அண்ணாகண்ணன் கவிதைகள்: இனிது கோடை

Sunday, May 30, 2010

இனிது கோடை



சமிக்ஞை விளக்கில் நொடிகள் நகர
உமிழும் புகைக்குள் அமிழும் நகரம்.
தேசிய வீதியி்ல் வண்டிகள் பறக்க
தூசி மண்டலம் அடங்குவதி்ல்லை.
தலைக்கு மேலே வெய்யி்ல வெள்ளம்
உலைப்பெரு மூச்சில் நிழலும் கருகும்.
ஆயிரம் கண்களில் வியர்வைக் கண்ணீர்
வாயது கேட்கும் சொட்டுத் தண்ணீர்.

குளிரூட்டிகளோ உறுமுகி்ன்றன
வெளியே வெம்மை ஏறுகின்றது.
சாலைகள் சற்றே அகலம் ஆகின
சோலைகள் ஆயிரம் சுவடு அழி்ந்தன.
நிழலி்ல்லாத நெடிய வீதிகள்
சுழலும் காற்றில் சுடுசாபங்கள்.
பறவைகள் தொலைந்த பட்டணத்திலே
உறவுகள் தொடரும் கட்டணத்திலே.

நன்னீர் விலையை வணிகர் சொன்னார்
தண்ணீர் குடிக்க மனம் வரவி்ல்லை.
தேநீர்க் கடையிலோ அழுக்குத் தண்ணீர்.
சிறுநீர் ஏனோ மஞ்சள் நிறத்தில்.
நிலத்தடி நீரோ கீழே விரைய
நிலத்தின் மேலே எரிமலை பொரியும்.
தெருவில் தீமிதி தினம்தினம் நிகழும்
இருந்தும் எமது நெஞ்சுரம் வளரும்.

தகிக்கும் மணலில் சுகிக்கும் காதலர்
புடைவையில் சேயைப் பொத்தும் தாயர்
காகா என்றே அழைக்கும் கனியோர்
செடிக்கும் நீரை வார்க்கும் இனியோர்
கண்ணீர் துடைக்கும் நல்லோர் வல்லோர்
வண்ணச் சிரிப்புடன் வாஞ்சை வளர்ப்போர்
இன்னும் இன்னும் இருப்பதனாலே
இனிது கோடை! கொளுத்துக பகலே!

============================================

(30.05.2010 தேதியிட்ட கல்கி வார இதழில்  இந்தப் படைப்பு வெளியானது. கவிதை கேட்டுப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ் மணவாளன், கல்கி உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா, ஆசிரியர் சீதா ரவி, அழகுற ஓவியம் வரைந்த அனந்த பத்மநாபன் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்)

9 comments:

பழமைபேசி said...

சொல்லாடலை இரசித்தேன்!

ஏ.சுகுமாரன் said...

நல்லோர் இருப்பின் மழைதான் வருமேன்பர் ,
வெய்யிலும் நல்லதே ,
இனிது கோடை! கொளுத்துக பகலே!
என்ற தங்கள் உரையும் இனிதே !
வெய்யில் கொடிதென்றால் கொளுத்தாமலா போகும்
இனிதென்றுதான் வாழ்த்தி வைப்போமே !
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

annaiyinarul said...

அன்பு கண்ணன் இயற்கை தவறாமல் தன் தன் வேலையைச்செய்கிறது ஆனால் மனிதன் இயற்கையிலும் மூக்கை நுழைத்து அதன் சீற்றத்திற்கு ஆளாகுகிறான் இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளம் இருக்க கோடையைப்பயமில்லாமல் வரவேற்போம் அருமையான கவிதை

v.dotthathri said...

ஓம்.
நல்ல பதிவு.
வெயிலில் குழந்தைகள் வளர்கின்றார்கள் என்று விஞ்ஞானம் சொல்வதாகக் காம்ப்ளான் விளம்பரம் கூறுகின்றது.
இயற்கையின் கொடை புரிதலைப் பொறுத்தே பயன் தருகின்றது.
ஒரே பூமி அறுசுவையையும்,உணவையும் நீரையும் ஆபரணங்களையும் ,எரி பொருளையும், உயிர்காத்தலையும், பூகம்பத்தையும் உள்ளடக்கி , பொறுமையையும் போதிக்கிறது.எதையும் தாங்குகின்றது.
ஓம்.
வெ.சுப்பிரமணியன்

முனைவர் அண்ணாகண்ணன் said...

'இனிது கோடை' என்ற கவிதையை, அன்பு நண்பர் அப்துல் ஜப்பார், http://worldtamilnews.com என்ற தளத்தில் தம் குரலில் வழங்கியுள்ளார். 'கவிதை கேளுங்கள்' என்ற தலைப்பினைச் சொடுக்கிக் கேட்டு மகிழுங்கள்.

sen said...

அன்பு அண்ணனுக்கு,

இனிது கோடை படித்தேன்.
மிகவும் அருமை...
"காலங்கள் இன்றே மாறுக...
என் அண்ணனின் கவித்துவம் காணுக!!!"

காலங்களுடன் சேர்ந்து
காத்திருக்கிறேன் நானும்.:-)

Ganesh said...

கோடை இன்றேல் வசந்தத்தின் வசீகரம் புரியாமலே போயிருக்கும்.

கோடையில் நம் உடலின் வியர்வை மழை இன்றேல் நாம் மாரிக் காலத்தை ரசித்து இருக்க முடியாது.

கோடையை உமது கவிதை வாயிலாக ரசிக்க எமக்கு வாய்ப்பு அளித்த நண்பருக்கு நன்றி.


வாழ்த்துக்களுடன்

கேப்டன் கணேஷ், கோவை.

அன்புடன் மலிக்கா said...

மிக அழகான சொல்லாடல். கவிதை அருமை..

http://niroodai.blogspot.com/

manimuthu .s said...

kavathil searapu

manimuthu.s
Dubai

http//tamil-mani-osai.blogspot.com