அண்ணாகண்ணன் கவிதைகள்: வாழ்வியல்
Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Saturday, September 04, 2010

சில நேரங்களில் சில உயிரினங்கள்

வாலைத் தூக்கிக்கொண்டு
ஓடி வந்த அணில்,
திறந்த கதவினுள்
எட்டிப் பார்க்கிறது.

பரணில் ஒளிந்திருந்த பூனை
திடுக்கென இறங்கி ஓடியது.
'குட்டி போட்டுவிடப் போகிறது'
அஞ்சினாள் அம்மா.

சமையல் மேடையில்
அடிக்கடி உலவுகின்றன
பல்லிகள்.

குளியலறையிலிருந்து
குதித்துத் தாவுகின்றன
தவளைக் குஞ்சுகள்.

கரப்பான்களுடன்
அவ்வப்போது நிகழ்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம்.

ஒட்டடை தட்டும்போதெல்லாம்
தப்பிவிடுகிறது சிலந்தி.

ஒரு படையெடுப்பு
எப்படி இருக்கும் என
எறும்புகள் கற்பிக்கின்றன.

எறும்புகள் மொய்த்த முறுக்குகளை
வெயிலில் காயவைத்தேன்.
கவ்விச் சென்றது காக்கை.

மின்விசிறியை ஏமாற்றி,
என்னை எங்கே, எப்படி
கடிக்க வேண்டும் எனக்
கொசுக்களுக்குத் தெரியும்.

இவற்றிடமிருந்து தப்பிக்க,
அனைத்து ஜன்னல், கதவுகளை
மூடி வைத்தேன்.
மூச்சு முட்டியது
வியர்வை பெருகியது.

எல்லாக் கதவுகளையும்
திறந்துவிட்டேன்.

முக்கியம்தான்
என் மூச்சு எனக்கும்
அதன் மூச்சு அதற்கும்.

================================
நன்றி - வடக்கு வாசல், செப்.2010

Sunday, May 30, 2010

இனிது கோடை



சமிக்ஞை விளக்கில் நொடிகள் நகர
உமிழும் புகைக்குள் அமிழும் நகரம்.
தேசிய வீதியி்ல் வண்டிகள் பறக்க
தூசி மண்டலம் அடங்குவதி்ல்லை.
தலைக்கு மேலே வெய்யி்ல வெள்ளம்
உலைப்பெரு மூச்சில் நிழலும் கருகும்.
ஆயிரம் கண்களில் வியர்வைக் கண்ணீர்
வாயது கேட்கும் சொட்டுத் தண்ணீர்.

குளிரூட்டிகளோ உறுமுகி்ன்றன
வெளியே வெம்மை ஏறுகின்றது.
சாலைகள் சற்றே அகலம் ஆகின
சோலைகள் ஆயிரம் சுவடு அழி்ந்தன.
நிழலி்ல்லாத நெடிய வீதிகள்
சுழலும் காற்றில் சுடுசாபங்கள்.
பறவைகள் தொலைந்த பட்டணத்திலே
உறவுகள் தொடரும் கட்டணத்திலே.

நன்னீர் விலையை வணிகர் சொன்னார்
தண்ணீர் குடிக்க மனம் வரவி்ல்லை.
தேநீர்க் கடையிலோ அழுக்குத் தண்ணீர்.
சிறுநீர் ஏனோ மஞ்சள் நிறத்தில்.
நிலத்தடி நீரோ கீழே விரைய
நிலத்தின் மேலே எரிமலை பொரியும்.
தெருவில் தீமிதி தினம்தினம் நிகழும்
இருந்தும் எமது நெஞ்சுரம் வளரும்.

தகிக்கும் மணலில் சுகிக்கும் காதலர்
புடைவையில் சேயைப் பொத்தும் தாயர்
காகா என்றே அழைக்கும் கனியோர்
செடிக்கும் நீரை வார்க்கும் இனியோர்
கண்ணீர் துடைக்கும் நல்லோர் வல்லோர்
வண்ணச் சிரிப்புடன் வாஞ்சை வளர்ப்போர்
இன்னும் இன்னும் இருப்பதனாலே
இனிது கோடை! கொளுத்துக பகலே!

============================================

(30.05.2010 தேதியிட்ட கல்கி வார இதழில்  இந்தப் படைப்பு வெளியானது. கவிதை கேட்டுப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ் மணவாளன், கல்கி உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா, ஆசிரியர் சீதா ரவி, அழகுற ஓவியம் வரைந்த அனந்த பத்மநாபன் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்)

Friday, December 11, 2009

ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை

கரும்பலகையைத் துடைத்தபின் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
மாணவர்கள் கூறினர்: 'ஒன்றுமில்லை'.

கவிழ்த்த புட்டியைக் காட்டிக் கேட்டேன்.
'இதில் என்ன இருக்கிறது?'
பார்த்தோர் அனைவரும் பட்டெனக் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

வெள்ளைத் தாளைச் சுட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
கல்வியில் சிறந்தோர் எல்லோரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

அமரா இருக்கையைக் காட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
சற்றுமுன் அதில் அமர்ந்தவர் உள்பட
அனைவரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

**************************

எழுதிய பலகையில்
சில எழுத்துகளே உண்டு.
எழுதாப் பலகையில்தான்
எல்லாம் உண்டு.

நிறைத்த புட்டியில்
கொஞ்சமே உண்டு
கவிழ்த்த புட்டியில்
காற்றும் உண்டு.

அச்சிட்ட காகிதத்தில்
எழுத்துகள் சிறைப்பட்டுள்ளன.
அவற்றால் இனி எங்கும் தப்பி ஓட இயலாது.
வெள்ளைக் காகிதத்தில்
காத்திருக்கிறது ஒரு சுதந்திர வெளி.

அமரா நாற்காலிகள்
வெற்று இருக்கைகள் அல்ல.
முன்பு அமர்ந்தவர்களின் உடற்சூடு
அதில் இன்னும் இருக்கிறது.
அவர்களின் வியர்வை கலந்த வாசம்
இன்னும் அதில் வீசுகிறது.

உண்மையில்
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.

**************************

நுகரும் இந்த மூச்சிலே
நூறு நூறு சக்திகள்
கண்ணை மூடும் போதிலே
எல்லை இல்லாக் காட்சிகள்!

வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது.

சொற்களுக்கு இடையில்
கவிதை சிரிக்கிறது.

இருளுக்குள் மர்மம் நீடிக்கிறது.

மவுனத்தில் மட்டுமே
முழுமை இருக்கிறது.

ஆம்,
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.

==================================================
(11.12.2009 பாரதியார் பிறந்த நாள் அன்று சென்னை பாரதி நினைவு இல்லத்தில் அமர்ந்து, கவியரங்கில் பங்கேற்குமாறு வானவில் பண்பாட்டு மையம் விடுத்த அழைப்பை ஏற்று, உடனே எழுதியது)

Wednesday, February 25, 2009

தூக்கக் கணக்கு (சிறுவர் பாடல்)

இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன்
இழுத்துப் போர்வை போர்த்துகிறேன்
அன்பே அழகே ஆருயிரே
அதற்குள் என்னை எழுப்பாதே!

உளறி அலறுது கடிகாரம் - அதன்
உச்சந் தலையில் குட்டுவை
வெளிச்ச வெள்ளம் பாய்கிறது - அதை
வெளியே தள்ளிக் கதவைஅடை!

வேலை ஒருபுறம் இருக்கட்டும் - பிறகு
வேக வேகமாய் முடித்திடுவேன்
வேலை முடியா விட்டாலும்
வேண்டிய காரணம் சொல்லிடுவேன்.

இப்போ தைக்கு என்னைவிடு
இன்னும் கொஞ்சம் தூங்கவிடு
சொப்பனம் கெடுக்க வாராதே - என்
சொத்தை உனக்கே எழுதுகிறேன்!

இப்படிச் சொன்னவர் இன்றில்லை
இருட்டில் கரைந்து போய்விட்டார்!
அப்புறம் என்று சொன்னவரை
அப்புறம் எங்குமே காணவில்லை!

அளவு கடந்தால் போதையிது
ஆளை விழுங்கும் பெருந்தீது
களவுத் தூக்கம் வேண்டாமே
கணக்காய்த் தூங்கக் கற்போமே!

உதய நாழிகை உற்சாகம்
உள்ளம் மலரும் உயிர்வளரும்
முதிய கதிரை முந்தியெழு
மொத்த மாகக் கொண்டாடு!

Thursday, October 16, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 6



நாவால் இதழைத் துடைக்கிறாய்
நகத்தை மெல்ல கடிக்கிறாய்
பூவாய் இதயம் துடிக்கிறாய்
புன்னகை விருந்து படைக்கிறாய்.

=======================

இருகரம் தூக்கி
சேலையைப் பிடித்து
சிறுமழைக்கு அஞ்சி
குறுநடை பயின்றாய்.
மயில் அங்கே தோற்றது.

=======================

ரேகை இல்லாத உள்ளங்கை
தோகை இல்லாத ஆண்மயில்.
வெண்ணிலா இல்லாத வான்.
நீ இல்லாத நான்.

=======================

வாய் திறவாமல் கொட்டாவி விடவும்
சத்தம் வராமல் தும்மவும்
யாரும் அறியாமல் வாயு பிரிக்கவும்
முயல்கிறார்கள்.
ஐயோ பாவம் நாகரிகம்!

=======================

பருவத்தே பயிர் செய்.
இப்படிக்கு,
பயிர் செய்யாதவன்.

=======================