கருகும்.
ஆயிரம் கண்களில் வியர்வைக் கண்ணீர்
வாயது கேட்கும் சொட்டுத் தண்ணீர்.

குளிரூட்டிகளோ உறுமுகி்ன்றன
வெளியே வெம்மை ஏறுகின்றது.
சாலைகள் சற்றே அகலம் ஆகின
சோலைகள் ஆயிரம் சுவடு அழி்ந்தன.
நிழலி்ல்லாத நெடிய வீதிகள்
சுழலும் காற்றில் சுடுசாபங்கள்.
பறவைகள் தொலைந்த பட்டணத்திலே
உறவுகள் தொடரும் கட்டணத்திலே.

நன்னீர் விலையை வணிகர் சொன்னார்
தண்ணீர் குடிக்க மனம் வரவி்ல்லை.
தேநீர்க் கடையிலோ அழுக்குத் தண்ணீர்.
சிறுநீர் ஏனோ மஞ்சள் நிறத்தில்.
நிலத்தடி நீரோ கீழே விரைய
நிலத்தின் மேலே எரிமலை பொரியும்.
தெருவில் தீமிதி தினம்தினம் நிகழும்
இருந்தும் எமது நெஞ்சுரம் வளரும்.

தகிக்கும் மணலில் சுகிக்கும் காதலர்
புடைவையில் சேயைப் பொத்தும் தாயர்
காகா என்றே அழைக்கும் கனியோர்
செடிக்கும் நீரை வார்க்கும் இனியோர்
கண்ணீர் துடைக்கும் நல்லோர் வல்லோர்
வண்ணச் சிரிப்புடன் வாஞ்சை வளர்ப்போர்
இன்னும் இன்னும் இருப்பதனாலே
இனிது கோடை! கொளுத்துக பகலே!

============================================

(30.05.2010 தேதியிட்ட கல்கி வார இதழில்  இந்தப் படைப்பு வெளியானது. கவிதை கேட்டுப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ் மணவாளன், கல்கி உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா, ஆசிரியர் சீதா ரவி, அழகுற ஓவியம் வரைந்த அனந்த பத்மநாபன் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்)

Thursday, October 16, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 6



நாவால் இதழைத் துடைக்கிறாய்
நகத்தை மெல்ல கடிக்கிறாய்
பூவாய் இதயம் துடிக்கிறாய்
புன்னகை விருந்து படைக்கிறாய்.

=======================

இருகரம் தூக்கி
சேலையைப் பிடித்து
சிறுமழைக்கு அஞ்சி
குறுநடை பயின்றாய்.
மயில் அங்கே தோற்றது.

=======================

ரேகை இல்லாத உள்ளங்கை
தோகை இல்லாத ஆண்மயில்.
வெண்ணிலா இல்லாத வான்.
நீ இல்லாத நான்.

=======================

வாய் திறவாமல் கொட்டாவி விடவும்
சத்தம் வராமல் தும்மவும்
யாரும் அறியாமல் வாயு பிரிக்கவும்
முயல்கிறார்கள்.
ஐயோ பாவம் நாகரிகம்!

=======================

பருவத்தே பயிர் செய்.
இப்படிக்கு,
பயிர் செய்யாதவன்.

=======================

Sunday, October 12, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 5


மின்னல் கிறுக்கி எழுதிய
முகவரியை ஏந்தியபடி
வழிகேட்டு அலைகிறது மேகம்.

=======================

பறக்கிற பறவை
இறங்கி வரும்.
வந்தே தீரும்.

=======================

விருப்பம் போல்
சுற்றிக்கொண்டிருக்கிறது
ரெயில் பூச்சி.

=======================

சுடும் எனத் தெரிந்தும்
விரல் வைக்கிறேன்
இந்தத் தீயில்.

=======================

நீ
கொஞ்சம் சிரித்தால்
உலகம் பிழைக்கும்.
கொஞ்சி சிரித்தால்
உலகு தழைக்கும்.
இதழ்விரி என் சுந்தரி.

=======================

Saturday, October 04, 2008

ஒரு 'ப' திருப்பம்



வெளியே செல்பவர் யாராயினும்
அவர் கை நீட்டி அழைத்தால்
உடனே தாவும் குழந்தை நான்.

அழைக்காவிட்டாலும்
நானே அவர் தோளில் ஏறி,
தெரு முனை வரையாவது
சென்று திரும்புவேன்.
ஊர் சுற்ற அவ்வளவு ஆசை.
வீட்டிலிருந்து விடுதலை பெறவும்.

என் நிறுத்தம் வந்த பிறகும்
இறங்க மறுத்து
அழுது அடம் பிடிக்கிறேன்.
குண்டுக் கட்டாகத் தூக்கி
இழுத்துச் செல்கிறார்கள்.
பயணிக்கப் பேராவல்.
வீட்டில் இருக்க அல்ல.

கீழே கிடக்கும் காகிதத்தை
எடுத்துக் கொடுக்கச் சொன்னாலும்
நான் விதிக்கும் முதல் நிபந்தனை
என்னை இந்த இடத்திற்கு
அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே.
உலாவப் பிடிக்கும்
உள்ளே இருக்க அல்ல.

குறுகிய, நீண்ட சுற்றுலாக்கள்
திட்டமிட்ட, திட்டமிடாத பயணங்கள்... என
அடிக்கடி காணாமல் போவேன்.
குறைந்தபட்சம்
அண்டை அயல் வீடுகளுக்காவது.
வீட்டுக்கு வெளியே தான்
தொடங்கும் என் உலகம்.

இன்று
ஊர் ஊராகச் சுற்றும் பணி எனக்கு.

இப்போதெல்லாம்
வீடு திரும்ப மனம் ஏங்குகிறது.
அந்த 4 சுவர்களே போதும் எனக்கு.
ஆம்
இப்போது
வீட்டில் இருக்கிறாய் நீ!

Sunday, July 27, 2008

சிறு சிறகில் ஒரு பறவை



ஓடும் ரெயிலின் ஜன்னலோரம் நான்.

ஒரு குருவியின் சிறு சிறகு
காற்றில் மிதந்து வந்து
என் மடியில் இறங்கியது.

சட்டென
என் முகத்திற்கு நேராக உயர்ந்து
ஓர் அவசர நடனம் ஆடிவிட்டு
என் தோளில் தங்கியது.

அடுத்த விநாடி
பறந்துவிட்டது எங்கோ.

உதிர்ந்த சிறகிலும்
உயிர் வாழ்கிறது பறவை.

=====================================

படத்திற்கு நன்றி: Louise Docker from sydney, Australia

Thursday, December 20, 2007

சில பறவைகள்; சில காட்சிகள்

காலையில் ஒரு கிளியைப் பார்த்தேன்.
எங்கோ
அவசரமாகப் பறந்துகொண்டிருந்தது.

** ** **

மின்சாரக் கம்பி மீது
ஊஞ்சலாடுகின்றன
சிட்டுக் குருவிகள் சில.

** ** **

அவ்வப்போது நிமிர்ந்து பார்த்தபடி
தன் குஞ்சுகளுடன்
கூட்டமாக மேய்கிறது கோழி.

** ** **

மரமே இல்லாத என் வீட்டு
மதில் சுவரில்
நெடுநேரமாய் அமர்ந்திருக்கிறது
மரங்கொத்திப் பறவை.

** ** **

ஓடாத கூவத்தில்
படுத்துக் கிடக்கிறது எருமை.
எருமையின் மீது
நின்றுகொண்டிருக்கிறது கொக்கு!

** ** **

வண்ணத்துப் பூச்சி
உட்காரும் நேரத்தைவிடப்
பறக்கும் நேரமே அதிகம்!

========================

நன்றி: தமிழ்சிஃபி