அண்ணாகண்ணன் கவிதைகள்: தத்துவம்
Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Saturday, January 01, 2011

அம்மே அம்மே இது நற்காலமே


அம்மே அம்மே இது நற்காலமே
ஆமே ஆமே இனி உற்சாகமே

மனமே காதலில் பண்படுமே
மானுடம் அன்பினில் மேம்படுமே
திருமிகுமே தீபம் தென்படுமே
திக்குகள் உன்னைக் கும்பிடுமே

எட்டத்தில் இருப்பவை கிட்டத்தில் வரட்டுமே
நட்டத்தில் இருப்பவர் லாபத்தைப் பெறட்டுமே
வட்டத்தில் இருப்பவர் வானத்தில் எழட்டுமே
கட்டத்தைக் கடக்கவே திட்டத்தை தருகவே.

ஒட்டாத நெஞ்சமும் ஒட்டிவர வேண்டுமே
விட்டாடும் யாவுமே தொட்டாட வேண்டுமே.
மொட்டாகப் புன்னகை கட்டாயம் வேண்டுமே
சிட்டாக வானிலே சென்றாட வேண்டுமே.

பட்டமரம் பூக்குமே பாறையும் சுரக்குமே
வெட்டவெளி எங்குமொளி வெள்ளமெனப் பாயுமே
நட்டநடு நெற்றியிலே நட்சத்திரம் தோன்றுமே
விட்டகுறை தொட்டகுறை இட்டுநிறைவாகுமே.

வேட்டைக்குப் போகலாம் வீரத்தைக் காட்டலாம்
மேட்டையும் பள்ளத்தையும் மிதமாய் இணைக்கலாம்
கோட்டைக் கடந்துவந்தால் கோட்டையைப் பிடிக்கலாம்
பாட்டைப் படித்துக்கொண்டே படைகளை நடத்தலாம்.

ஆட்டத்தைத் தொடங்குவோம் ஆழத்தில் இறங்குவோம்
கூட்டத்தைக் கூட்டுவோம் கொட்டத்தை அடக்குவோம்
வாட்டத்தைப் போக்குவோம் வாழ்க்கையை வாழுவோம்
நாட்டுக்குள் நன்மையை நாட்டுவோம் நாட்டுவோம்.

==========================
அம்மே அம்மே இது நற்காலமே - http://www.vallamai.com/?p=1572

Friday, December 11, 2009

ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை

கரும்பலகையைத் துடைத்தபின் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
மாணவர்கள் கூறினர்: 'ஒன்றுமில்லை'.

கவிழ்த்த புட்டியைக் காட்டிக் கேட்டேன்.
'இதில் என்ன இருக்கிறது?'
பார்த்தோர் அனைவரும் பட்டெனக் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

வெள்ளைத் தாளைச் சுட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
கல்வியில் சிறந்தோர் எல்லோரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

அமரா இருக்கையைக் காட்டிக் கேட்டேன்
'இதில் என்ன இருக்கிறது?'
சற்றுமுன் அதில் அமர்ந்தவர் உள்பட
அனைவரும் கூறினர்:
'ஒன்றுமில்லை'.

**************************

எழுதிய பலகையில்
சில எழுத்துகளே உண்டு.
எழுதாப் பலகையில்தான்
எல்லாம் உண்டு.

நிறைத்த புட்டியில்
கொஞ்சமே உண்டு
கவிழ்த்த புட்டியில்
காற்றும் உண்டு.

அச்சிட்ட காகிதத்தில்
எழுத்துகள் சிறைப்பட்டுள்ளன.
அவற்றால் இனி எங்கும் தப்பி ஓட இயலாது.
வெள்ளைக் காகிதத்தில்
காத்திருக்கிறது ஒரு சுதந்திர வெளி.

அமரா நாற்காலிகள்
வெற்று இருக்கைகள் அல்ல.
முன்பு அமர்ந்தவர்களின் உடற்சூடு
அதில் இன்னும் இருக்கிறது.
அவர்களின் வியர்வை கலந்த வாசம்
இன்னும் அதில் வீசுகிறது.

உண்மையில்
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.

**************************

நுகரும் இந்த மூச்சிலே
நூறு நூறு சக்திகள்
கண்ணை மூடும் போதிலே
எல்லை இல்லாக் காட்சிகள்!

வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது.

சொற்களுக்கு இடையில்
கவிதை சிரிக்கிறது.

இருளுக்குள் மர்மம் நீடிக்கிறது.

மவுனத்தில் மட்டுமே
முழுமை இருக்கிறது.

ஆம்,
ஒன்றுமில்லை என ஒன்றுமில்லை.

==================================================
(11.12.2009 பாரதியார் பிறந்த நாள் அன்று சென்னை பாரதி நினைவு இல்லத்தில் அமர்ந்து, கவியரங்கில் பங்கேற்குமாறு வானவில் பண்பாட்டு மையம் விடுத்த அழைப்பை ஏற்று, உடனே எழுதியது)